Sunday, September 13, 2020

தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்

ஓம் ஸ்ரீ நமசிவாய

ஓம் ஸ்ரீபஞ்சாக்ஷரம்
மகிமை 2.

தண்ணீரால் விளக்கேற்றிய நமிநந்தியடிகள்
----------------------------------------------------------------------------------------------
சோழ வள நாட்டில் உள்ள ஏமப்பேறூரில் வசித்து வந்தவர் நமிநந்தியடிகள். இரவும் பகலும் சிவபெருமானைப் பூஜித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்கு சென்று சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு நாள் திருவாரூர் திருக்கோவில் இறைவனை வழிபடச் சென்றார். இறை வழிபாடு முடிந்த பின்பும், கோவில் தொண்டுகள் பல செய்து கொண்டிருந்தார். அப்போது இறைவனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற நமிநந்தியடிகளுக்கு விருப்பம் உண்டானது.

திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் தரும்படி வேண்டினார். அங்குள்ளவர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘உங்கள் இறைவனுக்கு விளக்கு எரிக்க வேண்டும் என்று எண்ணினால், நீரை விட்டு விளக்கு ஏற்றுங்கள்’ என்று கூறி பரிகாசம் செய்தனர். அவர்கள் சமணசமயத்தினர்.
.

அதுகேட்டு மன வருத்தம் கொண்ட நமிநந்தியடிகள், கோவிலில் இறைவன் திரு உருவம் முன்பாக வீழ்ந்து வணங்கினார்; அழுது புலம்பினார். அப்போது வானில் ஓர் அசரீரி ஒலித்தது. ‘நமிநந்தியே! உனது கவலையை விடு. கோவில் அருகில் உள்ள குளத்தில் இருந்து நீரை எடுத்து வந்து விளக்கேற்று!’ என்று அந்த குரல் கூறியது. அந்த அறிவுரையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் ‘இறைவனின் சித்தம் அதுதான் போலும்’ என்று எண்ணி குளத்திற்குச் சென்று ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, நீரை எடுத்து வந்து கோவிலை அடைந்தார்.
பின்னர் கோவிலில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நீர் ஊற்றி விளக்கேற்றினார். அது சுடர்விட்டு எரிந்தது. இதனைக் கண்டு அக மகிழ்ந்த நமிநந்தியடிகள், கோவில் முழுவதும் அகல் விளக்கு வைத்து அதில் நீர் ஊற்றி விளக்கேற்றினார். இரவு முழுவதும் எரியும் வகையில் அகல் விளக்கில் அதிக நீரை ஊற்றி இறைவனை வழிபட்டு விட்டு, தனது ஊருக்குத் திரும்பினார். ஒவ்வொரு நாளும் மாலையில் திருவாரூரில் இறைவனுக்கு நீர் ஊற்றி விளக்கேற்றி விட்டு, தன் ஊரான ஏமப் பேறூருக்குச் சென்று சிவபூஜை முடித்து உணவருந்தி, தூங்கச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் நமிநந்தியடிகள்.

.
நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்தார். ஆனால் வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே படுத்து துயில் கொள்ளத் தொடங்கினார். அப்போது நமிநந்தியடிகளின் மனைவி, ‘வீட்டிற்குள் வந்து சிவ பூஜை செய்து, உணவருந்தி விட்டு தூங்குங்கள்’ என்றார்.

அதற்கு நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். இறைவனுடன் நானும் சென்று வந்தேன். அந்தக் கூட்டத்தில் எல்லா சாதியினரும் கலந்துகொண்டதால் தீட்டு உண்டாயிற்று. எனவே நீராடிய பின்னரே வீட்டிற்குள் வர வேண்டும். குளிப்பதற்கு தண்ணீர் கொண்டுவா!’ என்றார்.
அவரது மனைவியும் தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் விரைந்து சென்றார். அந்த வேளையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. உறக்கத்தின் ஊடே சிவபெருமான் கனவில் தோன்றினார். அவர், ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ அறிந்து கொள்வாயாக!’ என்று கூறி மறைந்தார். 

உறக்கம் நீங்கி எழுந்த நமிநந்தியடிகள், ‘அடியார் களிடையே சாதி வேறுபாடு நினைத்தது தவறு என்பதை உணர்ந்தார். உடனடியாக எழுந்து வீட்டிற்குள் சென்றவர் சிவ பூஜையை முடித்துக் கொண்டு மனைவியிடம் நிகழ்ந்ததை கூறினார். பின்பு திருவாரூரிலியே குடியேறி, இறைவனுக்கு தொண்டுகளைச் செய்து முக்தி அடைந்தார்.

ஐந்தெழுத்து ஓதி தண்ணீரில் விளக்கேற்றினார் என்றால் ஐந்தெழுத்து மந்திரம் ஸ்ரீசிவனின் வடிவம்
.அந்த மந்திரத்திற்கு ஈடான மந்திரம். இல்லை அனைத்தும் அதில் அடக்கம்.

உதாரணம்
ந  = நிலம்*
*ம   =நீர்*
*சி == நெருப்பு*
*வ  =காற்று*
*ய  =வானம்*
பஞ்சாக்ஷரம் சொல்பவனுக்கு பஞ்சபூதங்களான  ப்ரபஞ்சம் வஸ்யமாகும்.இது சத்யம்

திருச்சிற்றம்பலம்

ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம்
காடந்தேத்தி

No comments:

Post a Comment