ஓணம் ( திருவோணம் )பண்டிகை கேரளா மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று.
மகாபலி சக்கரவர்த்தி என்னும் அரசர் பக்த பிரகலாதனின் பேரன். அதனால், அவன் அசுர குலத்தில் பிறந்து இருந்தாலும், தர்ம சிந்தனை உள்ளவனாக இருந்தான். யாராவது இல்லை என்று வந்து இரந்தால் அவர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன். அவனுக்கு கர்வமும் அதிகம் இருந்தது. மகாபலி உலகத் தலைமை பதவி வேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பினான். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும்.
அதை தடுக்க, தேவர்களின் வேண்டுகோளின்படி, ஸ்ரீமன் நாராயணன் வாமனனாக அவதாரம் செய்தார். வாமனன் மகாபலியிடம் தன் கால் அளவில் மூன்றடி நிலம் தானம் கேட்டான். மகாபலி நீ சிறுவன் ஆதலால் அதிகம் நிலம் கிடைக்காது, எனக் கூறியும் வாமனன் பிடிவாதமாக தன் காலால் மூன்றடி நிலமே வேண்டும் என்றான். மகாபலியும் தாரை வார்த்து, ‘கொடுத்தேன்’ என்று சொன்னான், உடனே வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார்.
வந்தது கடவுள் என அறிந்துக் கொண்ட மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான். பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது. எம்பெருமான், மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.
அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். “வருடம் ஒரு முறை இதே நாளான திருவோணத்தில், நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும்” என்னும் வரத்தை கோரினான். எம்பெருமானும் வரத்தை அருளினார். மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த “ஓணம்” நாளை, “திருவோணம்” என்று போற்றி விழாவாக கொண்டாடுகிறார்கள்.
எனது வாட்ஸ்அப் நண்பர்கள்,முகநூல் நண்பர்கள் மற்றும் முகநூல் நட்பில் இருக்கும் அனைத்து கேரள மக்கள் மற்றும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள வம்சாவழி தமிழர்களுக்கும் இனிய ஓணம் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment