Friday, October 16, 2020

ராமகிருஷ்ண பரமஹம்சரின் காளி பக்தி

!! ** ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்**!! 

 தனது வாழ்வின் பெரும்பகுதியும் ஒரு மிகத் தீவிரமான பக்தராக வாழ்ந்தார். அவர் ஒரு பித்துப்பிடித்த பக்தராக இருந்தார். பித்தராக இல்லாத பக்தர் ஒருவருமில்லை. ஒருவர் பித்தரல்ல என்றால், அவர் ஒரு பக்தர் அல்ல.

 ஏனெனில், பக்தி என்பது பித்து நிலை -மிக அழகான பித்துநிலை. ஆனால் அது பித்துப்பிடித்த நிலைதான். ஆகவே, இராமகிருஷ்ணர் ஒரு பரவசம் மிகுந்த, பித்தரான மனிதர்.

இப்போது இத்தனை காலங்களுக்குப் பிறகு, ‘அவர் பரமஹம்சர்’ என்று கூறுவது மிகவும் எளிது. ஆனால் நீங்கள் அவருடன் வாழ்ந்தால் அது மிகுந்த வித்தியாசமாக இருக்கும். 

ஏனெனில், உங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், நடுநிசியில் உங்கள் தோட்டத்திற்குள் தாவிக் குதித்து வந்து உங்களது மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டு, கூக்குரலிட்டு அழுவதற்குத் தொடங்கினார் என்றால், அவர் ஞானமடைந்துவிட்டார் என்று நீங்கள் எண்ணுவீர்களா அல்லது அவர் மது போதையில் உளறுகிறார் என்று எண்ணுவீர்களா? இராமகிருஷ்ணர் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்.

 எந்த இடத்திலும் அவர் கண்ணீர் விட்டுக் கதறி, ஒரு குழந்தை போல அழுவார். அவர் ஒரு மரத்தைப் பார்த்தால், ஒரு மேகத்தைப் பார்த்தால், சூரியனையோ அல்லது சந்திரனையோ பார்த்தால், பித்தனைப் போல அழுவார். அவர் ஞானமடைந்தவர் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். அவருக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்றுதான் நிச்சயம் எண்ணுவீர்கள்.

இராமகிருஷ்ணர், காளியின் பக்தராக இருந்தார். அவருக்கு காளி ஒரு தெய்வ உருவம் அல்ல. காளி அவருக்கு உண்மையில் வாழ்கின்ற நிதர்சனமாக இருந்தாள். அவருக்கு முன்னால் அவள் நடனமாடினாள். அவரது கரங்களினால் அவள் உணவு உண்டாள். அவர் கூப்பிட்டபோது வந்தாள். அவரைப் பரவசத்தில் நனைத்துச் சென்றாள்.

 இது உண்மையாகவே இருந்தது. இது நிஜத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர் பரவச உணர்வின் இரசாயனத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டார்.

 ஒருநாள் அவர் ஹுக்ளி ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தபோது, ஒரு மகாயோகியும், அபூர்வமான யோகியுமான தோத்தாப்புரி அந்த வழியாக வந்தார். இராமகிருஷ்ணரின் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் பரவசத்தால் நனைந்திருந்தாலும், அவரது உயிர், இந்தப் பரவசத்தைக் கடந்து செல்ல பேராவல் கொண்டிருந்தது. 

ஏனெனில், இந்தப் பரவசமும் கூட ஒரு பிணைப்புதான் என்ற ஒரு விழிப்புணர்வு அவருக்குள் இருந்தது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் பெரும்பகுதியும் ஒரு மிகத் தீவிரமான பக்தராக வாழ்ந்தார். அவர் ஒரு பித்துப்பிடித்த பக்தராக இருந்தார்.

 பித்தராக இல்லாத பக்தர் ஒருவருமில்லை. ஒருவர் பித்தரல்ல என்றால், அவர் ஒரு பக்தர் அல்ல. ஏனெனில், பக்தி என்பது பித்து நிலை -மிக அழகான பித்துநிலை.

இருப்பினும், அவர் உணர்ந்த அந்தப் பரவசத்தின் இனிமையை அவரால் விட்டுச் செல்லமுடியாத அளவுக்கு அது அபரிமிதமாக இருந்தது. மதுவின் போதைக்கு அடிமையான ஒரு மனிதர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டவர் போன்றவர்களின் நிலையிலிருந்து, இது எந்தவிதத்திலும் வித்தியாசப்படவில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

 இராமகிருஷ்ணரின் பரவசத்திற்கும், போதைப் பொருட்களால் உண்டாகும் நிலைக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மதுவும், போதைப் பொருட்களும் உடலைச் சீர்குலைத்துவிடும். 

ஆனால் இந்த பக்தியின் பரவசம் உடலைப் பாதிக்காது. ஏனெனில் இது உள்நிலையில் நிகழ்வது. அது அழகானது என்பதில் கேள்விக்கிடமில்லை.

 ஆனால் அதற்கு அடிமைப்படுவதும், அதன்மீது ஏற்படும் தீராத பற்றும் ஏக்கமும் இரண்டு விஷயங்களிலும் (பக்திப் பரவசம், மது மயக்கம்) ஒன்றுபோல இருக்கிறது. 

அவற்றின் எல்லைகளும் கூட ஒன்றுபோல இருக்கிறது. எப்போதெல்லாம் இராமகிருஷ்ணர், அவரது பக்தியின் அம்சமான காளியுடன் தொடர்பு கொண்டாரோ, அப்போதெல்லாம் அவர் பரவசத்தில் நனைந்திருப்பார். அதிலேயே அவர் மகிழ்ந்து நின்றுவிட்டார். தோத்தாப்புரி வந்தபோது, அவர்களிடையே இது வெளிப்பட்டது. தோத்தாப்புரி கூறினார், “இது மிகவும் எளிது, உனக்குத் தேவையான சக்தி உள்ளது. 

உன்னுடைய விழிப்புணர்வுக்கு சக்தி கொடு. நீ இப்போது உனது உணர்ச்சிக்கு சக்தி கொடுத்திருக்கிறாய், உனது உடலுக்கு சக்தி கொடுத்திருக்கிறாய், உனக்குள் இருக்கும் இரசாயனத்திற்கு சக்தி கொடுத்திருக்கிறாய், ஆனால் உனது விழிப்புணர்வுக்கு நீ சக்தி கொடுக்கவில்லை.

இராமகிருஷ்ணர் கூறினார், “சரி, என் விழிப்புணர்வுக்கு முழு ஆற்றல் கொடுத்து, அசைவில்லாமல் அமர்ந்திருப்பேன்.”

ஆனால், காளியின் காட்சி எழுந்த கணமே, அவர் மறுபடியும் கட்டுக்கடங்காத காதல் மற்றும் பரவச நிலைகளுக்குள் சென்றார்.

 எத்தனைமுறை அமர்ந்து முயன்றாலும், காளியைக் கண்ட கணமே அவர் தன்னிலை மறந்து செயல்பட்டார்.
பிறகு தோத்தாபுரி கூறினார், “அடுத்த முறை காளி தோன்றியவுடன் நீ ஒரு வாள் எடுத்து, அவளை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்.”

இராமகிருஷ்ணர் கேட்டார், “எனக்கு வாள் எங்கிருந்து கிடைக்கும்?”
தோத்தாபுரி மறுமொழி கூறினார், “உனக்கு காளி எங்கிருந்து காணக் கிடைக்கிறாளோ அதே இடத்திலிருந்து வாள் கிடைக்கும். 

காளியை முழுமையாக உன்னால் உருவாக்க முடியுமென்றால், அவளைத் துண்டிக்க ஒரு வாளை உருவாக்க முடியாதா? உன்னால் அது முடியும், தயாராக இரு.”

மீண்டும், காளி தோன்றிய மறுகணமே அவர் பரவசத்தில் வெடித்தெழுந்து, வாள், விழிப்புணர்வு போன்ற அனைத்தையும் மறந்து போனார்.

ஆகவே தோத்தாபுரி பிறகு அவரிடம் கூறினார், “இப்போது இங்கு உட்கார். காளி வரும் அந்தக் கணமே….. இதைப் பார்,” என்றவாறு ஒரு கண்ணாடித் துண்டை எடுத்துக் காட்டி, “நீ எங்கே தடைபடுகிறாயோ அந்த இடத்தில், இந்தக் கண்ணாடித் துண்டினால், நான் உன்னை கிழிக்கப் போகிறேன். 

நான் அப்படிக் கிழிக்கும்போது, வாள் உருவாக்கி காளியைத் துண்டாக்கு.”
ஆக, இராமகிருஷ்ணர் பரவசத்தின் விளிம்பைத் தொட்ட கணத்தில், அவரது காட்சிக்குக் காளி தோன்றியபோது, தோத்தாபுரி ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, அவரது நெற்றியின் குறுக்காக, உண்மையிலேயே ஆழமாகக் கீறிவிட்டார். 

பிறகு இராமகிருஷ்ணர் வாள் ஒன்றை உருவாக்கி, காளியை வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவர் காளித்தாயிடமிருந்தும், அவளுக்கு உணவூட்டும் பரவச அனுபவங்களிலிருந்தும் விடுபட்டார்.

 அப்போதுதான் அவர் உண்மையாகவே ஒரு பரமஹம்சராக மலர்ந்தார். அதுவரை அவர் ஒரு காதலனாக இருந்தார். ஒரு பக்தனாக இருந்தார், தானே உருவாக்கிய தெய்வத்தாய்க்கு ஒரு குழந்தையாக இருந்தார்.

!! **ஜெய குரு தேவ் **!!

No comments:

Post a Comment