உலகத்தில் உள்ள இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?
....
வருவது என்பதன் பொருள் என்ன என்பது தான் இதற்கு விடை.
சூன்யத்திலிருந்து ஏதாவது ஒன்றை உண்டாக்க முடியும் என்பது இதன் பொருளானால், இது முடியாத காரியம், இந்தப் படைப்பை, இந்த வெளிப் பாட்டை சூன்யத்திலிருந்து தோற்று வித்திருக்க முடியாது. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் தோன்றாது.
-
இதோ ஒரு கண்ணாடி இருக்கிறது, இதைத் துண்டுதுண்டாக உடைத்து, பொடியாக்கி, ரசாயணப் பொருட்களின் உதவியால் ஏறக் குறைய அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அது சூன்யமாகி விடுமா?
கண்டிப்பாக இல்லை. முன்பிருந்த உருவம் போய்விடும்.என்றாலும் அந்தப் பொருளின் துகள்கள் இருக்கவே இருக்கும். இந்தத் துகள்கள் ஒரு வேளை நாம் புலன்களால் அறிய முடியாத அளவுக்கு நுட்பமாகி விடலாம். என்றாலும் அவை இருக்கத் தான் செய்கின்றன. இருக்கும் அந்த அணுக்களைக் கொண்டு வேறொரு கண்ணாடியை ஒரு வேளை செய்யவும் முடியலாம். ஒரு பொருளின் விஷயத்தில் இது உண்மையானால், எல்லாவற்றின் விஷயத்திலும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.
-
சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது. அதுபோல் இருக்கும் எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது. அது மிக மிக நுட்பமாக மாறலாம். மீண்டும் தூலப் பொருளாகவும் மாறலாம்.
-
கடல் நீர் நீராவியாகி மேலே சென்று மழைத் துளியாகிறது. அது காற்றின் வழியாக மிதந்து மலையை நோக்கிச் செல்கிறது. பிறகு நீராக மாறி, பூமிக்கு வந்து, பல நூறு மைல் ஓடிச் சென்று மீண்டும் தாய்க் கடலை அடைகிறது. விதை மரத்தை உண்டுபண்ணுகிறது. பின்னர் விதையை விட்டு விட்டு மரம் அழிகிறது. இந்த விதை திரும்ப மரமாகிறது. மறுபடியும் விதை உண்டாகிறது. இப்படியே இந்த வட்டம் சுழல்கிறது.
-
எல்லாமே சில விதைகள், சில கருத்துக்கள், சில நுட்பமான அணுக்கள் இவற்றில் தொடங்குவது போலுள்ளது. பின்னர் பருமை பெற்று வளர்கிறது.மறுபடியும் படிப்படியாக நுண்மை பெற்றுப் பழைய கருஉருவில் ஒடுங்கி விடுகின்றன. பிரபஞ்சம் முழுவதும் இப்படியே தான் நடைபெறுகிறது.
-
இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே உருகுவது போல், படிப்படியாகக் கரைந்து, நுட்பத்தன்மை பெற்று, முடிவில் முற்றிலும் மறைந்தே விடுகின்ற ஒரு காலம் வருகிறது. ஆனால் அப்போதும் அது மிக மிக நுட்பமான ஜடப் பொருளாக இருக்கவே செய்கிறது.
-
இந்தப் பூமி குளிர்ந்து கொண்டே வருகிறது. நாளா வட்டத்தில் இது மிகக் குளிர்ந்துவிடும். பிறகு இது துண்டு துண்டாக உடைந்து, தூள் தூளாகி, நுட்பமாகி அதி நுட்பமாகி மீண்டும் ஆகாசமாகி விடும் என்று நவீன விஞ்ஞானமும் வான இயலும் கூறுகின்றன என்றாலும் இந்த நுட்பமான அணுக்கள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. இந்த அணுக்கள் சேர்ந்து உண்டாகின்ற பொருளிலிருந்தே மீண்டும் பிரபஞ்சம் வெளிப் படுகிறது. அது மீண்டும் மறையும். மீண்டும் வேறொன்று வெளிப் படும்.
-
உருவம் அழிவதும், திரும்ப மேலெழுந்து உருவம் பெறுவதும் போல் ஓயாமல் நடந்து கொண்டே இருக்கும். காரியம் காரணம் ஆவதையும், மீண்டும் காரணம் காரியம் ஆவதையும் வடமொழியில் ஸ்ங்கோசம் ( சுருங்குதல்), விகாஸம்( விரிதல்) என்பர்.
-
பிரபஞ்சம் முழுவதுமே ஆகாச நிலைக்குச் சுருங்குகிறது. பிறகு பழைய நிலைக்கு விரிகிறது. இக்கால விஞ்ஞான மொழியில் சொல்வதானால், பிரபஞ்சம் ஒடுங்குகிறது. பின்னர் பரிணமிக்கிறது,
-
தாழ்ந்த நிலை உயிர்கள் மெதுவாக படிப்படியாக வளர்ந்து உயர்நிலை உயிராவதே பரிமாணம் என்று நாம் கேள்விப் படுகிறோம். இது உண்மை தான். ஆனால் இத்தகைய பரிணாமம் ஒவ்வொன்றிற்கு முன்னரும் ஓர் ஒடுக்கம் இருக்கவே செய்தது.
-
அதேபோல உலகிலுள்ள சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்று தான் .
சக்தியின் மிகக் குறைந்த அளவைக் கூட நம்மால் அழிக்கவும் முடியாது. கூட்டவும் முடியாது. சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒரு போலவே இருக்கும்.
ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சக்தியை அழிக்க முடியாது.
-
இந்தப் பிரபஞ்சம் முன்னால் ஒடுங்கிய பிரபஞ்சத்தின் பரிணாம விரிவே. மீண்டும் இது நுட்பமாகி, மிக நுட்பமாகி ஒடுங்கிவிடும். அதிலிருந்து மீண்டும் புதிய யுகம் தோன்றும். பிரபஞ்சமே இப்படித்தான் நடை பெறுகிறது.
-
சூன்யத்திலிருந்து ஏதோ ஒன்று படைக்கப் பட்டது என்ற பொருளில் படைப்பு என்பது எதுவுமே ஏற்படவில்லை என்பதைக் காண்கிறோம். படைப்பு என்பதை விட வெளிப் பாடு என்பது தான் தகுந்த சொல்லாக இருக்கும். பிரபஞ்சம் என்பது வெளிப்பாடு. அதை வெளிப்படுத்தியவர் இறைவன். பிரபஞ்சம் அவர் மூச்சின் வழியே வெளி வருவது போல் உள்ளது. திரும்பவும் அது அவருள்ளேயே ஒடுங்குகிறது. திரும்பவும் அவர் அதை வெளிப் படுத்துகிறார்.
-
வேதங்களில் அழகான உவமையால் இதனை விளக்கி யிருக்கிறார்கள் . எல்லையற்றவனாகிய இறைவன் பிரபஞ்சத்தை மூச்சாக வெளி விடுகிறான். திரும்பவும் மூச்சாக அதை உள்ளே இழுத்துக் கொள்கிறான். நாம் ஒரு சிறு தூசியை நம் மூச்சால் உள்ளே இழுத்து வெளியே விடுவது போன்றது இது.
-
இதெல்லாம் சரி தான். ஆனால், முதன் முதலாக ப் படைப்பு எப்படி எங்கே இருந்தது? என்ற கேள்வி எழலாம்.
முதலில் என்பதன் பொருள் என்ன, என்பது தான் பதில்.
முதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.
காலத்திற்கு ஒரு தொடக்கத்தைக் குறிப்பிட்டால், காலம் என்ற கருத்தே அழிந்து விடும்,
காலம் தொடங்கிய எல்லை ஒன்றை நிறுவ முயலும் போது, அந்த எல்லைக்கும் அப்பால் உள்ள காலத்தை நினைத்தாக வேண்டும். அதே போல் இடம் தொடங்கிய எல்லையை நினைக்க எண்ணினால், அந்த எல்லைக்கும் அப்பால் உள்ள இடத்தை நினைக்க வேண்டும். காலமும் இடமும் எல்லையற்றவை.
எனவே இவற்றிற்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை.
-
இறைவன் ஐந்தே நிமிடத்தில் பிரபஞ்சத்தைப் படைத்து முடித்து விட்டுப் பிறகு உறங்கப் போய்விட்டார். அப்போது முதல் உறங்கிக்கொண்டே இருக்கிறார் என்ற கருத்து தவறானது. அலைகள் தொடர்ச்சியாக எழுவதும் விழுவதுமாக உள்ளன. இறைவன் முடிவற்ற இந்த நிகழ்ச்சியை இயக்கி வருகிறார்.
எப்படிப் பிரபஞ்சத்திற்குத் தொடக்கமும் முடிவும் இல்லையோ, அப்படியே இறைவனும் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
-
தூல உருவிலோ நுண்ணுருவிலோ பிரபஞ்சப் படைப்பு இல்லாத காலம் ஒன்று உண்டு என்று நாம் சொன்னால், அப்போது கடவுளும் இல்லை என்று ஆகிவிடும். ஏனெனில் கடவுளை நாம் பிரபஞ்ச சாட்சி என்றல்லவா சொல்கிறோம்?
-
பிரபஞ்சம் எப்படி முடிவற்றதோ, அப்படியே இறைவனும் முடிவற்றவர் .
-
-
No comments:
Post a Comment