Friday, November 29, 2024

விதியின் பாதை மாற்ற கடவுள் மட்டுமே உதவி செய்வார் என்ற கதை.

அவர் ஒரு பிரபல ஜோதிடர். 
அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.
“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.
பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  
எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.
“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”
“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன்.  
பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.
இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.
வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.
அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.
மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.
அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார்.  
கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.
அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.
இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.
வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.
மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  
அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.
ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்?  
இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.  
ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.
ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.
மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.
ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.
*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.
நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.
சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது !
. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு.
🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment