பரிகாரம் உண்மையா? (மறுபதிப்பு)
பகுதி – 1
நமது வாழ்கையில் சில காரியங்கள் நடை பெறுவதில் கால தாமதம் ஏற்படும் பொழுது அல்லது நடக்காமல் இருக்கும் பொழுது, இந்த தடையை நீக்குவதற்கு, அல்லது தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் பலவித பரிகாரங்களை செய்து வருகின்றோம். இந்த பரிகாரம் உண்மையா?
“பரிகாரம்” இதன் உண்மையான சொல் “மன சாந்தி பரிகாரம்” ஆகும். அதாவது மனதை சாந்தி செய்வதே இதன் உண்மையான நோக்கம். ஒரு செயலை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தருவதே பரிகாரம் ஆகும். பரிகாரம் செய்தால் உறுதியாக தடைகள் நீங்கி விடுமா என்றால் யாராலும் உத்தரவாதம் தர முடியாது. ஆனால் பரிகாரம் பொய் என்றும் கூற முடியாது.
உதாரணமாக கிராமத்தில் வசிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது மருத்துவர் கொடுக்கும் மருந்து, மாத்திரையை விட அவர் போடும் ஊசிக்கு வலிமை அதிகம், ஊசி நோயை உடனே சரிபண்ணிவிடும். இந்த மாதிரி நம்பிக்கை உடையவர்களுக்கு எத்தனை மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும் காய்ச்சல் போகாது. அதே காய்ச்சலுக்கு ஒரு மருத்துவர் வெறும் தண்ணீரை (Distilled Water) ஊசி என்ற பெயரில் போட்டால் கூட, உடனே அவரது காய்ச்சல் போய்விடும். இது எப்படி சாத்தியம் என்றால், அந்த நோயாளியின் நம்பிக்கை தான். இதே போல்தான் பரிகாரமும்.
பரிகாரம் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்ப கூடியவர்களுக்கு பரிகாரம் செயல்படும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நமது பிரச்சனையை கடவுளிடம் கூறினால் கடவுள் சரிபண்ணிவிடுவார் என்பது ஒரு நம்பிக்கை. அதேபோல் பரிகாரம் பிரச்சனையை சரிபண்ணும் என்பதும் நம்பிக்கைத்தான். (It is just a Psychology)
ஆனால் இன்றைய ஜோதிடர்களுக்கு ஜாதகம் பார்த்து வரும் வருமானம் பத்தவில்லை என்பதால் விதவிதமான பரிகாரங்களை மக்களிடம் திணித்து வருகிறார்கள். இவ்வாறு திணிப்பதால் எந்த பலனும் இல்லை. நாங்கள் எல்லா ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களையும் செய்து விட்டோம் இருந்தும் திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, நோய் சரி ஆகவில்லை என்று புலம்புகிறார்கள், மக்களிடம் பரிகாரத்தின் மேல் ஒரு வெறுப்பும் ஏற்படுகிறது.
எனவே எதாவது பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறோம் என்று கேட்பவர்களுக்கும், பரிகாரத்தின் மேல் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டும் பரிகாரம் கூறுங்கள் தவறு இல்லை.
இந்தியாவில் Psychologist தேவை அதிகம் இல்லை, காரணம் ஜோதிடர்கள் Psychologist வேலையை செய்து விடுகின்றனர் என்பதே எனது கருத்து. நமது வாடிக்கையாளர்களின் பிரச்சனையை ஜோதிடர்கள் காது கொடுத்து கேட்கின்றனர். இவ்வாறு தனது பிரச்சனையை குடும்ப ஜோதிடரிடம் மனம் விட்டு கூறிவிட்டால் மன வலி வேதனை குறைந்து விடுகிறது. அதேபோல் பரிகாரம் தன் நம்பிக்கையையும் தருகிறது. ஒரு ரூபாய் அகல் விளக்கு கூட நம்பிக்கை உடையவர்களுக்கு நல்ல பரிகாரம் தான், பல தடைகளை உடைத்துவிடும்.
எனவே பரிகாரம் என்பது மன பலமே !
பரிகாரம் பகுதி – 2
ஜோதிடத்தை தொழிலாக செய்தால் குடும்பம் விளங்காது, ஜோதிடரின் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற கூற்று உண்மையா? உண்மைதான். அநேக ஜோதிடர்களும், அவரது குடும்பத்தினரும் பாதிகப்படுகிறர்கள். ஏன்? எப்படி?
முதல் காரணம், மனிதனுடைய மூளையில் நடந்து முடிந்த பதிவுகள் (Past) மட்டுமே இருக்கும், நடக்க இருப்பது (Future) பிரம்ம ரகசியமாகவே இருக்கும். ஆனால் ஆதி முதல் மனித குலம், நடக்க இருப்பதை முன்கூட்டியே எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என பல முயற்சிகள் செய்த வண்ணம் இருக்கிறார்கள், அதில் ஒன்றுதான் ஜோதிடம். நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் தன்னை தற்காத்து கொள்ளலாமே என்கிற நப்பாசைதான்.
சுமார் 5000 ஆண்டு காலமாக வானவியல் அறிஞர்கள், வானில் உள்ள கோள்களுக்கும் மனிதனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கோள்களுக்கும் மனிதனுடைய செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, இதனை நமது முன்னோர்கள் முதல் இன்று வரை உள்ள வானவியல் ஜோதிடர்கள் நிருபித்து இருகிறார்கள். வானில் உள்ள கோள்களுக்கும் மனிதனுடைய மூளைக்கும் எதோ தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. ஒரேடியாக தொடர்பு இல்லை என மறுக்கவும் முடியாது.
அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து விட்டபோதிலும், ஜோதிட கலை அழிந்து விடவில்லை, மாறாக ஜோதிடம் இன்றும் வளர்ந்து வரும் ஒரு கலையாக உள்ளது. ஜோதிடம் பொய்யாக இருந்தால் இந்நேரம் எத்தனையோ கலைகள் அழிந்து விட்டது போல் ஜோதிடமும் அழிந்து இருக்கும். இன்றளவும் உலகில் பல கோடி மக்கள் ஜோதிடத்தை மிகவும் நம்புகின்றனர்.
மனித குலத்திற்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவிப்பவனே ஜோதிடன் ஆவான். நடக்க இருப்பதை முன்கூட்டியே கூறுவது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகும். ரகசியமாகவே இருக்க வேண்டிய விஷயங்களை, வெளிபடுத்துவது ஒரு குற்றம், அதற்கு பரிகாரம் சொல்லுவது அடுத்த குற்றம் ஆகும். எப்படி என்றால் கோள்கள் அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்து வருகிறது. அதை செய்ய விடாமல் தடுப்பது ஒரு குற்றம்தானே.
உலகை படைத்த கடவுள் மனிதனுடைய பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை கோள்களிடம் ஒப்படைத்து உள்ளார் என கூறலாம். அந்த கோள்களின் செயல்பாடுகளை பரிகாரத்தின் மூலம் தடுப்பதினால், அந்த கோள்களின் கோபம் ஜோதிடன் மேல் கண்டிப்பாக திரும்பும். அதனாலேயே ஜோதிடன் பாதிக்க படுகிறான். இந்த விஷயம் அநேக ஜோதிடர்களுக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் செய்கிறார்கள் என்றால் புகழுக்கு மயங்குவதால்தான்.
பொதுவாக ஜோதிடகள் தான் கூறும் ஒருசில பலன்கள் நடந்து விடுகின்ற பொழுது ஒருவித போதையில் சிக்கி கொள்கிறார்கள், அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாது.
பரிகாரம் பகுதி – 3
ஒரு ஜோதிடர் நல்ல பலன்களை மட்டும் கூறு வருவாரேயானால் வாடிக்கையாளர்கள் பரிகாரம் கேட்பதில்லை. ஆனால் வர இருக்கும் தீய பலன்களை ஒரு ஜோதிடர் கூறினால் அதை தடுக்க, பரிகாரம் கூறுங்கள் என்று வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். பரிகாரம் கேட்பவர்களிடம் எப்படி பரிகாரம் ஒன்றும் இல்லை, உன் விதியை வாசித்தேன் அவ்வளவுதான் என்று சொல்ல முடியுமா? சொன்னாலும், வாடிக்கையாளர்கள் விட்டு விடுவார்களா?
மருத்துவரின் வேலை நோயை கண்டுபிடித்து கூறுவது மட்டும் அல்ல, அதற்கு மருந்து கொடுப்பதும் தான். அதேபோல் ஒரு ஜோதிடர் பிரச்சனை வரப்போகிறது என்று சொன்னால் மட்டும் போதாது, அதற்கு நிவர்த்தியும் கூறவேண்டும். இதுவே தொழில் தர்மமும் ஆகும். சரி வாடிக்கையாளரை பிரச்சனையில் இருந்து பரிகாரம் கூறி காப்பாற்ற வேண்டும், இந்த செயல் எது போன்றது தெரியுமா? ஒருவன் மூட்டையை தூக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் இறக்க குணம் அவரை காப்பாற்ற துடிக்கிறது, அவன் முதுகில் இருந்து நீங்கள் அந்த மூட்டையை தூக்கி இறக்கி வைத்தால் தான் அவனை காப்பாற்ற முடியும். ஆக நீங்கள் அந்த மூட்டையின் பாரத்தை சிறுது நேரம் தூக்க வேண்டியது வரும். இதுதான் நாம் கொடுக்கும் பரிகாரத்தில் உள்ள சிக்கல்.
எனவே ஒரு ஜோதிடர் மற்றவர்களுக்கு பரிகாரம் கூறவேண்டுமானால், முதலில் தனக்குதானே பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். நெருப்பில் உள்ளவர்களை காப்பாற்ற தீ அணைப்பு வீரர்கள் தற்காப்பு கவசம் அணிந்து கொள்வது போல, ஜோதிடர்களும் தனது தற்காப்புக்கு பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இயற்கையின் மாற்றங்களை உணரும் சக்தி விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் உண்டு. குறிப்பாக பசு மாடு, யானை, குதிரை, நாய் போன்ற மிருகங்களுக்கு இயற்கையின் மாற்றம் அதிகம் தெரியும். உதாரணமாக 2004 ம் ஆண்டு சுனாமியில் மேற்கண்ட நான்கு மிருகங்களும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிருகங்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஜோதிடர்கள் வெல்லம், அகத்திக்கீரை, வாழைப்பழம் இம்முன்றும் கொடுத்து வந்தால் ஜோதிடருக்கு பிரச்சனை வராது தற்காத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடருக்கும், அவரது குடும்பதிற்கும் நிச்சயமாக பாதிப்பு வரும், எப்பொழுது வரும் என்றால் ஜோதிடரின் பலவீனமான தசாபுத்தி காலங்களில் வரும்.
இவ்வாறு தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் துன்பத்தை தனது தனது துன்பமாக கருதும் ஜோதிடர்களை, மக்கள் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து “தெய்வக்ஞன்” என அன்போடு அழைகின்றனர்.
நன்றி ! அன்புடன்.
No comments:
Post a Comment