Sunday, August 9, 2020

கிருஷ்ண ஜெயந்தியின் பஞ்சாங்க விளக்கம்

கோகுலாஷ்டமி எப்போது?

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோகுலாஷ்டமி தினம் பற்றி முகநூல், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் சர்ச்சைகள் எழுந்துகொண்டிருக் கின்றன. எல்லோருமே பஞ்சாங்க கர்த்தாக்களாக மாறி, ஆடி மாதத்தில் எப்படி கோகுலாஷ்டமி வந்தது? அதுவும் அன்று சப்தமி திதி பரணி நட்சத்திரம் அல்லவா இருக்கிறது? கிருஷ்ணன் பிறந்தது ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரம் அல்லவா? எனவே காலண்டர்களிலும், பஞ்சாங்கங்களிலும் ஆடி மாதம் 27ஆம் தேதி(11-08-2020) கோகுலாஷ்டமி என்று கொடுத்திருப்பது தவறானது. அந்த நாளில் கோகுலாஷ்டமியை கொண்டாடக் கூடாது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று (10-09-2020) ரோகிணி நட்சத்திரமும் வருகிறது. எனவே அந்த நாளில் தான் கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை மேற்கண்டவாறு தேதியை மாற்ற வேண்டும் என்று பதிவிடுகிறார்கள். உண்மையில் கோகுலாஷ்டமி எப்போது? ஆடியிலா? ஆவணியிலா? இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கோகுலாஷ்டமி எப்படி ஆடி மாதம் வந்தது? காலண்டர்களும் பஞ்சாங்கங்களும் தவறு செய்துவிட்டனவா? இவற்றை எல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்ள, வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.

நமது பண்டிகைகள் பெரும்பாலும் சாந்திரமான மாதத்தின் அடிப்படையி லேயே நிர்ணயம் செய்யப்படுகின்றன. அது என்ன சாந்திரமான மாதம்? மாதங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. சௌரமான மாதம் 2.சாந்திரமான மாதம். சௌரமான மாதம் என்பது சூரியனின் ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, சூரியன் ஒரு ராசியில் நுழையும் நேரத்தில் ஒரு மாதம் துவங்கி அவர் அடுத்த ராசியில் நுழையும்போது முடிவடைவதற்கு சௌரமான மாதம் என்று பெயர். சூரியன் மேஷ ராசியில் நுழையும்போது சித்திரை மாதம் துவங்கும்.அவர் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் தொடங்கும்.இதுவே சௌரமான மாதம் ஆகும்.
சாந்திரமான மாதம் என்பது சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாக கொண்டதாகும்.அதாவது அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை பிரதமையில் மாதம் தொடங்கி அடுத்த அமாவாசையில் முடிவடையும். இது சைத்ரம், வைசாகம்… என்று வடமொழி பெயர்களாக அழைக்கப்படும். இந்த மாதத்தில் வளர்பிறைக் காலத்தை அந்தந்த மாதத்தின் பெயரோடு சுத்தம் என்று சேர்த்து சைத்ரசுத்தம், வைசாக சுத்தம்,----- என்று அழைக்கப்படும். தேய்பிறைக் காலத்தை பகுளம் என்ற சொல்லை சேர்த்து சைத்ர பகுளம், வைசாக பகுளம்--- என்று அழைக்கப்படும். 

