யார் கண்ணுக்கு தெய்வம் தெரியும்?
ரத்தினபுரி மன்னன் மயூரத்வஜன் வீரத்தில் சிறந்தவன். கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவன். இவனது மகன் தாமரத்வஜனும் தந்தையைப் போல் வீரம் கொண்டவன். ஒருமுறை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் அஸ்வமேத யாகம் செய்தார். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் தன் வசம் கொண்டு வருவதே இந்த யாகத்தின் நோக்கம்.
இதற்காக ஒரு குதிரையை நாடுதோறும் அனுப்புவர். அந்த நாட்டு மன்னன், தன் நாட்டை இழக்க இஷ்டப்படாவிட்டால் யார் குதிரைக்கு பாதுகாவலாக செல்கிறாரோ அவரை எதிர்த்து போரிட வேண்டும். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி தர்மர் யாகக்குதிரையை தன் தம்பி அர்ஜுனன் பொறுப்பில் அனுப்பி வைத்தார். அதே சமயம் மயூரத்வஜனும் அஸ்வமேத யாகம் நடத்தினான். யாகக் குதிரையை மகன் தாமரத்வஜன் பாதுகாப்பில் அனுப்பி வைத்தான்.
மணிப்பூரில் இருவரும் சந்தித்துப் போரிட்டனர். தாமரத்வஜன் அர்ஜுனனைத் தோற்கடித்து இரண்டு குதிரைகளுடனும் தன் நாடு திரும்பினான். கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரில் அனுப்பப்பட்ட அர்ஜுனனைத் தன் மகன் தோற்கடித்ததில் மயூரத்வஜனுக்கு உடன்பாடில்லை.
தன் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை அவமானப்படுத்தி விட்டோமோ என வருந்தினான்.
தோற்ற அர்ஜுனன் கோபமாக இருந்தான். கிருஷ்ணர் அவனை சமாதானம் செய்தார்.
பின்பு அந்தணர் வேடம் பூண்டு, அர்ஜுனனைத் தன் சீடன் போல வேடமணியச் செய்தார். இருவரும் மயூரத்வஜனின் அரண்மனையை அடைந்தனர். அவர்களது பேரழகு கண்ட மன்னன், 'இப்படியும் அழகர்கள் உள்ளனரா?' என வியந்தான். அவர்களை உபசரித்து வந்த காரணத்தை சிரத்தையுடன் கேட்டான்.
கிருஷ்ணர் அவனிடம் “மன்னா! நான் இந்த சீடனுடனும் என் மகனுடனும் காட்டு வழியே வரும்போது என் மகன் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டு விட்டான். அதனிடம் ''என்னை எடுத்துக்கொள். என் மகனை விட்டுவிடு'' என்று வேண்டியும் மறுத்துவிட்டது. ''என்ன செய்தால் என் மகனை விடுவாய்?'' என்று கேட்டதற்கு 'ரத்தினபுரி மன்னன் மயூரத்வஜன் தன் முழு சம்மதத்துடன் தன் மனைவி ஒருபுறமும் மகன் ஒருபுறமும் நிற்க, தன்னை இரண்டாக அறுத்து அதில் வலப்பாகத்தை எனக்கு கொடுத்தால் உன் மகனை விட்டு விடுகிறேன் என்றது” என்றார்.
மயூரத்வஜன் உடலைத் தர சம்மதித்தான். மன்னன் மனைவி “ஐயா! கணவனின் உடலில் மனைவி பாதியாகையால் (அர்த்தாங்கினி) எனது உடலை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூற, அந்தணர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர் “மனைவி கணவனின் இடப்பாகத்திற்கு உரியவள். சிங்கம் கேட்பது மன்னனின் வலப்பாகத்தை!” என்றார்.
அப்போது தாமரத்வஜன் “நான் என் தந்தைக்கு சமமானவன். என் உடலை எடுத்துக் கொள்ளுங்கள்” என வேண்டினான். அந்தணர் அதற்கும் மறுத்தார்.
மயூரத்வஜன் கிருஷ்ணரின் திருநாமத்தை சொல்லியபடி அமர்ந்ததும் மன்னனின் உடலை அவன் மனைவியும் மகனும் அறுத்தனர். தலை அறுபட்டதும் அதன் இடது கண்ணிலிருந்து நீர் வந்தது. அதைப்பார்த்த அந்தணர் “வருத்தத்துடன் தரும் பொருள் வேண்டாம்” என்றார்.
அப்போது மன்னன் “சுவாமி! கண்ணில் நீர் வர வருத்தமோ, வலியோ காரணமல்ல. வலதுபுறம் செய்த புண்ணியத்தை இடதுபுறம் செய்யவில்லையே என்பதால் தான்” என்றான்.
அவன் கூறியதைக் கேட்ட பகவான் மகிழ்ந்தார். தர்மத்தின் தலைவனான அவனுக்கு, சங்கு சக்கரம் தாங்கி காட்சி தந்தார். அவனது உடலைத் தொட்டார். அறுபட்ட உடல் சேர்ந்தது. மன்னனும் அவன் குடும்பத்தினரும் மகிழ்வுடன் கிருஷ்ணரைப் போற்றினர்.
🦚🌹🙏🏻MPK🙏🏻🦚🌹
No comments:
Post a Comment