மங்காத செல்வம்; மங்கல வாழ்வு தருவாள்; மகாலக்ஷ்மியை அழைக்கும் எளிய வழிபாடு!*
அத்தனை கல்யாண குணங்களும் கொண்டு திகழ்பவள் மகாலக்ஷ்மி. அவளின் கண்கள் கருணையே உருவெனக் கொண்டவை. அவளின் திருமுகம், எப்போதும் சாந்தமாகவே இருக்கிறது. அவளின் திருக்கரங்கள், நல்லுள்ளம் கொண்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றன.
எந்த வீட்டில், துஷ்ட வார்த்தைகள் பேசப்படுகிறதோ... அங்கே மகாலக்ஷ்மி வருவதே இல்லை என்கிறது சாஸ்திரம்.
‘எழவு கொட்டாதே’, ‘ஏன் உயிரை வாங்கறே’, ‘சனியன் மாதிரி வந்துட்டான்’, ‘என் பிராணனே போயிரும் போல இருக்கு’, ‘இப்படி கழுத்தறுக்கறதே உனக்கு வேலையாப் போச்சு’, ‘என் தாலியை அக்குறதே உனக்கு வேலையாப் போச்சு’, ‘என் தலைல மண் அள்ளிப் போடுவேனு நினைக்கவே இல்ல’, ‘பீடை பீடை... மண்டைல ஒண்ணுமே இல்லியே’... என்றெல்லாம் சர்வசாதாரணமாகப் பேசிவிடுகிறோம். ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வீரியம் இருக்கிறது. அந்த வீரியம் வார்த்தையாக இருந்து, நம்மையும் நம் வீட்டையும் வேலை செய்யும் இடத்தையும் சூழ்ந்து, அந்த வார்த்தையை செயலாக்கும் விஷயங்களில் இறங்கும்.
துர்தேவதைகள் என்பவர்கள், நம்மைச் சூழ்ந்துகொள்வார்கள். நம்முடைய செயல்களையெல்லாம் முடக்கிவிடுகிறார்கள் என்கிறது தர்மசாஸ்திரம். எனவே, சொல்லுக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. நாம் எது சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று சொல்வதற்கு பூதகணங்கள் தயாராக இருக்கும். ‘ததாஸ்து’ என்றால் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அர்த்தம். இந்த ‘அப்படியே ஆகட்டும்’ என்பதைச் சொல்வதற்கு, நல்ல தேவதைகளும் உண்டு, கெட்ட தேவதைகளும் சூழ்ந்திருப்பார்கள்.
அதனால்தான், எண்ணம் போல் வாழ்வு என்று சொல்லிவைத்தார்கள் தத்துவ அறிஞர்கள். ‘நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்றார்கள் ஞானிகள்.
‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்காப்பா’ என்று சொல்லுவார்கள். இதற்கு அர்த்தம், மகாலக்ஷ்மி போல் அழகுற அமைந்திருக்கிறாள் என்று மட்டுமே அர்த்தமல்ல. மகாலக்ஷ்மியிடம் இருக்கிற நற்குணங்கள் யாவும் இவளிடம் பொதிந்திருக்கின்றன என்று அர்த்தம். அப்படி எல்லா குணங்களும் இவளிடம் இருக்கவேண்டுமே என்கிற வேண்டுதல். எண்ணம்.
அப்பேர்ப்பட்ட மகாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது மகோன்னதமான பலன்களை தந்தருளும் என்கிறது சாஸ்திரம்.
வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். மகாலக்ஷ்மியின் ஆதிக்கம் நிறைந்தவர் சுக்கிர பகவான். நல்ல உத்தியோகம், அற்புதமான குடும்பம், வீடு வாசல் என்றிருப்பவர்களை ‘அவனுக்கு சுக்கிர யோகம் அடிச்சிருச்சுய்யா’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.
இப்படி, வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என்று எல்லாமே நல்லவிதமாக அமைவதற்கு, மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் மகாலக்ஷ்மியைத் துதிப்போம்.
வீட்டைச் சுத்தமாக்குவோம். பூஜையறையை சுத்தம் செய்வோம். மகாலக்ஷ்மியின் படத்தை சுத்தப்படுத்துவோம். சந்தனம் குங்குமம் இடுவோம். செந்நிற மலர்கள், வெண்மை நிற மலர்கள் சூட்டுவோம். தாமரை கிடைத்தால் இன்னும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
ஏஹ்யேஹி ஸர்வ
செளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா.
இந்த மந்திரத்தைச் சொல்லுவோம்.
மகாலக்ஷ்மி படத்துக்கு முன்னே அமர்ந்துகொள்வோம். ஒரு சிறிய தாம்பாளத்தில், அரிசியைப் பரப்பிவைத்துக்கொண்டு, அதில் காசுகளைப் போட்டு, அதற்கு சந்தனம் குங்குமம் இடுவோம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;
என்ற மந்திரத்தையும் சொல்லலாம்.
மகாலக்ஷ்மியை நினைத்துக் கொண்டு, பீஜமந்திரங்களைச் சொல்லியபடி, பூக்களால் அல்லது குங்குமத்தால் மகாலக்ஷ்மியை அர்ச்சித்து வழிபடுங்கள்.
இந்த ஸ்லோகங்களை ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள். அட்சரம் பிசகாமல் சொல்லுங்கள். 11 முறை சொல்லலாம். 16 முறை சொல்லலாம். 24 முறை சொல்லலாம். முடியுமெனில் 108 முறை சொல்லி வழிபடலாம்.
கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஒலிக்க விடலாம். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.
வீட்டின் தரித்திர நிலையெல்லாம் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் இதுவரை தடைபட்டிருந்த மங்கல காரியங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடைபெறும். மகாலக்ஷ்மியின் பூரணமான அருள் கிடைத்து ஆனந்தமாக வாழ்வீர்கள்.
மாங்கல்யம் தருவாள் மகாலக்ஷ்மி. மாங்கல்யம் காப்பாள் அம்பாள். மங்காத செல்வம் தந்து அருளுவாள் தேவி.
No comments:
Post a Comment