கோகுலாஷ்டமி அல்லது ஜன்மாஷ்டமி என்னும் கிருஷ்ணன் பிறப்பு தினமானது சாந்திரமான மாதமாகிய சிராவண மாதத்தில் தேய்பிறை காலமான சிராவணபகுளத்தில் அஷ்டமி திதியில் சம்பவிக்கும். சிராவண மாதம் என்பது ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி அடுத்த அமாவாசை வரை நடைபெறும்.சிலசமயம் சைத்ரம்,வைசாகம்,ஜேஷ்டம், ஆஷாடம், சிராவணம் இவற்றில் ஒன்று அதிமாதமாக வந்துவிட்டால் ஆவணி அமாவாசைக்கு மறு நாள் கூட சிராவண மாதம் தொடங்கும். பொதுவாக,  ஆடி அமாவாசை யானது 9ஆம் தேதிக்குப் பிறகு வருமானால் தேய்பிறை அஷ்டமி ஆவணி மாதத்தில் வரும். 9ஆம் தேதிக்கு முன்பு அமாவாசை நேரிட்டால் தேய்பிறை அஷ்டமியானது ஆடிமாதத்திலேயே வந்துவிடும்.அதனால் கோகுலாஷ்டமியும் ஆடி மாதத்தில் கொண்டாட வேண்டியிருக்கும்.இந்த ஆண்டு ஆடி மாதம் 5ஆம் தேதியில் அமாவாசை வந்துவிட்டதால் கோகுலாஷ்டமியும் ஆடியிலேயே வந்துவிட்டது.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.ஆடி 27(11-08-2020) அன்று சப்தமி திதி பரணி நட்சத்திரம் அல்லவா வருகிறது? கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரம் ஆயிற்றே. எனவே இந்த தேதி தவறல்லவா? இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது கோகுலாஷ்டமியானது சிராவண பகுள அஷ்டமியில் சம்பவிக்கும். அந்த அஷ்டமி திதியானது நள்ளிரவில் இருக்க வேண்டும். இதுதான் முக்கிய விதி. இங்கு திதி தான் பிரதானமே தவிர நட்சத்திரம் அல்ல. அந்த நாளில் காலை 09-08 மணிக்கு சப்தமி முடிந்து அஷ்டமி தொடங்குகிறது. மறுதினம் காலை 11-18 மணி வரை இருக்கிறது. எனவே ஆடி 27 நள்ளிரவில் அஷ்டமி இருப்பதால் அன்று தான் கோகுலாஷ்டமியாகும். இதில் எவ்விதமான மாற்றுக் கருத்துகளும் கிடையாது. 

ஒருசிலர் கோகுலாஷ்டமி இதுவரை ஆடி மாதம் வந்ததே இல்லை என்று முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு வருகிறார்கள். இது தவறான தகவலாகும். 1950 முதல் 2019 வரையிலான 70 ஆண்டுகளில் 1952,1955,1960, 1963, 1968, 1971, 1979, 1982, 1987, 1990, 1993, 1998, 2001, 2009, 2012, 2017 ஆகிய வருடங்களில் கோகுலாஷ்டமி ஆடி மாதத்தில் தான் கொண்டாடப்பட்டது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.    

இந்த சிராவண பகுள அஷ்டமியானது ஆவணி மாதத்தில் வருமானால் அன்றைய தினத்தை கோகுலாஷ்டமி மட்டுமல்ல ஸ்ரீஜயந்தியாகவும் கொண்டாடுவது வழக்கம். அப்படியானால் ஆவணி மாதம் 25ஆம் தேதி (10-09-2020) அன்று அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரம் வருகிறதே அந்த நாளை ஸ்ரீஜயந்தியாக கொண்டாடலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். 

தற்போது தர்மசாஸ்திர விற்பன்னர்கள் ப்ரும்மஸ்ரீ.சுந்தரராம வாஜ்பாய்ஜி அவர்கள் தலைமையில் கூடி, பல தர்மசாஸ்திரங்களை ஆய்வு செய்து, ஆவணி மாதம் பாத்திரபத பகுளத்தில், திருக்கணிதப்படி அன்றைய தினத்திலோ அல்லது முதல் நாளிலோ நள்ளிரவில் அஷ்டமியும் ரோஹிணியும் சம்மந்தப்படவில்லை. ஆனால் வாக்யபஞ்சாங்கப்படி முதல் நாளான ஆவணி 24ஆம் தேதி (09-09-2020) புதன்கிழமை நள்ளிரவில் அஷ்டமியும் ரோஹிணியும் சம்மந்தப்படுகிறது. அதேசமயம் அது மஹாளய பக்ஷத்தில் வருகிறது. எனவே, அன்றைய நாளில் பிதுர் தர்ப்பணம் செய்யாதவர்கள் விரும்பினால் ஸ்ரீஜயந்தி பூஜை மற்றும் விரதத்தை அனுஷ்டிக்கலாம் என்ற முடிவினை அறிவித்திருக்கிறார்கள். எனவே, விருப்பமுள்ளவர்கள் அந்த நாளில் ஸ்ரீஜயந்தியை கொண்டாடிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment