Friday, August 14, 2020

வீரபத்திரரின் சிறப்பு தன்மைகள்

வீரபத்திரர் மகிமைகள்!

மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரியதாகவும்,அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திரருக்கே உரியது.மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம் இல்லை.

தன்னை அழைக்காமல் அவமதித்து யாகம் செய்த தட்சனின் யாகத்தை அழிக்க பரமேஸ்வரனால் படைக்கப்பட்டவரே வீரபத்திரர்.

ஈசனின் நீலகண்ட விஷத்திலிருந்து ஆயிரம் முகங்கள், இரண்டாயிரம் கரங்கள், அவற்றிற்குரிய ஆயுதங்களோடு மணிமாலைகள்,ஆமையோட்டு மாலைகள், பன்றிக்கொம்பு மாலைகள், கபால மாலை அணிந்து வீரபத்திரர் தோன்றினார்.

வீரபத்திரருக்கு தும்பைப்பூ மாலை சாத்தி வழிபட்டால் அவர் நம்மை எதிரிகள் தொல்லைகளிலிருந்து காத்து நம் துன்பங்களை நீக்கி நல்வாழ்வு அளிப்பார்
என்பது நம்பிக்கை.

வீரபத்திரருக்கு கரையில்லாத வெள்ளைநிற ஆடைகளே அணிவிக்கப்படவேண்டும் என அவர் பூஜைமுறையில் கூறப்பட்டுள்ளது.

கோபத்தால் உஷ்ணமாக உள்ள வீரபத்திரரை குளிர்விக்க அவர் மேல் வெண்ணெய் சாத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. மதுரை மீனாட்சி ஆலய கம்பத்தடி மண்டபத்தில் அருளும் வீரபத்திரருக்கு இந்த பிரார்த்தனை விசேஷமாக செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் வீரபத்திரவிரதம்
என போற்றப்படுகிறது.அன்று சிவந்த நிற பூக்களாலும், செஞ்சந்தனத்தாலும் வீரபத்திரரை வணங்க, வாழ்வு வளம் பெறும்.

ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி, மகாஅஷ்டமி என்று அழைக்கப்படும்.அன்று தும்பைப்பூ, நந்தியாவட்டைப்பூ, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் வீரபத்திரரை அர்ச்சித்து வெண்பட்டு சாத்தி வழிபட, அவரது திருவருள் கிட்டும்.

ஆடிப்பூர நாளன்று வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாத்துவது அநேகமாக எல்லா வீரபத்திரர் ஆலயங்களிலும் நடக்கிறது. அன்று அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12800 எண்ணிக்கை வெற்றிலைகளால் தொடுத்த மாலையை சாத்துகின்றனர்.

திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி ஆலய தூணில் அருளும் வீரபத்திரமூர்த்தி பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக அருள்கிறார்.இவர்மீதான வீரமாலை எனும் நூல் புதுக்கோட்டை சமஸ்தானபுலவர் ஸ்ரீகேசவபாரதி என்பவரால் பாடப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் மாகாளி அம்மன் ஆலயத்தில் ஏழடி உயரமுள்ள வீரபத்திரமூர்த்தி திருவருள் புரிகிறார்.
                                                                                                                                                                                                  

No comments:

Post a Comment