Saturday, September 26, 2020

துன்பம் அதுதான் அனைத்து இன்பங்களுக்கும் காரணம்

*பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும்...!*

வாழ்க்கை என்பது நீண்ட பயணம் என்று சொல்வார்கள். 
ஒரு நதி தன் வழியே போய்க் கொண்டே இருப்பது போல, உயிர்கள் அனைத்தும் வாழ்க்கை எனும் வழியிலே போய்க் கொண்டே இருக்கின்றன. 

கணக்கற்ற பிறவிகள் மூலமாக இப்பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பயணம் முழுவதும் இன்பமும், துன்பமும் பலவாறு மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன. 

பெரும்பாலும் எல்லோரும் சொல்வது என்னவெனில் ''துன்பமே வாழ்வாக வடிவெடுத்து வந்ததோ'' என்றுதான். அதற்குக் காரணம் இன்பமே இயல்பாகவுடைய நாம் அதை அறியாமல் அதனின்று விலகி துன்ப வழியில் பயணிப்பதினால்தான். 

எனினும் அத்துன்பத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமே நம் உண்மை இயல்பை நாம் உணர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இன்பத்தினின்று நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை. 

தேன் குடித்த வண்டு போல ஆகி, அதிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால், துன்பம் அவ்வாறல்ல. அதிலிருந்து விடுபட்டு நம் உண்மை இயல்பை நாம் அடைவதற்கு தூண்டு கோலாக அது அமைகிறது.

துன்பத்தை நமக்குத் தருபவர்கள் யார் ? 

அவர்களை நாம் துஷ்டர்கள், கொடியவர்கள் என்று சொல்கிறோம். அத்தகைய கொடியவர்கள் இல்லாமல் இருந்தால் பூமி சுபீட்சமாகவும், இன்பமயமானதாகவும் இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். 

ஆனால், நாம் திருந்தி வாழவோ அல்லது தீய வழியில் செல்லாமல் இருக்கவோ இந்த தீயவர்களே நமக்கு குறிகாட்டியாக இருக்கிறார்கள். 

இவர்களைப் பார்த்துதான் நாம் நம்மை தற்காத்துக் கொள்கிறோம். எல்லாம் இறை சொரூபமே என்கிற பொழுது இந்தக் கொடியவர்கள் யார் ? என்று பார்த்தால், அவர்களும் பரம்பொருளே. உலக நடைமுறைக்கு நல்லோர்களும், தீயோர்களும் வெவ்வேறு விதங்களில் உதவி புரிகின்றனர். 

நல்லோர்களாக வடிவெடுத்து விளையாடுவதும், தீயோர்களாக வடிவெடுத்து விளையாடுவதும் பரம்பொருளே. இதையே கூத்து என்றும் திருவிளையாடல் என்றும் சொல்கிறோம்.

நாம் உண்மையை உணர்வதற்குப் பரம்பொருளே இரண்டு விதங்களில் உதவி புரிகிறார். நல்லோர் மூலமாக புரியும் உதவி அனுக்ரகம் எனப்படுகிறது. தீயோர் மூலம் மறைமுகமாகப் புரியும் உதவி விக்கினம் எனப்படும். 

நம்மைப் பண்படுத்துவதற்கு அனுக்ரகம், விக்கினம் இரண்டுமே இன்றியமையாதவைகள்தாம்., வெவ்வேறு படித்தரங்களில் ஜீவாத்மன் வெவ்வேறு விதங்களில் பண்பாடு அடைகின்றான். அதற்கு நல்லவர்களும், கெட்டவர்களும் தத்தம் போக்கில் உதவியாக இருந்து வந்துள்ளனர். 

விவேகம் எனும் ஞானத்தைப் பெற்ற யோகிக்குத்தான் இவ்வுண்மை அறிவில் புலப்படுகிறது. அவன்தான் தன் பழைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறான். பரம்பொருளே நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் வடிவெடுத்து வந்து நன்மை, தீமைகள் வாயிலாக தம்மைப் பக்குவப்படுத்தினார் என்பதை உணர்ந்து கொள்கிறான்.

கல், புல், பூடு நிலையிலிருந்து இந்த மனிதப் பிறவியை மனிதன் அடைவதற்கு மனிதன் எடுத்துள்ள ஜென்மங்கள் எண்ணிக்கையில் அடங்காதது. மனிதப் பிறவியிலும் இத் துன்பம் தொடர்கிறது. துன்பத்தில் உழன்று வருந்திக் கொண்டிருக்கும் ஒருவன் பல வேளைகளில் அத் துன்பத்திற்கான ஆதியையோ, அந்தத்தையோ அறியாமல் இருக்கிறான். 

துன்பப்படுகிறோம் என்பதை மட்டுமே ஓரளவு அறிந்து கொள்கிறான். இந்நிலையையே சான்றோர் மருள்நிலை என்பர். மனிதன் படுகின்ற துன்பங்கள் அனைத்திற்கும் மூலக் காரணம் மருள் நிலையென்றும், இருள் நிலையென்றும் சொல்லப்படும் அஞ்ஞானமேயாகும். 

தாங்க முடியாத அளவு துன்பங்கள் தொடரும் பொழுதுதான் மனிதன் அதிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று யோசிக்கிறான். தான் கொண்டுள்ள பற்றுகளே இவையனைத்துக்கும் காரணமாக இருக்கிறது என்பதை உணர்கிறான். தான் நுகர்கின்ற இன்பங்களனைத்தும் பிறகு துன்பங்களாக வடிவெடுப்பது புரிய வருகிறது.

பிரபஞ்ச இன்பம் என்பது வெறும் மயக்கமே. உண்மை இன்பம் இதுவல்ல. இந்த தேகமும் அழியக் கூடியது. என்றெல்லாம் தான் கொண்டுள்ள ஒவ்வொரு பற்றுகளையும், அதன் கேடுகளையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு அவன் உள்ளத்தில் அருள் தாகம் ஏற்படுகிறது. 

தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரைத் தேடி மனிதன் செல்வது போல, அருள் தாகம் ஏற்படும் அளவிற்கு மனிதன் பரம்பொருளைத் தேடி அலைகிறான். தாகத்தால் வருந்தியவன் நீர் நிலையைத் தேடி அடைந்து நீரைப் பருகி திருப்தி அடைவது போல, அருள் தாகம் கொண்ட மனிதனின் நாட்டத்திற்கு ஏற்ப பரம்பொருளின் அருள் சுரக்கிறது. 

அங்ஙனம் அருள் தாகம் நிறைவேறப் பெறுவதே வீடுபேறு ஆகும். மானுடப் பிறவியின் நோக்கமும் அதுவே. எனவே துன்பம் முற்றிவிடும் பொழுது அதனின்று விலகி ஓட வேண்டும் என்று எண்ணுவது போல, இன்பத்தினின்றும் விலகி விட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டால் மனிதன் பற்றுகளை விலக்கியவனாகி விடுவான். 

பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும். தன் உள்ளத்திலேயே துன்பமற்ற ஆனந்தம் வந்து குடி புகுந்த பின்பு வேறென்ன வேண்டியதிருக்கிறது. கவனித்துப் பார்த்தால் இத்தகைய முழுமையான நிலையை அடைவதற்குக் காரணமாக அமைவது துன்பங்களே என்பது புரிய வரும்.

*பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும்...!*

*ஓம் நமச்சிவாய..!*

No comments:

Post a Comment