Tuesday, July 7, 2020

முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் சுருக்கமான குறிப்பு

#அருணகிரிநாதர்!

திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர்.

முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால், முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும், முருகப் பெருமான் மேல் பக்தி செலுத்தும் ஓர் ஆண்மகவு வேண்டும் என்று நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.முத்து செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளுக்கு அருள வேண்டும் என முருகன் திருவுள்ளம் கொண்டான். மூத்தபெண் ஆதிக்கு நான்கு  வயதாக இருக்கும் போது முத்துக்கு இரண்டாவது குழந்தையாக அருணகிரி என்ற ஆண்குழந்தையை ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண்குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்து. அந்தக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டிப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பதில் அவள் செய்த அமர்க்களங்கள் திருவண்ணாமலையையே குலுங்கச் செய்தன. அப்படியொரு பாசம் தன் பிள்ளை மேல் அவளுக்கு.  குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் காசியாத்திரை கிளம்பினார் திருவெண்காடர்.  யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. அத்துடன் விரைவிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டாள் முத்தம்மை. எனவே  முத்தம்மைக்கு ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை.  இந்த நிலையில் முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். ஒருநாள் தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்துகொண்ட அவள் தன் மகள் ஆதியை அன்போடு அழைத்தாள்: மகளே! எந்த வேளையில் உனக்கு ஆதி என்று பெயர் வைத்தேனோ? ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது அம்மா! நான் சேர்த்துவைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் என்ன? நான் இறந்தாலும் வானிலிருந்து அவன் வளர்ச்சியையும் பக்தியையும் பார்த்து மகிழவே செய்வேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறிய முத்தம்மை, அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதியின் கரத்தில் வைத்தாள். முத்துவின் விழிகளிலிருந்து முத்து முத்தாய்க் கண்ணீர் வழிந்தது. ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள்.

மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே, நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன்! என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் முருகன். முத்துவின் முகத்தில் அவளது முத்துப் பற்கள் தெரிய ஒரு மோகனப் புன்னகை மலர்ந்தது. அழிவே இல்லாமல் அந்தப் புன்னகை முகத்தில் உறைய முத்து முக்தியடைந்தாள்.

சின்னஞ்சிறு வயதிலேயே தாய் என்ற உறவு தங்கள் இருவரையும் விட்டு விலகியதை எண்ணித் துயருற்ற சிறுமி ஆதி, கன்னத்தில் வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள். தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். தம்பி, உனக்குத் தாயில்லை என்று நினைக்காதே. எனக்குத்தான் தாயில்லை. உனக்கு இனி நானே தாய். அவள் உள்மனம் சிறு வயதிலேயே தனக்கு ஒரு மகன் கிடைத்தாக எண்ணிப் பெருமிதம் கொண்டது. ஆதி தன் தம்பியை வளர்க்கும் அழகைப் பார்த்துத் திருவண்ணாமலையே வியந்தது. அவனை நீராட்டுவது, அலங்கரிப்பது, அவனுக்குச் சோறூட்டுவது என ஒரு தாய் செய்யும் எல்லாச் செயல்களையும் சிறுவயதிலேயே தன் தம்பிக்குச் செய்தாள் ஆதி. தாய் இறக்கும்போது தன்னிடம் ஒப்படைத்த பொக்கிஷமாக அவள் தன் தம்பியைக் கருதினாள். தம்பியை வளர்த்தவாறே கூடவே அந்தத் தமக்கையும் வளர்ந்தாள்.  அருணகிரிநாதர் இளமையிலேயே தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றார். ஆனால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாய்ப் போவதும் எங்கும் உள்ளதுதானே? அருணகிரி வீணாய்த்தான் போனான். குடி, சீட்டு என எல்லாக் கெட்ட பழக்கங்களும் அவனையே சரண் என்று வந்து குடிபுகுந்தன. அவனும் அவற்றை ஒரு கணமேனும் விட்டுப் பிரியாது ஆதரித்து வந்தான். அவன் வாலிப வயதை அடைந்தபோது அவனைச் சுற்றியிருந்த நண்பர்களில் ஒரு யோக்கியனைக் கூடக் காணோம்.

முத்தம்மை சேர்த்து வைத்திருந்த சொத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. ஆதி ரகசியமாக மறைத்துவைத்திருந்த தங்க நகைகளெல்லாம் திடீர் திடீர் என்று வீட்டை விட்டு மாயமாய் மறைந்தன. அருணகிரி தான் அவற்றை எடுக்கிறான் என்பதை அறிந்துகொண்ட ஆதி, அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்னதான் செய்கிறான் என மலைத்தாள். ஒருநாள் இரவுநேரத்தில் மிகத் தாமதமாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய அருணகிரியைச் சலிப்போடு பார்த்தாள் அவன் அக்கா ஆதி. எங்கே சென்று வருகிறாய்? எனக் கண்டிப்புடன் கேட்டாள். குழறிய குரலில் அக்கா..! நம் குலமே கணிகையர் குலம். நம் குலத்தைச் சார்ந்த கணிகையரை நாம் ஆதரிக்கவில்லையென்றால் வேறு யார் ஆதரிப்பார்கள்? அதனால் ஒவ்வொரு கணிகையையும் ஒவ்வொரு நாள் ஆதரித்து வருகிறேன்! என்று சொல்லியவாறே அருணகிரி குடிமயக்கத்தில் கீழே சாய்ந்தான். ஆதியின் மனமும் சாய்ந்தது. முருகா! என் தாய் முத்தம்மை, உன் பக்தனாக அருணகிரி வளர வேண்டும் என்று விரும்பினாளே? என் தாய் விரும்பியபடி என் தம்பியை என்னால் வளர்க்க முடியவில்லையே! நான் எங்கே தவறு செய்தேன், எப்படித் தவறு செய்தேன் என்று தெரியவில்லையே? முருகன் படத்திற்கு முன் நின்று அவள் கண்ணீர் விட்டுக் கதறினாள். தன் தம்பி மேல் உள்ள தாளாத பாசத்தால், தரையில் விழுந்து கிடந்த அவனை எழுப்பி உணவளித்து உறங்கச் செய்தாள். ஆனால் அவள் கண்கள் தம்பியைப் பற்றிய தீராக் கவலையில் உறக்கத்தை மறந்தன. படத்திலிருந்த முருகன் சிந்தித்தான். அருணகிரியைப் பொறுத்தவரை முருகனுக்கும் ஒரு பொறுப்பு உண்டே? வேலை வணங்குபவர்களுக்கு அருள்புரிவதைத் தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கந்தனை மட்டுமே சிந்தனை செய்து வாழ்ந்த முருக பக்தையும் அருணகிரியின் தாயுமான முத்தம்மைக்கு அவள் இறக்கும் நேரத்தில் அருணகிரியைத் தன் அடியவனாக்குவதாக முருகப் பெருமான் வாக்குறுதி கொடுத்தானே? அந்த வாக்குறுதியை முருகன் மீற முடியுமா?

செல்வத்தை அனைத்தும் இழந்த பின் அருணகிரிநாதரை எந்த நண்பர்கள் ஆதரவு கொடுத்தார்களோ அவர்கள் விலகினார்கள். தான் சிற்றின்பத்தில் ஈடுபட்டதால் நோய்வாய்பட்டார். தன் இன்பத்துக்கு பெண் இல்லையென்றதால் தன் அக்காவிடம் பணம் கேட்டார். வெறுப்புற்ற அக்கா தன்னை வேறு பெண்ணாக ஏற்றுக்கொள் என அருணகிரிநாதரிடம் கூறினாள். உடனே கோபம் கொண்டு மனமுடைந்த அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழேவிழ முருகப்பெருமான் அவரை தாங்கிப் பிடித்தார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.

மேலும் ஒரு சோதனையாக மன்னனின் கண் பார்வை பறிபோனது.
அதற்கு பாரிஜாத மலரே நிவாரணம் எனக்கூறி, அருணகிரியாரை அம்மலரை பறித்துக் கொண்டு வரப்பணித்தார்.

மேலோகத்தில் உள்ள அம்மலரை பறிக்க தன் பூத உடலில் இருந்து ஒரு கிளியின் உடலுக்கு கூடுவிட்டு கூடுபாய்ந்து பாரிஜாத மலர் பறிக்கச் சென்றார்.

இது போன்ற தருணத்திற்காக காத்திருந்தவர்கள், அரசரிடம் சென்று, மன்னா மலர் பறித்து வர இயலாமல், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் என மன்னனை நம்பவைத்து, அவர் உடலை தகனம் செய்து விட்டனர்.

கிளியுறுவுல் பாரிஜாத மலருடன் வந்த அருணகிரிநாதர் மன்னரின் கண் பார்வை குறையை நீத்தார். நடந்த தவறுக்கு மன்னன் மன்னிப்பு கோரினார்.

கிளியுறுவுடனே ஆறுமுக்கடவுள் அருணகிரியாரை ஆட்கொண்டார்

அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment