ஆன்மீக சந்தேகங்கள்... விளக்கம்!
#சிலர் ஒற்றைக்காலில் கருப்புக்கயிறு கட்டிக்கொள்வது ஏன்?
திருஷ்டி தோஷம் தாக்காமல் இருப்பதற்காக இவ்வாறு கட்டிக் கொள்கிறார்கள். கையில் கட்டிக் கொள்ளும் கருப்புக்கயிறு போலத்தான் இதுவும். நேரடியாகத் தாக்கும் திருஷ்டி தோஷத்திற்காக கையிலும், மறைமுகமாகத் தாக்கும் பில்லி, சூனியம், மாந்த்ரீகம் முதலான விஷயங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காலிலும் கட்டிக் கொள்வது வழக்கம். இதுபோக, சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக இருப்பவர்கள், ஆன்மிகவாதிகள் போன்றவர்கள் கால்களில் பலரும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். அவ்வாறு ஆசிர்வதிப்பவர்களுக்கும் கூட தோஷங்கள் தாக்கக்கூடும். அதாவது காலில் வந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களிடம் இருக்கின்ற குறைகள் ஆசிர்வதிப்பவரைச் சென்றடையும். இதுபோன்ற தோஷங்கள் ஆசிர்வதிப்பவரைச் சென்றடைந்து அவர்களது உடல்நிலையை பலவீனமாக்கக் கூடும். அவ்வாறு நேராதிருக்க ஆசிர்வதிப்பவர்களில் ஆண்களாக இருப்பவர்கள் வலது காலிலும், பெண்களாக இருப்பவர்கள் இடது காலிலும் கருப்புக் கயிறினை கட்டிக்கொள்வது வழக்கம். காலில் கருப்புக்கயிறு கட்டிக்கொள்வது என்பது எந்தவிதமான தோஷமும் தன்னை வந்து தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.
#குடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகுமா?
நிச்சயமாக இல்லை. வெள்ளை நிற ஆடை என்பது தூய்மையின் அடையாளம். வெண்ணிற ஆடை என்பது விதவைப் பெண்களுக்கு உரியது, இதனை சுமங்கலிப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. பொதுவாக சுமங்கலிப் பெண்கள் எந்த நிறமாக இருந்தாலும் அதில் அலங்காரம் ஏதுமின்றி ஒரே வண்ணத்தில் அணிவதை விட பல நிறங்கள் கலந்தும், அலங்கார வேலைப்பாடுகளுடனும் கூடிய ஆடைகளை அணிவது என்பது நல்லது என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதாவது பார்ப்பதற்கு பளபளவென்று இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அலங்காரத்துடன் பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மகாலக்ஷ்மியின் அருள் அந்த குடும்பத்திற்கு என்றென்றும் நீடித்திருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் அந்த அலங்காரம் ஆனது சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
நெற்றியில் திலகம், கண்களில் மை, தலைவாரி பூச்சூடுதல், கை நிறைய வளையல்கள், கால்களில் தண்டை அல்லது கொலுசு, பலவண்ணங்களுடன் கூடிய புடவை, கழுத்தினில் ஆபரணம், பொன் நகையைவிட உயர்ந்த நகையான புன்னகை என்று எப்பொழுதும் கலகலவென்று பெண்கள் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது.
வெண்ணிற ஆடை என்பது அமங்கலமான விஷயம் என்று சாஸ்திரம் எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லை. வெண்ணிற பட்டுப்புடவை அலங்கார ஜரிகையுடன் இருப்பது இன்னமும் சிறப்பான ஒன்று.
#ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது?
குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன.ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும்.இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது.அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு பலன்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.ஆக ஜனன காலத்திலிருந்தே அந்தக் குழந்தைக்கான பலன்களை ஜாதகம் கணித்து தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால், ஒரு வயது வரை அந்தக் குழந்தை இறைவனின் குழந்தை என்றும், ஒரு வயது முடிந்ததும் குலதெய்வத்தின் கோயிலில் சிகை நீக்கி காதணி விழா நடத்தி அதனை இறைவனிடமிருந்து நமது குழந்தையாக ஸ்வீகரித்துக் கொள்கிறோம் என்றும் சம்பிரதாயம் இருப்பதால் அது வரை பொதுவாக குழந்தைக்கு ஜாதகம் எழுதி வைப்பதில்லை.
ஒரு வயது முடிந்த பின்னர் ஜாதகம் எழுதி பலன்களைத் தெரிந்துகொண்டால் போதுமானது என்று பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்வதன் காரணமும் இதுவே. கிரஹங்களின் தாக்கம் என்பது குழந்தை ஒரு தாயின் வயற்றில் உருவாகும்போதே துவங்கிவிடுகிறது என்பதும், ஜாதகத்தை கணித்து பலன்களைத் தெரிந்துகொள்வது என்பது அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே என்பதும் உங்கள் வினாவிற்கு உரிய தெளிவான விடை ஆகும்.
#நன்றி:-
திருக்கோவிலூர் ஹரிபிரசாத் ஷர்மா!! - Nandri: dinakaran aanmeegam
No comments:
Post a Comment