ஓம்
சிவசிவ :
" நெஞ்சகம் நைந்து " ?
~~~|||~~~
இறைவன் மீது எனக்கு , காதல் ஏற்பட வேண்டும் ; அவரை இடையறாது நினைந்து எனக்குக் கண்ணீர் கசிய வேண்டும். எப்படி நிகழும் ?
கல்லை மென் கனியாக்கும் வித்தையைக் கற்க வேண்டும்.
ஒருவரைப் பற்றி எதுவும் அறியாது , எப்படி அவர் மீது ஈர்ப்பு ஏற்படும் ? ; காதலாக மாறும் ? எப்படி எதனால் மன உருக்கம் வரும் ?
இவையெல்லாம் அனுபவப் பட்ட பிறகுதானே நெஞ்சகம் நையும் ?
சும்மா நூறு முறை பொருளறியாது முற்றோதல் செய்தேன் , கோயிலுக்குப் போய் கும்பிடுகிறேன்; அஞ்செழுத்து ஓதுகிறேன் ; முழு நீறு பூசுகிறேன் ; எனக்குத் துன்பங்களும் துயரங்களும் தொடர்கின்றன !
நான் எப்படித்தான் இறையன்புக்கு ஆளாவேன் ?
இவையெல்லாம் இறைவன் மீது இயல்பான அன்பு கொள்ளாமல் , தன் நலன் ஒன்றே கருதி வழிபாடு செய்தல் என்றே முடிகிறது , மேலும் தேச , குல , சாதி , இனம் ,மொழி பேதங்களை வளர்த்து வரும் சுய நலமிகளின் பிடியில் பலர் மாட்டிக் கொள்வதும் உண்டு.
இவை எல்லாவற்றையும் கடந்தவர் இறைவன் என்ற அறிவு எங்கே போயிற்று ?
நான் என்ன தான் செய்ய வேண்டும் ?
நீ இது வரை செய்து வரும் வழிபாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள் !
*பேதங்களை வளர்த்துக் குழியில் விழப் போகும் குருடர்களை , குருவாகவோ , வழி காட்டிகளாகவோ , எண்ணி நட்பு பூண்டிருந்தால் உடன் விலகி வா ?* திருவைந்தெழுத்தின் பொருளையும் , திரு நீறு பூசுவதால் உண்டாகும் நன்மைகளையும் தக்கார் பால் விரித்துரைக்கக் கேள்.
*திருவாசகமோ , திருமுறைகளோ முற்றோதல் செய்யும் குழுவில் சேரும் முன் பொருளைத் தக்கார் பால் கேட்டு உணர்ந்த* பிறகே கலந்து
கொள்*
பொருளறியாது பத்தாயிரம் முறை ஓதினாலும் பயனில்லை !
உருத்திராக்கப் பெருமை அறிந்துக் காப்பு கொள் ; திருத் தொண்டத் தொகையை முழுதும் இசைத்துப் பாடக் கற்றுக் கொள் ; இறைவனைப் பற்றிய ஞானச் செய்திகளை அறிவதில் வேட்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.; நம்மால் விருப்பம் செலுத்தப்பட்டவரைப் பற்றி நுண்மையாகப் புரிந்து கொள்ளும் வேட்கைக்கு ஓப்ப !
ஏதும் அறியாத ஒன்றின் மீது எப்படி அன்பு வரும் ? ; காதல் வரும் ?; வேட்கை வரும் ? நெஞ்சகம் நைவது எவ்வாறு ? கண்ணீர் கசிவது எங்கே ?
*இந்த வாழ்வு இறைவன் போட்ட பிச்சை ; அதோடு அல்லாது நொடித் துகள் அளவும் அகலாது என் உயிருக்கு உயிராக என்னை இயக்குவதும் அவரே என்பதையும் ஐயம் திரிபு அற உணர்ந்தாலன்றி , எப்படிக் கண்ணீர் வரும் ?*
ஞான நாட்டம் வேண்டும் ; தேடித் தேடிக் கற்க வேண்டும். ;
கற்றக் கற்க , கற்றுணரவே இறைவனாரது பெருங் கருணையைப் பற்றிய ஞானம் முகிழ்க்கும் ;
கல் மனம் உருகும் ; கசியும் ; நெஞ்சகம் நையும் ! இறைவனைக் கற்க வேண்டும்.' *கற்றல் கேட்டல் உடையார் பெரியார்* ""*என்பது திரு ஞான சம்பந்தர் வாக்கு !
இந்த நிலை உறுதியாகி விட்டால் , இறைவனே வந்து ஈர்த்து ஆட் கொண்டு விடுவார் !
*திரு வேடங்களணிந்த , தேச ,சாதி , குல ,இன, மொழி பேத உணர்வாளர்களைக் கண்டால் , ஆலகால விடத்தைக் கண்டது போல் அஞ்சி அகன்று ஓடி விடு !*
எங்கே ஓடுவது ?
சிவாலயத்துக்குள் அல்லது இல்ல பூசை அறைக்குள் !
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment