Sunday, August 23, 2020

ஆனி மாதத்தில் மூத்த மகன் அல்லது மூத்த மகன் திருமணம் செய்யலாமா?

#ஆனி மாதத்தில் குடும்பத்தின் மூத்த மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்யக் கூடாது என்பது சரியானதா? 

ஆனி மாதத்தினை சாந்திரமானத்தில் ஜேஷ்ட மாதம் என்று அழைப்பர். இந்த ஜேஷ்ட மாதம் என்பது வைகாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஆனி மாத அமாவாசை வரை உள்ள காலம் மட்டுமே. இந்த ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் வைகாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஆனி அமாவாசை வரை உள்ள காலத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல். 

இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். ஒரு சிலர் இதையே தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாது பொத்தாம் பொதுவாய் சொல்வது தவறு. த்ரிஜேஷ்டை அதாவது மூன்று ஜேஷ்டைகள் இணையக்கூடாது என்றுதான் ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. இதில் கேட்டை நட்சத்திரத்தையும் ஜேஷ்டா நட்த்திரம் என்று அழைப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கும், மற்றொரு தலைச்சன் பெண்ணிற்கும் ஆனி மாதத்தில் வைத்து திருமணம் செய்ய இயலாது. இதுபோன்ற ஜேஷ்டை என்ற வார்த்தையின் பொருள் உணர்ந்து அதற்கேற்றார்போல் நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுவாக ஆனி மாதத்தில் தலைச்சன் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வது தவறான கருத்து.
                                                                                                                                                                                        #குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துத்தான் ஜாதகம் எழுத வேண்டும் என சொல்லப்படுவது எதனால்? 

 ஒரு வருடம் வரை பிறந்த குழந்தையானது கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. நமக்கெல்லாம் ஒரு வருடம் என்பது தேவலோகத்தைப் பொறுத்த வரை ஒரு நாள் மட்டுமே. ஆக இந்த உலகில் பிறந்த குழந்தையானது அந்த ஒரு நாள் மட்டும் கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை உறங்கும்போது சிரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தையின் கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயது முடியும் வரை அந்தக் குழந்தைக்கு அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்யமாட்டார்கள். 

குலதெய்வத்தின் கோயிலில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடித்து, அதன் பின்னர் காதுகுத்தி கர்ணபூஷணம் செய்தபின் தனது குழந்தையாக ஸ்வீகரணம் செய்து கொள்கிறார்கள். அதுவரை குழந்தைக்கு ஜாதகம் எழுதக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இறைவனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதி பலனை நிர்ணயம் செய்ய இயலாது, செய்யவும் கூடாது என்பதால்தான் ஒருவயது வரை ஜாதகம் எழுதக்கூடாது என்று சாஸ்திரம் அறிந்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 
                                                                                                                                                                                     #ஆண்கள் விளக்கேற்றினால் ஆண்களே குளிர்விக்கக் கூடாது, தானே குளிரட்டும் என்று சொல்கிறார்கள். வேலை நிமித்தமாக நான் வெளியூரில் தனியாக தங்கியிருக்கிறேன். எரிகின்ற விளக்கை அப்படியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல தயக்கமாக உள்ளது. என்னுடைய சந்தேகம் நீங்க வழி சொல்லுங்கள்.

தயக்கமே தேவையில்லை. ஆண்கள் விளக்கேற்றினால் அதனை குளிர்விக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. வேலைக்குச் செல்லும் நீங்கள் பூஜையை முடித்த பிறகு தாராளமாக விளக்கினை குளிர வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம். இதில் எந்த விதமான தவறும் இல்லை. தயக்கமோ, சந்தேகமோ வேண்டாம். சிரத்தையுடன் பூஜையை முடித்து விட்டு விளக்கினை குளிர வைத்து விட்டு வேலைக்குச் செல்லுங்கள். அதனால் எந்த விதமான குறையும் உண்டாகாது. இந்த விதி ஆண் - பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment