Tuesday, February 9, 2021

கடவுள் மீது நாம் ஏன் பழி போட வேண்டும்?

✍️நமது வாழ்க்கை என்பது ஏற்கனவே 100 சதவீதம் திட்டமிடப்பட்டதா? ஏற்கனவே திட்டமிட்டபடிதான் நாம் நடந்துகொண்டிருக்கிறோமா? நமது விருப்பபப்படி எதுவும் செய்ய இயலாதா? நாம் எதை செய்ய வேண்டும்,எதை செய்யக்கூடாது என்பதெல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதா?
..
இந்த கேள்விக்கு ஏற்கனவே பலமுறை பதில் சொன்னாலும்,மீண்டும் மீண்டும் இந்த கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கும்.
அனைத்தும் இறைவனின் விருப்பபடிதான் நடக்கிறது,இதில் மனிதனின் சுயேட்சைக்கு இடமில்லை என்றெல்லாம் நாம் படிக்கிறோம்.
உண்மையில் இந்த உலகத்தில் இறைவனே அனைத்துமாகியிருக்கிறார்.
மனிதர்கள்,மிருகங்கள்,மரம்,செடி,கல்,மண்,இயற்கை சக்திகள்,விருப்பு வெறுப்பு.இன்பம் துன்பம்,காமம் அன்பு என்று எதுவுாக இருந்தாலும் அனைத்தும் கடவுள்தான்.
கடவுளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்கிறபோது அனைத்தும் கடவுள் விருப்பபடியே நடக்கின்றன என்று முடிவுசெய்வது சரிதான்.ஏனென்றால் மனிதர்,மிருகம்,இயற்கை அனைத்தின் விருப்பு வெறுப்பும்  கடவுள்தான்.
..
மரமாக இருப்பதும் கடவுள்தான்,அதில் இலையாக இருப்பதும் கடவுள்தான்,காற்றாக இருப்பதும் கடவுள்தான். காற்றினால் மரம் அசைந்து இலை விழுந்தாலும் அந்த விழும் சக்தி கடவுள்தான்.
இதனால்தான் இலை அசைவதுகூட கடவுளால்தான் என்று கூறுகிறார்கள்...
-
ஆனால் மனிதன் தனி கடவுள் தனி என்ற அஞ்ஞானம் யாரிடம் உள்ளதோ அவர்கள் அனைத்தும் இறைவன் விருப்பபடியே நடக்கின்றன என்று கூறமுடியாது.அப்படி கூறினாலும் அது உண்மையாகாது.
..
ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவராகவேண்டும் என்று நினைத்தானாம்.. அவ்வாறு நினைத்த உடனேயே நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையளிக்க கத்தியை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றானாம்.
இது எப்படி நகைப்பிற்கு உரியதாக இருக்கிறதோ அப்படித்தான் அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள மனிதன் அனைத்தும் கடவுளே செய்கிறார் என்று கூறுவதும்.
ஞானி இதைக் கூறலாம்.அவர் அனுபத்தில் உணர்ந்துவிட்டார். நானும் கடவுளும் வேறல்ல என்பதை அனுபத்தில் உணர்ந்து பக்குவமடைந்துவிட்டார். நான் செய்கிறேன் என்ற அகங்காரம் அவரிடம் இல்லை.
ஆனால் சாதாரண மனிதன் அகங்காரத்தில் செயல்புரிந்துகொண்டிருக்கிறான்.
அப்படிப்பட்ட மனிதனின் மனதில் நான் செய்கிறேன் என்ற எண்ணம்தான் எப்போதும் நிறைந்திருக்கும்.
அகங்காரம் இல்லாமல் செயல் இல்லை.
ஞானி செயல்புரியும்போதுகூட அகங்காரம் வந்துவிடுகிறது.அதனால்தான் அவர் செயல்களிலிருந்து விலகியிருக்கிறார். செயல்புரிவதிலிருந்து விலகியிருக்கவே கையில் எப்போதும் தண்டம் வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த நிலையை அடைய அவர் எத்தனை ஆண்டுகள் தவம்செய்திருப்பார் என்பதை மனிதர்கள் அறிவதில்லை.
..
மனிதனிடம் அகங்காரம் இருப்பதுவரை சுயமுயற்சி என்பது மிகவும் முக்கியம்.
சுயமுயற்சியின் மூலமே அகங்காரமற்ற நிலையை அடைய முடியும்.
ஐந்து வயது சிறுவன் மருத்துவராகவேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை. ஆனால் அவசரப்பட்டதுதான் தவறு.
அவன் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். முடிவில் மருத்துவராகும் தகுதி வரும்.
அதேபோல இந்த உலகில் உள்ள அனைத்தும் கடவுளின் விருப்படிநடக்கிறது என்பதை புரிந்துகொள்ள பலகாலம் தவம்செய்ய வேண்டும்,பாடுபட வேண்டும்.
அப்படி இல்லாமல் எல்லாம் இறைவன் செயல்,நம் கையில் எதுவும் இல்லை என்று கூறுபவன் அந்த,ஐந்து வயது பாலகனை ஒத்தவனே.
..
சுயமுயற்சி என்பது முக்கியம்.
சக்தியை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்.
ஒரு மனிதன் ஆரம்பத்தில் பிறரின் கீழ் வேலை செய்கிறான்,பின்பு சுயமாக தொழில் செய்கிறான்,பின்பு பலருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாகிறான்,பின்பு அரசியலில் சேர்கிறான்,மக்களிடம் நன்மதிப்பை பெற்று பதவிகளில் அமர்கிறான்,முடிவில் முதல்வர்,பிரதமர் போன்ற உயர்ந்த பதவியை அடைகிறான்.
இவைகள் எல்லாமே கடின உழைப்பின் மூலம் கிடைக்கின்றன.தகுதியற்ற ஒருவன் உயர்ந்த பதவில் நீண்டநாட்கள் நிற்க முடியாது.
...
பசுமாட்டை மேய்ச்சல் நிலத்தில் மேயவிடும்போது,நீண்ட கயிற்றில் மாட்டை ஒரு மரத்தில் கட்டிப்போடுவார்கள். கயிறு எவ்வளவு தூரம் நீளமோ அந்த அளவுக்கு உள்ள புற்களை மாடுமேயும். சிலநேரங்களில் அந்த இடத்தில் உள்ள புற்கள் முழுவதையும் மாடுமேய்ந்துவிடும். அப்போது அந்த மாட்டின் உரிமையாளர் அந்த மாட்டை இன்னொரு மரத்தில் கட்டி வைப்பான்,அந்த மாடு அதை சுற்றியுள்ள இடத்தில் உள்ள புற்களைத்தின்னும்.
மாடு எந்த அளவுக்கு வேகமாக புற்களைத் தின்னுமோ அந்த அளவுக்கு புதிய இடங்களுக்கு அது செல்கிறது.
மெதுவாக தின்றுகொண்டிருந்தால் தினமும் ஒரே இடத்திலேயே அது கட்டி வைக்கப்படும்.
இதேபோல வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்பவன் புதுப்புது அனுபவங்களை வேகவேகமாகப்பெறுகிறான்,முயற்சி செய்யாதவன் இருந்த இடத்திலேயே இருக்கிறான்.
..
சுயமுயற்சி,முயற்சியற்ற நிலை இந்த இரண்டையும்பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.
சுயமுயற்சியின் மூலமே முயற்சியற்ற ஞானநிலை கிடைக்கிறது.
சோம்பேரிகள் மட்டுமே எல்லாம் தலையெழுத்துப்படி நடக்கின்றன என்று கூறுவான்.
முயற்சியுள்ளவன் எனது தலையெழுத்து என் கையில் என்று கூறுவான். அதுதான் உண்மை.
சக்தியின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க காலம் சுருங்கிக்கொண்டே வரும்.
...
முற்பிறவியில் நாம் செய்த செயல்களினால்தான் இந்த பிறவி ஏற்பட்டிருக்கிறது என்றால்,இந்த பிறவிக்கு காரணம் நாமா அல்லது கடவுளா? நாம்தான். 
நாம் இந்த பிறவியில் நற்செயல்களைச்செய்து முற்பிறவியின் பாவங்களை போக்க முடியும்.அப்படி இருக்கும்போது கடவுள்மீது பழிபோடுவது ஏன்?
..🕉️

No comments:

Post a Comment