அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, செய்வினை பாதிப்பு நீங்க மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.
நம் ஜனன ஜாதகத்தை எடுத்து நாம் ஆராய்ச்சி செய்யும் பொழுது மனிதனுக்கு பாம்புகள் உடைய தசைகள் எப்பொழுது நடப்பில் இருக்கின்றது, அதாவது ராகு அல்லது கேதுவினுடைய தசைகள் நடப்பில் இருக்கும்பொழுது, இந்த தசை காலகட்டத்திலேதான் ஏராளமானவர்கள் செய்வினையால் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும், ஒருவருடைய லக்கனத்திலிருந்து 6வது தசை அல்லது 8வது தசை அல்லது 12 வது தசை நடப்பில் இருக்கும்பொழுது அவர்கள் செய்வினையால்
பாதிக்கப்படுகின்றார்கள்.
ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பது அவனின் சக மனிதர்களுக்கு பொறாமையும், கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கும் அவன் மகிழ்ச்சி சற்று எரிச்சலாக இருந்து அவர்களுக்கு கேடு விளைவிக்க பண ஆசை பிடித்த மோசமான மந்திரவாதிகளை நாடி அவர்கள் அம்மனிதனின் மகிழ்ச்சியையும், அவனது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் கருப்பு மாந்த்ரீகத்தால் சின்னாபின்னமாக்கி விடுகின்றார்கள் என்றால் அது மிகப்பெரிய அவலமாகும்.
அப்போது மந்திரம் செய்பவர் கேட்கும் கேள்வி செய்வினை செய்யப்பட வேண்டியவரின் ஜாதக அமைப்பு உள்ளதா என்பதேயாகும். அதனை அறிந்த பின்பு அவர்களின் தசையைக் கணக்கிட்டு, இது சூன்யம் வைப்பதற்கான பொருத்தமான நேரம்தான் என்று இவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மட்டமான அந்த வேலையைச் செய்து பாவ மூட்டைகளைச் சுமப்பதற்கு அவர்கள் தயாராகிறார்கள் என்றால், பணம் பத்தும் செய்யும் என்ற கூற்று உண்மைதானே.
ஏனென்றால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் சொத்தை அபகரிக்க, அவன் பதவியை பறிக்க, அவன் தொழிலை முடக்க மோசமான மந்திரவாதிகளை நாடி அவன் அந்த ஆபத்தை சக மனிதருக்கு உருவாக்கும் பொழுது, அவர்கள் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் ஜாதக அமைப்பும் ஒருவகையில் காரணமாகி வருகிறது.
அதாவது அவர்களுக்கு ராகு தசை ஓடிக்கொண்டிருக்கும் அல்லது கேது தசை ஓடிக்கொண்டிருக்கும் அல்லது 6,8,12 தசை ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இப்படிப்பட்ட அந்த செய்வினை அவர்களைத் தாக்கும், நோயை ஏற்படுத்தும், அவர்கள் அவஸ்தைக்குள்ளாக்கும், அநாதையாக்கும்
அப்படிப்பட்டவர்களெல்லாம் அதிலிருந்து விடுதலையடைய பொள்ளாச்சியின் தென் மேற்கிலுள்ள 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆனைமலையிலே சேத்துமடை சாலை நுழைவாயிலிலே உப்பாற்றணி வடகரையிலே மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
பில்லி, சூனியம், மந்திரம், ஏவல் போன்ற பெரும் பகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பொருள் திருடு போனவர்களுக்கும் மிளகாய் அரைத்து இக்கோயிலிலே உள்ள கல்லிலே பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று வேண்டி கொள்ள கைமேல் பலன் கிடைக்கும்.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கூறுவது போல, தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகைய அருள் பாலிக்கும் மாசாணி அம்மனை வணங்கி அன்பர்கள் அருள் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment