Saturday, July 25, 2020

பூஜையில் தேங்காய் தத்துவம்

*பூஜையில் தேங்காய் ஏன்?* 



பூஜை காலங்களில் தேங்காய் இன்றி பூஜை இல்லை. தேங்காய் இன்றி பூஜை செய்தால் பூஜையின் முழுத்தன்மை அடைவதில்லை. நம் முன்னோர் தான் தேங்காய் வைத்து பூஜை செய்யும் வழக்கத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். திருமணம், சடங்கு, பூப்படைதல், விழா, ஹோமம், கிரகபிரஷேம், கும்பாபிஷேகம், பூரண கும்பம் கொண்டு மரியாதை செய்தல்,இது போன்ற பல செயல் பாட்டில் தேங்காயைப் பயன் படுத்துகிறோம். தேங்காய் வடிவத்தில் மும்மலம் கருத்து உள்ளது. தேங்காய் ஓடு, நார் மனிதனின் உடல், தேங்காயின் உள்பகுதி வெண்மை உள்ள நிலை மனிதனின் மனம். தேங்காய் உள்ள நீர் மனிதனின் உயிர். பூஜை நேரத்தில் தேங்காயைப் படிப்படியாக களையும் போது அங்காரம் என்ற ஓடு நோறுங்க மனம் வெண்மையாக பிரகாசிக்கிறது. அதன் நீரை இறைவனுக்கு அர்பணிக்கப்படுகிறது. மனிதனின் உயிர் இறைவனுடன் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.

இறைவனுடைய திருக்காட்சியைக் காண மனிதனின் அகங்காரம் என்ற தேங்காய் ஓடு உடைத்தால் மனத்தூய்மை (தேங்காய் உள்ள வெண்மை) உருவாகி மனிதனின் உயிர் (நீர்) ஞான உணர்வு பெற்று இறைவனை தரிசிக்கிறது. மனிதனுக்கு இரண்டு கண்கள் மூன்றாவது கண் ஞானக்கண், இது போன்று தேங்காய்க்கு மூன்று கண் அமையபட்டுள்ளது. தத்துவக்குணத்துடன் சஞ்சலமில்லாமல் மனிதனின் ஞானக்கண்ணால் இறைவனை தரிசிக்கும் போது பக்தி உணர்வுகள் இதயம் உணர்கிறது.

சிதறு தேங்காய்

வழிப்பாட்டில் தேங்காயை தூள் தூளாக தரையில் அடிப்பது வழக்கத்தில் காணலாம். நான்கு திசைகளில் சிறும்படி தேங்காய் உடைப்பது சதுர் தேங்காய் வழிபாடு.  சிதறும் தேங்காய் துண்டுகள் பலரும் எடுத்துக்கொள்வது வழக்கம் இது போன்ற முறை குறிப்பாக விநாயகர் கோவிலில் காணலாம். சிதறும் தேங்காய் துண்டுகள் குழந்தை பிள்ளையாரின் பிரசாதம். இதன் காரணமாக என்னவோ சிதறும் தேங்காய் பகுகளைக் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

சிதறு தேங்காய் வழிபாட்டு தன்மையில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலை உணற முடிகிறது. ஏழை சிறுவர்கள் சிதறு தேங்காய் துண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலை மறைமுகமாக செய்யும் தர்மமாகும். அகங்கார மண்டை உடைய வேண்டும் அமுதமான அறிவுநீரை அடைய வேண்டும் என்பதுதான் சிதறு தேங்காய் வழிபாட்டின் தத்துவம்.

பூ விழுந்த தேங்காய் :-

கடவுளுக்காக உடைக்கிற தேங்காயில் பூ விழுந்தால் ரோக நாஸ்தி ஏற்படும் என்று சொல்வார்கள். சில சாஸ்திரங்கள் பொன், பொருள் சேர்க்கையான ஸ்வர்ண லாபம் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதனால் சாமிக்கு உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் நீங்கள் சந்தோஷத்தில் கூட துள்ளிக் குதித்து விளையாடலாம்.

கும்பத்தில் தேங்காய்:-

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்து கொள்ளுங்கள். மனிதன் உயிர் வாழத் தேவையானது தண்ணீர். ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைகற்பூரம் முதலிய வாசனை திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து
பூஜிக்கிறோம்.

பித்தளை அல்லது தாமிர சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அறிவியலாகச் சொல்வதானால், கடத்திகள். ஆங்கிலத்தில் conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடலாக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் கொள்ளலாம். ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாகச் சொல்வதானால், குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்பவை போல.

மேலே மாவிலையைக் கொத்தைச் சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும், சில நாட்களில் அழுகியும் விடும். ஆனால், மாவிலை மட்டுமே குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே பசுமை மாறாமல் இருக்கும். அதற்கும் மேலான நாட்களிலும் சருகாக வேண்டுமானால் ஆகுமே தவிர, அழுகாது.

  சிலர் வீடுகளில் தலைவாசலில் தோரணமாகக் கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணம், மாதக்கணக்கில் மழை, வெயில் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு சருகாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் ஆனால், இந்த காரணத்தால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு பயன்படுத்தவில்லை; மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தரவல்லது. மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயின் தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.

சரி, தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும்? மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் உண்டு. தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோமசூர்யாக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். அதாவது, வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயை தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.

(தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிய்த்துப்போடு என்று சொல்கிறோம்) கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால்கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் இருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது.  வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பதால்தான் அது கும்பத்தில் கிரீடமாக வைத்துப் போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment