Friday, August 14, 2020

தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்க

தோல் நோய்களைக் குணமாக்கும் குருவாயூரப்பனின் "வாகை சார்த்து' ....

கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள். 

ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "அம்மே நாராயணா!' கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள். 

அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.

ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும். 

தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள்.

அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர். 

அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது.

 திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.

 இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. 

ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.

 பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான்.

 அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.

அவனும் அதிலிருந்து தேவையானபோதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான். 

அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.

பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

 அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.

சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான். 

திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன்.

ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள். 

அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். 

இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !🙏🌹🌈

No comments:

Post a Comment