🌈பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்🌈
🌹அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன.
🌹 வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல,
🌹ஏதோ ஒரு தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல.
🌹தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்து சாப்பிட்டு வரும்,
🌹பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான் திருமண நிகழ்ச்சி.
🎈திருமண ஏற்பாடு🎈
🌹அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி.
🌹ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு,
🌹பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா.
🌹இந்த நிலையில் நீளோபா புதல்வியின் அழகில் மயங்கிய வாலிபன் ஒருவன்,
🌹அவளை மணம் செய்து கொள்ள வலிய வந்தான். அவனும் ஏழைதான் என்றாலும்,
🌹அழகிலும் வலிமையிலும் சிறந்தவனாக இருந்தான். திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளும் நெருங்கி விட்டது.
🌹நாளையப் பொழுதில் திருமணம். ஆனால் நீளோபாவின் வீடு உறவுகளின் கலகலப்பின்றி காணப்பட்டது. நீளோபாவின் வீட்டில் பணப் பஞ்சம் என்பதால்,
🌹அவரது உறவினர்களின் மனதில் அன்புப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் நீளோபாவின் வீடு வெறிச்சோடிப் போய் கிடந்தது. எங்கே திருமணம் வீட்டிற்கு முன்பாகவே சென்றால்,
🌹பொருள் உதவி செய்ய வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் எவரும் வந்து சேரவில்லை.
🎈முதியவர் வருகை🎈
🌹இரக்க குணம் படைத்த பணக்காரர்கள் சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள்,
🌹இலை போன்றவை கொஞ்சம் இருந்தது. ஆனால் அவை திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள்.
🌹அப்போது வீட்டின் வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏன்பா! நீளோபா–ன்னா நீதானா.
🌹உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் முதியவர்.
🌹‘எல்லாம் இறைவனின் சித்தம். ஐயா! தாங்கள் யாரென்று தெரியவில்லையே? எந்த ஊர்?’ என்று பணிவாக கேட்டார் நீளோபா.
🌹அதற்கு முதியவர், ‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி..
🌹இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார்.
🌹‘ஐயா! எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் முதியவர்.
🌹நீளோபா அவரைத் தடுத்து, ‘திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சமா?. உள்ளே போய் பசியார உணவருந்துங்கள். அரிசி, பருப்பு கொடுத்து தான் சாப்பிட வேண்டுமா?’ என்று கூறினார்.
🎈சமையல் பொருட்கள்🎈
🌹‘நீளோபா! நாளை தான் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்த பொருட்களை காப்பாற்ற முடியாது.
🌹 உனக்கு பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான்.
🌹 எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்படத் தயாரானார்.
🌹பதறிப்போய் அவரை தடுத்தார் நீளோபா. ‘ஐயா! நில்லுங்கள். அந்த பொருட்களை தாருங்கள்’ என்று கூறியவர், தன் மனைவியை அழைத்து அதனை வாங்கிக் கொள்ளும்படி கூறினார்.
🌹முதியவரிடம் இருந்து பொருட்களை நீளோபாவின் மனைவி பெற்றுக் கொண்டாள். அவளிடம், ‘தாயே! இதனை கல்யாண சமையலுக்கு வைத்திருக்கும் பொருட்களோடு சேர்க்க வேண்டும்’ என்றார் முதியவர்.
🌹அவளும் அப்படியே செய்தாள். அதன்பிறகு முதியவருக்கு உணவு அளித்தனர். அதனை சாப்பிட்டு முடித்தார்.
🌹அப்போது சமையல் அறையில் நீளோபாவின் மனைவியும், மகளும் கல்யாண சமையல் பொருட்களை தரம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.
🌹‘என்ன! அனைத்து வேலைகளையும் கல்யாண பொண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று நீளோபாவிடம் கேட்டார் முதியவர்.
🌹நீளோபா வருத்தம் தோய, ‘ஐயா! நானே உஞ்சவிருத்தி பெற்று சாப்பிடுபவன். நான் எப்படி வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியும்?’ என்றார்.
🎈சமையல்காரனாக...🎈
🌹‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான்.
🌹தாலி கட்டி முடிந்ததும் அப்பளம் தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் நீளோபா.
🌹‘நன்றாக இருக்கிறது! தன்னுடைய கல்யாணத்திற்கே மணப்பெண்ணே சமைப்பதா?. நன்றாக இருக்கிறது!. நாளைக்கு அடுப்படிப் பக்கம் நீங்கள் யாருமே வரக்கூடாது. நான் நன்றாக சமைப்பேன்.
🌹சிக்கனமாய், அதே நேரத்தில் சுவையாய், மணமாய், விதவிதமான சமையல் செய்வேன். திருமண விருந்திற்கு என்னென்ன வேண்டும்? என்பது எனக்குத் தெரியும்.
🌹 நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை திருமணத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்று, விருந்துண்ண அனுப்ப வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை’ என்று கூறிவிட்டார் முதியவர்.
🌹அவரது வார்த்தையைக் கேட்டதும் மகிழ்ந்து போனார் நீளோபா. ‘அந்த பகவானே உங்களை அனுப்பி வைத்ததாக கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி’ என்றார்.
🎈விருந்தில் மயங்கினர்🎈
🌹அப்போது போய் அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்து பணிகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இரவு நேரங்கழித்து தூங்கி, வெகு அதிகாலையிலேயே எழுந்து சமையல் பணியை முடித்துவிட்டார்.
🌹திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
🌹‘என்ன நீளோபா.. திருமணத்திற்கு வீடு தேடி வந்து அழைத்தாய்.. வராவிட்டால் ஏழை என்று ஒதுக்கிவிட்டதாக நினைத்து கொள்வாய் என்றுதான்,
🌹அவசர வேலைகளைக் கூட அப்படியே போட்டு விட்டு வந்தேன்’ என்று கூறியபடி வந்த உறவினர்கள் அனைவரும் திருமண விருந்தைக் கண்டு வாயடைத்து போய்விட்டார்கள்.
🌹விருந்தில் அத்தனை பதார்த்தங்களை இதுவரை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
🌹லட்டு, முறுக்கு, அதிரசம் என்று கண்களை கவர்ந்தன. சமையலை வாசனை மூக்கைத் துளைத்தது, முந்திரியும், பாதாமும் முதல் பந்தியில் சாப்பிட்டவர்களை, அடுத்த பந்திக்கும் இழுத்தது.
🎈பாண்டுரங்கன் விக்கிரகம்🎈
🌹விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், சம்பந்தியும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர்.
🌹நீளோபா, தன்னை அனைவரும் பாராட்டியதற்கு காரணமான முதியவரைக் கண்டு அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்றார்.
🌹ஆனால் முதியவரை காணவில்லை. அங்கே சமையல் பொருட்கள் குறையாமல் அப்படியே இருப்பது கண்டு திகைத்தார். வந்தவர் சாதாரணமானவர் அல்ல என்பது அவருக்கு தெரிந்தது.
🌹அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்தது.
🌹இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி🌹
🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment