Tuesday, October 6, 2020

அங்குசம் தத்துவம்

“”

யானையை அடக்குவதற்காகத் தான் அங்குசம் இருக்கிறது.யானை என்பதைப் புலன் நுகர்ச்சி விளைகின்ற உடம்பு என்று கொள்ளலாம்.

அங்குசம் என்பது மனம்.

மனம் என்பதைப் புத்தி என்ற வார்த்தையையும் உபயோகித்து புரிந்து கொள்ளலாம். புலன் நுகர்ச்சிகள் நாலாபக்கமும் அலைந்து மதம் கொண்டு ஆடுவதைத் தடுக்க மனம் என்ற அங்குசம் பயன்படுகிறது.

மனத்தால் புத்தியிலுள்ள ஞாபகத்தைக் கிரகித்து பக்குவமாக எடுத்து, ஆராய்ந்து பார்த்து, எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் அங்குசம் ஏற்பட்டது.

ஆனால் இந்த உடம்பு என்ற யானை என்ன பண்ணியது தெரியுமா?

அங்குசத்தைப் பிடுங்கி விட்டது. அங்குசத்தைத் துதிக்கையில் சுருட்டி வைத்துக் கொண்டு நாலாபுறமும் வீசத் துவங்குகிறது.

யானையின் தாக்குதலே மிகக் கடினமானது, அது கையில் கூரிய அங்குசத்தை வேறு வைத்துக் கொண்டுவிட்டால் என்ன செய்ய…

யானை கட்டவிழ்ந்து போவது மட்டுமல்லாமல் அந்த மனம் என்ற கருவியை வைத்துக் கொண்டே, சுற்றுச் சூழ்நிலைகளைத் தன் புலன் நுகர்ச்சிக்காகப் போர் செய்யத் துவங்குகிறது.

ஆனால், யானையின் மீது அங்குசம் மட்டுமில்லை. யானைப் பாகனும் இருக்கிறான்.

யானை தானாக நடக்காது, பாகன் நகர்த்த வேண்டும், அங்குசம் தானாகச் செயல்படாது, பாகன் செயல்படுத்த வேண்டும்.

அந்தப் பாகன் யானையல்ல, அங்குசம் அல்ல. ஆனால், அந்த அங்குசத்தையும் யானையையும் பயன்படுத்தி எங்கோ நடத்துகிறவன்.

ஏதோ செய்கிறவன் பிறப்பெடுத்த ஜீவாத்மா.

அடுத்த கட்டத்திற்குப் போவதற்காகத் தன் மனத்தைச் சீராக வைத்துத் தன் புலன்களை அமைதியாக்கி ஒரு வழியில் நடக்கத் துவங்குகிறது. அப்போது அடுத்த கட்டத்திற்கு அந்த் யானைப்பாகன் போய்ச் சேருகிறான் தொடர்ந்து தன் பயணத்தை நடத்துகிறான்.

ஜீவாத்மா பல கட்டங்கள் தாண்ட வேண்டும், பல பிறவிகள் எடுக்க வேண்டும், பல அனுபவங்களைப் பெறவேண்டும்.

மனைவியாகப் பிறந்துவிட்டாயா? ஒரு சமயம் கணவனாகப் பார்.

கணவனாகச் சாதாரணமாக வாழ்கிறாயா…. பிறகு அரசனாக இரு என்று பல்வேறு அனுபவங்களை அனுபவிக்கப் போகிறாய்.

இந்தப் பெரிய பயணத்தில் போன ஜென்மத்தில் சந்தித்தவரையே இந்த ஜென்மத்திலும் சந்திக்கக் கூடும்.

இந்த ஜென்மத்தில் சந்தித்தவரை அடுத்த ஜென்மத்தில் பார்க்கக்கூடும்.

உனக்குத் தாயாக இருந்தவள் தமக்கையாக வருவாள், உனக்குத் தங்கையாக இருந்தவள் உனக்குக் குழந்தையாக இருப்பாள். உனக்குக் குழந்தையாக இருந்தவள் தாயாக மாறலாம். உன் தகப்பன் உனக்கு மகனாகப் பிறக்கலாம். உன் சினேகிதன் உனக்குக் கணவனாக வரலாம்.

எப்படி என்பது இன்னொரு சூட்சுமமான வித்தை. அது இப்போது சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மனம் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக ஈடுபட, உன் அடுத்த பிறவியில் அவ்விதமாகவே அனுபவம் ஏற்படும். உருவம் பெறப் பெற ஜீவாத்மா நிறைவில் ததும்பும்.

பயணப்பட பயணப்பட அந்த யானைப்பாகன் தன் யானையோடு மிகச்சரியான ஒரு ஒழுங்கு முறையை வைத்துக் கொள்வான்.

இந்த ஜென்மத்தில் ஒரு ஒழுங்குமுறையை னீ வைத்துக் கொண்டால் அடுத்த தலைமுறையில் அந்த ஒழுங்குமுறை இன்னும் பலப்படும். அடுத்த முறையில் அந்த ஒழுங்குமுறை இன்னும் பலப்படும்.

அடுத்த ஜென்மத்தில் அந்த ஒழுங்குமுறை நன்கு பலப்பட்டால் அதற்குப்பின் ஜென்மத்தில் மிக உச்சாணிக் கிளைக்கு வரும். மிக உச்சாணிக் கிளைக்கு ஒரு ஒழுங்குமுறை நகர்ந்து வந்தால் ஒரு உன்னதமான இடத்திற்கு நீ வந்து சேருவாய்.

உன் பயணம் முடிவுறும்.

இந்த ஜீவாத்மா ததும்பி நிறைய வேண்டும்.

அந்த யானைப்பாகன் செவ்வனே அந்த யானையைத் தான் நினைக்கின்ற இடத்திற்கு மெல்ல நடத்திப் போக வேண்டும்.

மனம் என்ற அங்குசம்,உடம்பு என்ற யானை,ஒரு நீண்ட நெடிய பயணம். அதற்கு மேல் உட்கார்ந்திருக்கின்ற யானைப்பாகன்.

இதுதான் வாழ்க்கை.

எழுத்துச் சித்தர்  பாலகுமாரன் - உடையார் நான்காம் பாகம்

No comments:

Post a Comment