Monday, May 25, 2020

ஆலய வழிபாடு முறைகள் மற்றும் ஆலய வழிபாடு செய்ய விதிமுறைகள்.



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஆலய வழிபாட்டு விதிமுறைகள் பற்றியதாகும். ஒருவர் முதலிலே ஆலய கோபுரத்தை பார்த்து வழிபட்ட பிறகுதான் ஆலயத்திற்கு உள்ளே செல்ல வேண்டும்.

ஆலயங்களுக்குச் செல்லும் போது, குளித்து, தூய ஆடை அணிந்து சுத்தமாகச் செல்ல வேண்டும். பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, சூடம், பத்தி, விளக்கேற்றத் தேவையான எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆலயத்திற்குள் சென்றபிறகு ஒருவர் மற்றவரை வணங்குதலோ ஒருவர் மற்றவருக்கு விபூதி இடுவதோ கூடாது.

மூல விக்கிரகத்திற்கு திரையிட்டிருக்கும் பொழுது வணங்குதல் கூடாது. மூலவரை அனைவரும் தரிசிக்கும்படி ஒதுங்கி நின்று தரிசிக்க வேண்டும். சிலைகளை தொட்டு வணங்கவோ, சிலைகளின் பாதங்களில் சூடம் ஏற்றவோ கூடாது. உற்சவர் பவனி வரும் பொழுது உடன் செல்ல வேண்டும்.

ஆலயத்திற்குள் வீண் பேச்சு பேசக்கூடாது.சப்தமாக பேசுவதோ, உரக்கச் சிரிப்பதோ ஆலயத்தினுள் செய்யக்கூடாது.

ஆலயத்தினுள் அழக்கூடாது.

சிவ ஆலயங்களில் சிவனை முதலில் வணங்கிவிட்டு, பிறகு, உமாதேவியை வழிபடுவதும், வைணவ ஆலயங்களில் ஸ்ரீதாயாரை முதலில் வணங்கிவிட்டு பெருமாளை வணங்குவதும் சிறப்பு,ஆலயங்களில் பிரகாரங்களை சுற்றி வந்து வழிபாட்டை முடித்த பிறகே இறுதியில் நவக்கிரகங்களையும், ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும்.

அவ்வாறு வணங்கி சில நிமிடங்களாவது அங்கு அமர்ந்து விட்டு பிறகுதான் புறப்பட வேண்டும்.

ஆலயத்தில் விபூதி வாங்கும் பொழுது வலது கையின் கீழ் இடது கையை சேர்த்து விபூதி வாங்கி அப்படியே நெற்றியில் தரிப்பது நலம். அப்படி இல்லாமல் ஒரு தாளில் விபூதியை விட்டு அதிலிருந்து எடுத்து தரிக்கலாம். ஆலயத்தின் வாசலிலே உள்ள பிச்சைக்காரர்களுக்கு நாம் ஆலயத்தின் உள் செல்லும் பொழுது தர்மம் செய்யலாம், ஆனால் வெளியேறும் பொழுது தர்மம் செய்தால் தரிசன பலனை அவர்களுக்கு தாரை வார்த்தது போலாகும்.

சிவ ஆலயங்களில் ஒன்று பிரதட்சணங்கள், விஷ்ணு ஆலயங்களில் நான்கு பிரதட்சணங்கள், விநாயகர் ஆலயத்திலே ஒரே பிரதட்சணம் செய்ய வேண்டும். நவக்கிரகங்களை ஒன்பது பிரதட்சணை செய்ய வேண்டும்.

அம்பிகையை தரிசிக்க செவ்வாய், வெள்ளிக்கிழமையும், அபிராமியம்மனை தரிசிக்க வெள்ளி இரவும், துர்க்கை அம்மனை தரிசிக்க ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ராகு காலங்களிலும், காளியை அஷ்டமியிலும் வணங்குவது நல்லது.

சண்டிகேசவர் சன்னிதியிலே

தியானத்தில் இருக்கும் சண்டிகேசவரின் முன் நின்று கைதட்டாமல் அமைதியுடன் சிவ வழிபாடு அமைந்ததை தெரிவிக்க வேண்டும். சிவனுடைய பூத கணங்கள் நம்முடன் வராமல் இருக்க, சிவன் சொத்து குல நாசம் என்பதற்கிணங்க சிவன் கோயிலில் உள்ள தூசைக்கூட நம் மீது ஓட்ட விடக்கூடாது, சிவன் கோவில் சற்று அமர்ந்து விட்டு வர வேண்டும்,

விஷ்ணு கோயில்களில் லக்ஷ்மி நம்முடன் வீட்டுக்கு வந்து அதிர்ஷ்டத்தைப் பொங்க, விஷ்ணு கோயில்களில் தரிசனம் செய்த பிறகு அங்கு அமர்ந்து விட்டு வரக்கூடாது, ஆலயத்தில் கொடிக்கம்பம் அல்லது பலிபீடத்திற்கு முன்னால் வடக்கு நோக்கி தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

திருக்கோயில்களில் அபிஷேகம்' அல்லது 'திருமஞ்சன தீர்த்தம்" வாங்கிக் கொள்ளும் பொழுது இடது கையின் மேல், சிறு வஸ்திரம் வைத்து அதன்மேல் வலது உள்ளங்கையை குவித்து அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்கோயில்களுக்குச் செல்லும்பொழுது கைலி அணிந்து செல்லக்கூடாது, எக்காரணம் கொண்டும் ஈரத்துணி உடுத்தி சிவனுடைய ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது என்பதை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு அந்த இறை வழிபாட்டின் பலன்கள் கண்டிப்பாக வந்து சேரும்.

இதுதான் நாம் ஆலயத்திற்கு சென்று வணங்கும்பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாகும். அவற்றை நன்முறையில் பின்பற்றி இறைவனின் திருவருள் பெற வேண்டுமென்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment