Saturday, November 14, 2020

பணம் அதிகமானால் வரும் பிரச்சனை

'பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம்'

ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட வேளையில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதாலோ, வீட்டை ஏர்-கண்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்! 

மன நிறைவு வெளி வஸ்துக்களால் ஒருநாளும் கிடைக்காது. வெளி வஸ்துக்களைச் சேர்க்க சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு புதுப்புது வஸ்துக்களைக் கண்டுபிடித்து வாங்கிக் கொண்டேதான் இருப்போம். 

நாம் இப்படி இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன. 

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக ஏக முஸ்தீபுடன் இறங்கிய பின்தான் சகலருக்கும் எப்போது பார்த்தாலும், எதையாவது வாங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான். 

இப்போது கோடீசுவரனிலிருந்து எல்லோருக்கும் இந்தக் குறை இருப்பதால் எல்லோருமே தரித்திரர்களாகத்தான் ஆகியிருக்கிறோம். பணம் இல்லாவிட்டால்தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம்.

இந்த போக்கிய வஸ்துக்கள் அதிகமாக ஆக, ஆத்மிக நாட்டம், நல்ல சித்தம் எல்லாமே போய் விடுகின்றன. மேல்நாட்டில் எத்தனை சஞ்சலம், விபசாரம், கொலை, கொள்ளை என்று பார்க்கிறோம்! அதெல்லாம் இங்கேயும் வருவதற்குப் பூர்ண கும்பம் கொடுக்கிறோம். வேண்டாத வஸ்துக்களை அவசியத் தேவை என்று நினைத்துக் கொண்டு அவற்றுக்காக ஆத்மாபிவிருத்தியை அலட்சியம் செய்துவிட்டு, பணவேட்டையிலேயே இறங்கியிருப்பதுதான் நவீன வாழ்க்கை முறை. போதுமென்ற மனசோடு நிம்மதியாக வாழ்ந்த காலம் போய்விட்டது.

இப்போது யாருக்குமே நிறைவு இல்லை; பழைய நிம்மதி இல்லை. சமூக வாழ்விலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும்? எல்லோருக்கும் எல்லா ஆசையும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது; ஆசாபங்கத்தில் துவேஷம் பிறக்கிறது.

எனவே, வசதி உள்ளவர்கள் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது; மற்ற ஜனசமூகத்துக்கும் நல்லது. பழைய காலத்தில் இப்படித்தான் இருந்தது. 

-- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 

(தெய்வத்தின் குரல் - முதல் பாகம்)

No comments:

Post a Comment