Tuesday, February 2, 2021

ஆண்டவன் ஏன் மனிதர்களை படைக்கவேண்டும்?

✍️இறைவன் ஏன் மனிதர்களைப் படைக்கவேண்டும்? 
அவர்களுக்கு ஏன் துன்பத்தைக்கொடுக்கவேண்டும்? 
எதற்காக தீயவர்களை படைக்கவேண்டும்?
கடவுள் நினைத்தால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைக்கலாமே
எதற்காக இப்படிப்பட்ட நோயையும்,இயற்கை சீற்றங்களையும் கொடுத்து உயிர்களை துன்புறுத்தவேண்டும்?
இவைகள் எல்லோர் மனதிலும் உள்ள கேள்விகள்.
-
நாம் அடிக்கடி படிக்கும் ஒரு விஷயம் உண்டு.
கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்.அவர் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்.அவர் இல்லாத இடமே இல்லை. என்றெல்லாம் அடிக்கடி படிக்கிறோம்.ஆனால் அதுபற்றி சிறதும் சிந்திப்பதில்லை.மேலும் அதுபற்றி ஆழமாக படிப்பதும் இல்லை.
-
கடவுளே தேவர்களாகவும்,மனிதர்களாகவும்,விலங்குகளாகவும்,செடிகொடிகளாகவும்,
அனைத்துமாகவும் ஆகியிருக்கிறார்.
கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவனையும்,வைகுண்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணுவையுமே நாம் இறைவன் என்று வழிபட பழக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் இதையும் தாண்டி எங்கும் நிறைந்துள்ள கடவுளைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோம்.
-
இறைவன் மாயை(அறியாமை)யின் துணையினால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுமாக ஆகியிருக்கிறார்.
அவரே படைக்கும் தொழிலை செய்பவராகவும்.காக்கும்தொழிலை செய்பவராகவும்,அழிக்கும் தொழிலை செய்பவராகவும்,கோடிக்கணக்கான தேவர்களாகவும்,கிரகங்களாகவும்,சந்திர சூரியர்களாகவும்,பற்பல உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்.
இதில் பல படிநிலைகள் உள்ளன. சக்திக்கு ஏற்றபடி உயர்வு தாழ்வு உள்ளது.
அதிக சக்தியை பெற்றிருப்பவர்கள் மேல் உலகங்களில் வாழ்கிறார்கள்.
குறைந்த சக்தியைப்பெற்றிருப்பவர்கள் கீழ் உலகங்களில் வாழ்கிறார்கள்.
அதுதான் வேறுபாடு.
-
கடவுள் ஏன் இப்படி செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்ப முடியாது. 
ஏனென்றால் இந்த கேள்வியைக் கேட்பவரும் கடவுள்தான்.
இதற்கு பதில் சொல்பவரும் கடவுள்தான்.
கண்களை இறுக மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கத்தினால் இருட்டு விலகிவிடுமா? 
கண்களில் உள்ள துணியை நீங்கள்தான் கட்டினீர்கள். நீங்களே அதை அகற்ற வேண்டும்.
நாமே கடவுள் என்பதை அறியும்போது மாய உலகம் மறைந்துவிடும்.
அப்போது நம்மைநாமே கண்களால் கட்டிக்கொண்டோம் என்பது புரியும். 
யாரும் நமது கண்களைக்கட்டி இந்த உலகிற்குள்கொண்டுவிடவில்லை.
-
நமது சொந்த இயல்பை அறியவேண்டும்.
அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நமது சக்தியை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். 
மனிதனாக இருப்பவன் தெய்வமாக உயரவேண்டும் பின்பு இன்னும் உயர்ந்து பிரம்மமாகவேண்டும்.
அப்போது நானே அனைத்துமாக இருக்கிறேன் என்ற அனுபவம் உண்டாகும். 
நமது உடல் பிரபஞ்ச உடலாக,எல்லையறற்ற உடலாக மாறிவிடும்.
இதை பகவத்கீதை யோகமார்க்கம் என்கிறது.
-
இன்னொரு வழி, நமது சக்தியை குறைத்துக்கொண்டே வரவேண்டும். முடிவில் சக்தியற்ற நிலையை அடையவேண்டும். சக்தியை சூன்யநிலைக்கு கொண்டுவரவேண்டும். அப்போது நமது சொந்த இயல்பு வெளிப்படும். நான் செயலற்றவன் என்பது அனுபவமாகும்.
இதை சந்நியாச மார்க்கம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்
-
முதல் வழியில் செல்பவன் எல்லையற்ற சக்தியை அடைகிறான்.
இன்னொரு வழியில் செல்பவன் சக்தியின் ஒடுக்கநிலையை அடைகிறான்.சிலர் சூன்யம் என்கிறார்கள்..
இந்த இரண்டு வழிகளில் செல்பவர்களும் நானே கடவுள் என்பதை அனுபவத்தில் உணர்கிறார்கள்.
-
முதல் வழியில் செல்பவர் தேவைப்பட்டால் மீண்டும் மனிதனாகப்பிறந்து மனித குலத்திற்கு நன்மை செய்ய முடியும். அவரையே அவதாரபுருஷர்கள் என்று மக்கள் வழிபடுகிறார்கள்.
இன்னொரு வழியில் செல்பவர் மீண்டும் பிறப்பதில்லை.
-🕉️

No comments:

Post a Comment