Monday, November 2, 2020

திருக்கழுகுன்றம் சென்று வணங்கு திருப்பங்கள் வரும்.

உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்கவேண்டுமா?

புத்திசாலி குழந்தை பிறக்க வேண்டுமா?

நோய்கள் எல்லாம் தீரவேண்டுமா?

மறுபிறவி வேண்டாமா?

தொடர்ந்து படியுங்கள்., உங்களுக்கு கிடைக்கும் !

என் கல்யாணத்துக்காக வீட்டுல எத்தனையோ பொண்ணு பாத்தாங்க. எதுவுமே அமையல. வயசு வேற ஏறிக்கிட்டே போச்சு. எனக்கு ஒரே கவலையா ஆயிடுச்சு. எல்லாமே தட்டித்தட்டிப் போவுதேன்னு வீட்டுலயும் எல்லாரும் ஃபீல் பண்ணினாங்க.

அப்பதான் ஒரு பெரியவர், ``நல்ல மனைவி அமையணும்னா அதுக்கு ஒரே வழி, திருக்கழுக்குன்றம் போய் சங்கு தீர்த்தத்துல குளிச்சுட்டு மலைமேல இருக்கற வேதகிரீஸ்வரரையும், தாழக்கோயில்ல இருக்கற அம்மனையும் ஒரே ஒரு தடவை பயபக்தியோட கும்புடு''ன்னு சொன்னாரு.

நம்பிக்கையில்லாமதான் நான் திருக்கழுக்குன்றம் போனேன். சொன்னா நம்பமாட்டீங்க, சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த அன்னிக்கே, எனக்கு ஒரு வரன் அமைஞ்சு,அந்த திருக்கழுக்குன்றத்திலேயே மறுமாசம் கல்யாணமும் நடந்து, இன்னிக்கு அன்பான, நல்ல மனைவியா நிர்மலா எனக்குக் கிடைச்சிருக்கா'' பரவசத்துடன் சொல்கிறார், மங்களம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.

திருக்கழுக்குன்றம் கோயிலுக்குப் போய் சிவனை... குறிப்பாக அம்மனை தரிசனம் செய்தாலே நல்ல மனைவி வாய்ப்பாள் என்பது புரிந்துவிடும்.

ஆம். தாழக்கோயிலில் அழகு மிளிர அருள் பாலிக்கும் அம்மனின் பெயர் என்ன தெரியுமா?

பெண்ணின் நல்லாள்!

இப்படிப் பெயர் வைத்தவர் யார் தெரியுமா? 

திருஞானசம்பந்தர்!

அந்தப் பெண்ணின் நல்லாளை வணங்கினால் நல்ல பெண் கிடைப்பாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?

அதுமட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ஓர் அழகிய பெண்ணின் திருமண நிச்சயதார்த்தமே இந்தத் திருக்கழுக்குன்ற மலை உச்சியில் நிகழ்ந்திருக்கிறது. 

இமயமலையில் இருந்து 7 முனிவர்கள் வந்து இங்கே அருள்புரியும் வேதகிரீஸ்வரரிடம் திருமண சம்பந்தம் பேசினார்கள்.

இமயமலை மன்னரின் மகளுக்கு,வேதகிரீஸ்வரரை மாப்பிள்ளை கேட்டார்கள்.

இறைவனும் புன்னகையுடன் சம்மதிக்க, சுபயோக சுபதினத்தில் பிரம்மா, விஷ்ணு,இந்திரன் ஆகியோர் புடைசூழ இந்த மலையிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது.

மன்னனின் மகள்தான் திரிபுரசுந்தரி! அவளைத்தான் `பெண்ணின் நல்லாள்' என்கிறது ஞானக்குழந்தை.

264 ஏக்கர் நிலத்தில், 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மலைக்கோயில்.

நான்கு வேதங்களும் சேர்ந்தே இந்த மலை உருவானதால், இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்று பெயர்.

அரிய மூலிகைகள் இருப்பதால் சஞ்சீவிமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. அதனால் இறைவனுக்கு மலை மருந்தீசர் என்ற பெயரும் உண்டு.

நெடிதுயர்ந்த மலை, செங்குத்தான படிகள். காலையில் 8 மணிக்கே மலையேற ஆரம்பிப்பது நல்லது. அல்லது மாலை. இல்லாவிட்டால் கால்கள் சுட்டுப் பொசுக்கிவிடும். ஜாக்கிரதை! செங்குத்தான படிகள் என்பதால் மூச்சிரைக்கிறது, செய்த தவறுகளும், செய்யாத உடற்பயிற்சி-களும்கண்முன் எழும்!

மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கே நிஜ குரங்குகளும் உண்டு. பை ஜாக்கிரதை!

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் குகையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த மலைக்கோயிலின் உட்புறச் சுவர்களில் பிரம்மா,யோக தட்சணாமூர்த்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள்.

மலை உச்சியில் மூலவர் வேதகிரீஸ்வரர், கிழக்கு நோக்கி வாழைக் குருத்து போன்ற வடிவில் அமைந்திருக்கிறார். ஆனால் கவசமிட்ட பெரியசிவ லிங்கத்தைத்தான் நாம் காணமுடியும். 

ஒரு வியாழ வட்டத்திற்கு ஒரு முறை இந்திரன் இவரை பூஜை செய்வது இங்கே அதிசயமான ஒன்று.

இந்திரன் பூஜை என்றால் நம்மைப்போல் அபிஷேகம், மந்திரம், மலர் மாலை சமாசாரமெல்லாம் கிடையாது.

