Monday, August 24, 2020

தமிழ் மாத பிரதோஷ வழிபாடு நன்மைகள்

*ஒவ்வொரு தமிழ் மாத பிரதோஷ தினத்திலும் எதை நிவேதனமாக படைத்தால்! என்ன நன்மைகள் நடக்கும் !!*
                       🕉 🙏 💐

பிரதோஷ தினம் என்றாலே மிகவும் விசேஷமான நாளாகத் தான் இருக்கும். அன்றைய நாளில் நந்தி வழிபாடும், சிவ வழிபாடும் எண்ணற்ற சிறப்பான பலன்களை பக்தர்களுக்கு நல்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசேஷமான நிவேதனப் பொருட்கள் பிரதோஷ நாட்களில் சிவனுக்கு படைக்கப்பட வேண்டும். அதற்கு தாத்பர்ய காரணங்களும், அதனால் உண்டாகக்கூடிய நன்மைகளும் உண்டு. அதைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சித்திரை மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு நீர் மோரும், தயிர் சாதமும் நிவேதனமாக படைத்து பின்னர் சிறு சிறு பிள்ளைகளுக்கு அவற்றை தானம் கொடுப்பதனால் மூலம், பவுத்திரம், எலும்பு தேய்மானம் முதலிய நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு சர்க்கரை பொங்கலும், பசும்பாலையும் நிவேதனமாகப் படைத்து பின் அவற்றை பக்தர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் சகலவிதமான வயிறு பிரச்சனைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆனி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு தினை மாவும், தேனும் நிவேதனமாகப் படைத்து பின் பக்தர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கி பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு விசேஷமாக ஆராதனைகள் செய்து வெண்ணையுடன் சர்க்கரை சேர்த்து நிவேதன பொருளாக படைப்பதன் மூலம் உடலில் இருக்கும் 
கொழுப்புகளினால் உண்டாகும் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்ந்து நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆவணி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு ஆராதனைகள் செய்து தயிர்சாதம் நிவேதனமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நோய் தாக்கத்திலிருந்து மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அமையும், அதுமட்டுமல்லாமல் காரியத்தடை நீங்கி வெற்றிகள் குவியும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் நிவேதன பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் நீங்கப்பெற்று ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு உளுந்து வடையும், ஜிலேபியும் நிவேதனப் பொருளாக படைத்து வழிபாடுகள் செய்து பின் தானம் செய்தால் சீதள நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் நிவேதனமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் அளிப்பதன் மூலம் பெண்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் விரைவில் குணமடையும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு வெண் பொங்கலும், சுண்டலும் நிவேதன பொருளாக படைத்து ஆராதனைகள் செய்து வழிபட்ட பின் பக்தர்களுக்கு தானம் அளிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை.

தை மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சுத்தமான தயிரிலிருந்து கிடைக்கப் பெற்ற ஏட்டில், தேனை சேர்த்து நிவேதனப் பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் கபம் தொடர்பான அத்தனை நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.

மாசி மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் எல்லாம் சிவபெருமானுக்கு சுத்தமான நெய்யுடன் சர்க்கரை கலந்து நிவேதனமாகப் படைத்து வழிபட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி மாத பிரதோஷ நாட்களில் எல்லாம் சிவபெருமானுக்கு தேங்காய் சாதமும், தக்காளி சாதமும் நிவேதன பொருளாக வைத்து ஆராதனைகள் செய்த பின் பக்தர்களுக்கு தானம் செய்யப்பட வேண்டும். இதனால் பித்தம், மனநல பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக நீங்கும் என்பது ஐதீகம்.

இது போல் தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் விசேஷமான இந்த நிவேதனப் பொருட்களை சிவபெருமானுக்கு படைத்து, தீப ஆராதனைகள் செய்து வழிபட்டு பின் பக்தர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் மேற்கூறிய அத்தனை பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஈசனிடம் இவ்வாறாக முறையிட்டு நீக்கிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment