சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று
காளிகாம்பாள் கோவில்.
இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக குடியிருந்தாள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் கால கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்து விட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்பு செட்டித் தெருவிற்கு இடம் மாறினாள். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐ.பி. பக்தர்தான் சத்ரபதி சிவாஜி. 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார். “யாதுமாகி நின்றாய் காளி” என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான். சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள்.
கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாக வும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.
பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள். ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.
ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.
அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். நம் அன்னை வரப்ரதாயினி. ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.
உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள் ஆவாள் அம்பாளைப் பார்க்கும் போது, அவள் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பது போலவே இருக்கும். அன்னை காளிகாம்பாள் தலத்திலும் இதை நாம் உணரலாம்.
காளிகாம்பாளும் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும்.
கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள்.
No comments:
Post a Comment