அருள்மிகு ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்
மூலவர் : மாரியம்மன் (முத்துமாரி), துர்க்கை
தல விருட்சம் : வேம்பு மரம்
தீர்த்தம் : வெல்லக் குளம்
புராணப் பெயர் : புன்னைவனம்
ஊர் : புன்னைநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யும் போது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வணங்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.
1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி அம்மை நோயால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டுக் குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்குச் சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோயில் அமைந்துள்ளது. மராத்திய மன்னர்கள் கட்டிய வெளி மண்டபம் கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.
சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள்.
சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி,
பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன.
இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும். புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
சுயம்பு அம்மன் :
கருவறை மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பு. மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு மட்டுமே.
துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் தினமும் அபிசேகம் நடைபெறுகிறது.
அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக் காப்பு அபிசேகம் நடைபெறும். அசசமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது கருவறையில் உள்ள அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகசா, சவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.
தைலகாப்பின் போது அம்மனின் உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.
சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்பாள்.
அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.
உள்தொட்டி நிரப்புதல் :
அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் வெப்பம் தணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து, தானாக மாறிவிடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அம்மை நோய் காணும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்று வரை கண்கூடாக உள்ளது
இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூசை நடைபெறும் கோயில் இது.
ஆடிமாதம் – முத்துப்பல்லக்கு. ஆவணி மாதம் – கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.
புரட்டாசி மாதம் – தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா.
தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசிக்கிறார்கள்.
வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.
தவிர தோல் வியாதியால் அவதிப்படுவோர், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள், உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை வேண்டி குணமடைகிறார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி, பணி உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார்.
அம்மை நோய் கண்டவர்கள் அம்மை நோய் இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்கிறார்கள். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்கிறார்கள்.
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏
ஓம் நமசிவாயம் 🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏
நல்ல தகவல்களை அனைவருக்கும் பகிர்வோமே 🙏🙏🙏.
No comments:
Post a Comment