Sunday, November 1, 2020

பக்தியே தவத்தைக் காட்டிலும் பெரியது

🙏சினத்தை வென்ற பக்தியின் வலிமை🙏

🙏முன்னொரு காலத்தில் சூரியவம்சத்தை சேர்ந்த அம்பரீஷர் எனும் சக்கரவர்த்தி, தனது நாட்டை சத்தியம் தவறாது ஆண்டு வந்தார். மக்களின் உயர்வுக்காக அரும்பாடுபட்டார். அதோடு தான் அரசராக இருந்தாலும், இவை யாவும் மாயை என்பதையும் உணர்ந்து, ஆத்ம சுகம் தரும் தெய்வங்களின் ஆராதனையிலும், தியானத்திலும் மட்டுமே மனதை செலுத்தி வந்தார். அதிலும் அவரின் மனதில் மகாவிஷ்ணு மட்டுமே ஆட்சி செலுத்தி வந்ததால், பெருமாளின் பக்தனாக திகழ்ந்தார்.

பெருமாளுக்கு உண்டான விரதங்களையும் நியமப்படி கடைப்பிடித்து வந்தார். இந்த அரசர் ஒவ்வொரு துவாதசி விரதத்தின் போதும், பெருமாளை பூஜித்து தன்னை நாடி வரும் அதிதிகள் எனப்படும் இறை அடியார்களுக்கு, அன்னம் அளித்து அவர்களின் பசியைப் போக்கிய பின்பே உணவு உண்டு விரதம் முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி ஒரு துவாதசியன்று வழிபாடு மற்றும் தானங்களை முடித்து, அவர் உணவு உண்ணப்போகும் சமயம் முனிவர்களில் அதிக தவவலிமை கொண்டவரும், கோபத்திற்கும் சாபத்திற்கும் பெயர் பெற்றவருமான துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவர் வருகை தந்த செய்தியை அறிந்ததும், அம்பரீஷர் தன் பசி மறந்து உண்பதை விடுத்து முனிவரை வரவேற்றார். அவரையும் தன்னுடன் உணவருந்த வரும்படி அன்புடன் அழைத்தார்.

அரசர் உணவுக்கு அழைத்ததும் ‘கொஞ்சம் பொறு மன்னா. நான் சென்று யமுனை நதியில் நீராடிவிட்டுத் தூய்மையுடன் வந்து உன் உணவை ஏற்கிறேன்’ எனக் கூறிச்சென்றவர், வெகுநேரம் கழிந்தும் வரவில்லை.

மன்னருக்கோ விரத நேரம் முடியும் தருணம் வந்துவிட்டது. அந்த நேரம் தாண்டி விட்டால், இத்தனை நாள் இருந்த விரதம் பலனளிக்காமல் போய்விடுமே என்ற கவலையில் ஆழ்ந்தார். அதே நேரம் அடியார்களுக்கு முன்பாக தான் உண்டால், அந்த பாவமும் வந்து சேருமே என்று வருந்தினார்.

அப்போது அவையில் இருந்து ஆன்றோர்கள், அம்பரீஷரிடம் ‘மன்னா! இறைவனுக்கு செய்த அபிஷேக நீரை எடுத்து அருந்தினால், துவாதசியில் விரதம் இருந்து பாராணை செய்த பலன் கிடைத்துவிடும். அதே நேரம் அடியவருக்கு முன் உணவருந்திய பாவமும் வராது. இவ்வாறு செய்வதே நலம்’ என்று தர்மத்தின் நியதியை அவருக்கு எடுத்துரைத்தனர். அரசனும் அவர்கள் கூறியபடியே உரிய காலத்தில் தீர்த்தம் அருந்தி விரதத்தை முடித்தார்.

Photo of the Remarkables mountain range in Queenstown, New Zealand.
துர்வாசர் யமுனையில் நீராடி விட்டு வந்ததும், அவருக்கு மன்னன் தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தது தெரிந்து விட்டது. அவர் மன்னனின் மேல் கடுங்கோபம் கொண்டு, தன்னுடைய சடைமுடியில் இருந்து சில ரோமங்களை எடுத்து அவற்றை பெரிய பூதமாக்கி, அரசனின் உயிரை எடுக்க உத்தரவிட்டார்.

அம்பரீஷரோ சிறிதும் பயப்படவில்லை. பெருமாளின் பக்தனான தான் செய்தது சரியே என்று பெருமாளின் நினைவுடன், தான் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றார். தான் வழிபடும் திருமாலிடமே தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, விஷ்ணுவின் நினைவிலேயே ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

ஆபத்தில் இருக்கும் தன்னுடைய பக்தனைக் காக்க சித்தம் கொண்டார் மகாவிஷ்ணு. அடுத்த நொடி அவரது கையில் இருந்த சுதர்சன சக்கரம் பாய்ந்து சென்று, அம்பரீஷரை நெருங்கிய பூதத்தை கொன்றது. பின்னர் அந்த பூதத்தை ஏவிய துர்வாச முனிவரிடம் சென்றது சுதர்சன சக்கரம். இதை சற்றும் எதிர்பாராத துர்வாச முனிவர், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் சுதர்சன சக்கரம் அவரை விடுவதாக இல்லை.

தேவலோகம் சென்ற துர்வாச முனிவர், தன்னைக் காக்கும்படி தேவலோக தலைவரான இந்திரனிடம் வேண்டினார். அவரோ, ‘விஷ்ணுவின் சக்கரத்தை எதிர்க்க எவராலும் முடியாது. உங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால், விஷ்ணுவிடமே தாங்கள் சென்று சரண் அடையுங்கள்’ என்று விலகி விட்டார்.

துர்வாசருக்கு வேறு வழியில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பெருமாளிடம் சென்று சரணடைந்தார்.

பகவானோ ‘நான் என் அடியார்களுக்கு மட்டுமே அடங்கியவன். பக்த சிரோமணியான அம்பரீஷனைக் காக்க இச்சக்கரம் புறப்பட்டது. இதை என்னால் தடுக்க முடியாது. அம்பரீஷன் மனது வைத்தால் மட்டுமே உம்மைக் காப்பாற்ற இயலும். அவனைச் சரணடையும்’ என்றார்.

துர்வாச முனிவருக்கு வேறு மார்க்கம் இல்லை. ஒரு சிறந்த பக்தனிடம் தான் தோல்வியுற்றதை அவர் மனம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

இப்போது துர்வாச முனிவர், அம்பரீஷரின் அரண்மனை நோக்கி புறப்பட்டார். சுதர்சன சக்கரம் அவரை துரத்துவதை நிறுத்தவே இல்லை. துர்வாச முனிவர், அம்பரீஷரை சரணடைந்தார். அவர் முனிவருக்கு பெருந்தன்மையுடன் அபயம் அளித்ததுடன், சுதர்சன சக்கரத்திற்கு வழிபாடுகள் செய்து, அதைச் சாந்தப்படுத்தினார். மேலும் துர்வாச முனிவரை மன்னித்து அருளும்படியும் வேண்டினார்.

சுதர்சன சக்கரமும், பக்தனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து மீண்டும் திருமாலின் கரத்தில் போய் புகுந்து கொண்டது.

துர்வாசரும் அரசரிடம் மன்னிப்பு கோரி தன் உயிரைக் காப்பற்றியதற்கு நன்றி தெரிவித்தார். நிலையறியாத தன் கடுங்கோபம் ஏற்படுத்திய ஆபத்தில் இருந்து தப்பிய துர்வாசர், தூய பக்தியின் முன் தன் தவவலிமை ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்தார்.

No comments:

Post a Comment