Friday, August 28, 2020

ராம நாமத்தின் சிறப்பு மற்றும் மகிமை

#ராமநாமத்தை_இடைவிடாது 

கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராமஅவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.  

அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீரமபக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

ஏரியின் தென்கிழக்குப் பகுதியில் அழகே உருவாய் கோயிலும் மூர்த்தியும் புகழ்பெற்று விளங்குகிறது. மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் செந்தூரம் பூசப்பட்ட திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.  
பிரேம் பீகுஜி மகராஜ் என்பவரால் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலில், தினமும் நடைபெற்று வரும் 'ராம் தூன்' என்ற 'ராம நாம சங்கீர்த்தனம்' மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

1964ம் ஆண்டு முதல் இந்த ராம பஜன் தொடர்ந்து இடைவெளி என்பதே இல்லாமல் நடைபெற்று வருகிறது.

24 மணி நேரமும், ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம என்ற பதின்மூன்று அட்சரம் கொண்டு ராம மந்திரம் இங்கே இடைவிடாமல் ஜபிக்கப்பட்டு வருகிறது.

இந்த ராமநாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் பங்கேற்க விரும்பினால் இரண்டுடொரு நாட்களுக்கு முன்பே திருக்கோயில் நிர்வாகத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நிர்வாகம் திருக்கோயில் அறவிப்பு பலகையில் அறிவித்துள்ள கால நேரப்படி, முன்னரே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தவறாமல் வந்து பஜனையில் பங்கேற்க வேண்டும். இந்த ஜப சேவையில் சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.  

இப்படி 'ராம் தூன்' பஜன் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற ஆலய நிர்வாகம் எல்லாவித முன்னேற்பாடுகளையும் செய்கிறது முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் உரிய காலத்தில் வராத பட்சத்தில் நான்கு பேர் அடங்கிய ஒரு பஜனைக் குழுவினை எந்நேரமும், எந்தவிதமான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு நாம பஜனை செய்திடத் தயாராக வைத்திருக்கிறார்கள்.

அகண்ட நாம சங்கீர்த்தனம் என்ற இந்தத் தொடர் பஜனையை கின்னஸ் உலக சாதனையாக 1984ல் உலக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கௌரவித்துள்ளார்கள். கடந்த 2001ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பங்கர நிலநடுக்கத்தின் போதும், இந்த அனுமன் கோயிலுக்க எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. ராமநாம பஜனும் எந்தவிதமான தடங்களும் இன்றி தொடர்ந்து நடந்த வண்ணமிருந்தது என்பதே இத்தலத்து அனுமனின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

No comments:

Post a Comment