நவக்கிரகங்களினால் நாம் அடையும் நன்மைகள்
நமது வழிபாடு முறையில் சூரியன் முதல் ராகுவரையில் அமைந்த நவகோள்களை திருக்கோயில்களில் ஒன்பது முறை வலம் வந்து வழிபாடு செய்கிறோம் அல்லவா? ஜாதக கட்டங்களில் வேறு வேறு இடங்களில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்திடும் அல்லது நமது வாழ்வினை விதித்த விதி வழியே நடத்திச் செல்லும் இந்த நவகோள்கள் இயல்பாகவே பல விதத்திலும் நமக்கு நன்மைகளைச் செய்பவையேயாகும். ஒவ்வொரு கிரகமும் நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்கிறது என்பதைக் காண்போம்.
சூரியன்: நினைத்த காரியத்தை செய்யும் ஆற்றல் தைரியம், உடலாரோக்கியம், ஆகியவைகளைத் தருகிறார். கண் வலி, இருதயவலி, மஞ்சள் காமாலை ஆகிய வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறார். காலையில் குளித்து முடிந்ததும் சூரியனை வழிபடுவர்களுக்கெல்லாம் மேலே சொன்ன நன்மைகளைச் சூரிய பகவான் தருகிறார்.
சந்திரன்: நமக்கு ஏற்படும் அன்றாடப் பிரச்னைகளை நல்ல முறையில் ஒழுங்குபடுத்தி, செல்வச் சேர்க்கையினை சந்திர பகவான் தருகிறார்.
செவ்வாய்: எதிர்ப்புகளில், மறைமுக கவிழ்ப்பு வேளைகளில் இருந்து நம்மைக் காத்து, நமக்கு பூமி, வயல், வீடு, பசு பயிர் பச்சை லாபங்களை அங்காரக பகவான் தருகிறார். சுருக்கமாச் சொல்லப்போனால் செவ்வாய் நமது வாழ்வின் செழிப்பிற்கு உதவுகிறார்.
புதன்: சிறந்த கல்வியாளர்களாக, கவிஞர்களாக தாம் செல்லுமிடமெல்லாம் தனது அறிவாற்றலை அமைதியான போக்கினால் வெளிப்படுத்துதல். அறிஞர்களின் மதிப்பை பெறுதல், அடிப்படை ஜோதிட அறிவினைப் பெறுதல் ஆகிய கல்வி - அறிவு நலன்களை அவரவர் விருப்பப்படி அடைந்து பிரகாசிக்க புத பகவான் உதவுகிறார்.
குரு: புத்திர பாக்கியம், மாங்கல்ய பலம் எனச் சொல்லப்படுகிற தாலி பாக்கியம் தருவதுடன், வாழ்க்கைச் சிக்கல்களை எதுவானாலும் போக்கி நமக்கு நல்லதோர் வாழ்க்கையினை குருபகவான் அமைத்துக் கொடுக்கிறார். இதனாலேயே நம்மில் அநேகர் தட்சிணாமூர்த்தி வழிபாட்டினைச் செய்கிறோம். குருபெயர்ச்சி பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஒவ்வொரு ஆண்டும் நாம் காட்டும் ஆர்வத்திலிருந்தே நமது வாழ்க்கை அமைப்பில் குருவுக்குரிய முக்கியத்துவம் தெரியவரும்.
சுக்கிரன்: சுகமான இல்வாழ்க்கையினையும், லட்சுமி கடாட்சத்தையும் புத்தாடை அணிகலன்களின் சேர்க்கையையும், செல்வ வளத்தினால் சமூகத்தில் அந்தஸ்தையும், ஆயுள் விருத்தியையும் சுக்கிர பகவான் தருகிறார். நமக்கு திடீர் தனப்பிரட்தியை தருவர் இவரே. அதனாலேயே வாழ்க்கை வசதிகள் ஒருவனுக்கு அதிகரித்துச் செல்வதைப் பார்க்கும் பொழுது, அவருக்கு சுக்கிர தெசை எனப் பாராட்டுகிறோம்.
சனி: வாழ்க்கையை அனுபவிக்க முக்கியமாகத் தேவைப்படுவது தீர்க்காயுள், பொதுவாக மனிதன் இருப்பதற்கு உதவும் உடலாரோகியத்தை சனிபகவான் தருகிறார். நீண்ட ஆயுளும், உடலாரோகியாமும் உடையவனே செல்வங்களை தனது சுயமுயற்சியால் அடைவதற்கு இயலும் இவ்விதத்தில் வாழ்விற்கான அடிப்படை சனிபகவான் வழங்குகிறார். இந்த அடிப்படைச் குறைந்தால் வாழ்க்கையில் பலவித இன்னல்களை அனுபவிப்பார்.
நீண்டகாலம் (2 1/2 ஆண்டுகள்) ஒவ்வொரு ராசிவீட்டிலும் சஞ்சரித்து ஒருவரது வாழ்க்கையினை உயர்த்தக்கூடிய அல்லது தாழ்த்தக்கூடிய ஆற்றல் சனிபகவான் ஒருவருக்கே பட்டா பாதியுமாக உள்ளது.
ராகு: நோயற்ற வாழ்வையும், திடீர் அதிருஷ்டத்தையம், எதிர்பாராத சரிவுகளையும் தருபவர் ராகுபகவான். ராகுவின் அருள் பெற்றவர்களே விஷ பயமின்றியும், திரண்ட செல்வத்தையும், பூரண இல்வாழ்க்கை சுகத்தையும் அடைய முடியும் என பண்டைய ஜோதிட நூல்களில் சொல்கின்றன. ராகுவைப்போல் கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட சாஸ்திர பழமொழிகளில் ஒன்றாகும்.
கேது: புத்தியால் சுக விருத்திக்கான ஞானத்தை கேது பகவான் தருகிறார். நமக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் பீடைகள் எனப்படுகிற துன்பங்களை நீக்கி உயர்ந்த அறிவாற்றல், வெற்றி, துணிவாகச் செயல்படும் திறமை ஆகியவைகளை கேதுபகவான் தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறார்.
எனவே ஜாதக தோஷங்களை எளிதில் போக்கிக்கொள்ள உதவும் வகையில் திருக்கோயில்களில் நவக்கிரக வழிபாட்டினை நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எதிரியைக் கூட சமயமறிந்து பாராட்டினால் நன்மைகளைச் செய்வான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நவகிரக வழிபாடு அமைந்துள்ளது எனக் கருதலாம்.
No comments:
Post a Comment