இடியால் பூஜை!

ஆம். பயங்கரமாய் வானில் மழை, மின்னலுடன் இடி இடித்து, கோபுரத்தின் உச்சியில் அது விழுந்து, மூலவரை வலம் வந்து, பூமிக்குள் இறங்கிவிடும்.

இதனால் கோயிலுக்கோ,கோபுரத்திற்கோ இதுவரை எந்த பாதிப்பும் வந்ததில்லை என்பது வியப்பான விஷயம்!

மலையையும், கோயிலையும் சுற்றி காலை 11 மணிக்கு 2 கழுகுகள் மேலே வட்டமிட்டுப் பறந்து கோயில் பிரசாதத்தை வந்து உண்ணும் காட்சிபல நூற்றாண்டுகளாக இங்கே நடந்து வந்த அதிசயம். அதனால்தான் இந்த ஊருக்கே திருக்கழு(கு)குன்றம் என்று பெயர்.

அந்தக் கழுகுகளுக்கும் ஒரு கதை உண்டு.

பிரம்மபுத்திரர்கள் 8 பேர் செய்த சிறுபிழையினால் அவர்கள் யுகத்திற்கு இருவராகக் கழுகுகளாகப் பிறந்து இங்கே இறைவனை வணங்கி முக்திபெறுமாறு அருளினார் சிவபெருமான்.

இப்போது சில காலமாய் கழுகுகள் இங்கே வருவதில்லை. முக்தியடைந்துவிட்ட தாகக் கருதலாம். அல்லது சுற்றுப்புறச்சூழல் குறித்து நமக்கு எச்சரிக்கை மணியாகவும் வைத்துக்கொள்ளலாம்!

இன்னொரு அதிசயம் இந்தக் கோயில் திருக்குளத்திற்கும் உண்டு. கடலில் மட்டுமே உற்பத்தியாகும் சங்கு, மார்க்கண்டேய முனிவர் இங்கே தவம் செய்ததால் இந்தத் திருக்குளத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றுகிறது. (அடுத்தது 2023).அவற்றையெல்லாம் சேகரித்து ஆலயத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

சங்கு பிறக்கும் சமயம் இந்தக் குளத்தில் நீராடினால் முக்தி நிச்சயம் என்கிறது புராணம். குளத்து நீரில் தாமிரசத்து உள்ளதால் நோய்களும் தீருகின்றன. மகாமகம், கும்பமேளாவிற்கு ஒப்பானது இந்த தீர்த்தம்.

மலைஉச்சி மன்னவனை தரிசித்த வுடன் கீழிறங்கி ஊரின் மத்தியிலே அருளாட்சி புரியும் திரிபுரசுந்தரி என்னும் பெண்ணின் நல்லாள் கோயிலுக்குச் செல்லலாம்.

சிவபெருமான் இங்கேயும் பக்தவச்சலராக அருள்புரிந்தாலும், அம்மனுக்குத்தான் இங்கே பக்தர்களின் முதல் மரியாதை. தேவியின் பாதங்களுக்கு மட்டுமே இங்கே அபிஷேகம் உண்டு. ஏன்? அம்மன் விக்ரஹம் அபூர்வ மூலிகைகள் கலந்து உருவானதால், தினசரி அபிஷேகம் செய்வதில்லை. அம்மனைக் கண்குளிரக் கண்டாலே தீராத நோய்களும் தீர்ந்துவிடும்.

நல்ல மனைவி மட்டுமல்ல,இந்த தேவியை வணங்கினால் நல்ல குழந்தையும் பிறக்கும்.அவ்வாறு பிறந்தவர்தான் மாபெரும் தமிழறிஞரானமறைமலையடிகள்! 

உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்கவேண்டுமா?

புத்திசாலி குழந்தை பிறக்க வேண்டுமா?

நோய்கள் எல்லாம் தீரவேண்டுமா?

மறுபிறவி வேண்டாமா?

உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

திருக்கழுக்குன்றத்துக்கு பஸ் பிடியுங்கள்  !

வெய்யில் நேரத்தில் மலையேறும்போது கால்கள் சுட்டுப் பொசுக்குகிறது. காலணிகளைக் கீழேயே விடச் சொல்லாமல், மேலே மலைக்கோயில் வாசலில் விடுமாறு ஏற்பாடு செய்தால் பக்தர்களின் கால்களுக்காக கைகள் நன்றி சொல்லும்!

எங்கே? எப்படி?

எங்கே இருக்கிறது?

செங்கல்பட்டு&மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னை கோயம்-பேட்டிலிருந்து `108&கல்பாக்கம்' பஸ் விரைவாகச் செல்கிறது. 

கோயில் எப்போது திறந்திருக்கும்?

அம்மன் கோயில் : காலை 6.00 முதல் பிற்பகல் 1 வரை. மாலை 4.00 முதல் இரவு 9.00 மணி வரை.

மலைக்கோயில் : காலை 9 முதல் பிற்பகல் 1 வரை, மாலை 4 மணிமுதல், இரவு 9 வரை.

உணவு, தங்குமிடம் வசதி எப்படி?

செங்கல்பட்டு அல்லது மகாபலிபுரம்தான் வசதி.

- வாட்ஸ் அப் பகிர்வு

சிறப்பு என்ன?

நால்வராலும் பாடப்பெற்ற தலம். திருமண வாய்ப்பு, மக்கட்பேறு ஏற்படும். நோய்கள் விலகும். முக்தி நிச்சயம்.

No comments:

Post a Comment