"முன் ஜென்ம ஆசை "
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது. தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது. நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்று விடுகிறேன். அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை. ஆனால் என் படுக்கையில் அவர் படுத்து உறங்குகிறார் என கர்வமாக ஆதிசேஷன் கூறியது. ஐயன் மெல்லிதாகப் புன்னகை புரிந்தார். திரேதாயுகத்தில் ராமனாக விஷ்ணுவும், லட்சுமணனாக ஆதிசேஷனும் அவதரித்தனர். கைகேயி தசரதரிடம் கேட்ட வரத்தின்படி, ராமர் சீதை, லட்சுமணனுடன் வனவாசம் செய்யப் புறப்பட்டார். கங்கைக் கரைக்கு வந்தார். இரு கரையும் புரண்டு ஓடும் நதியை எவ்வாறு தாண்டுவது என யோசித்தார்.
அப்போது குகன் தன் படகுடன் அங்கு வந்தான். அவன் ஒரு நிபந்தனையின் பேரில் அவர்களை அக்கரையில் சேர்க்க ஒப்புக் கொண்டான். ஐயனே ! நான் ஒரு சாதாரண படகோட்டி. இதை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். உங்கள் பொற்பாதம் பட்டு கல்லும் பெண்ணாக ஆனது. உங்கள் கால்பட்டு என் ஓடமும் பெண்ணாகிவிட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். ஆகையால் உங்கள் காலை நன்றாக அலம்புகிறேன். பிறகு நீங்கள் படகில் ஏறலாம். எனக்கு உங்கள் பாதம் கழுவ அனுமதி அளிக்க வேண்டும் என பிரார்த்திக்க ராமரும் சம்மதித்தார். குகன் மிக சந்தோஷமாக ராமர் பாதத்தை அலம்பினார். குகனே முற் பிறவியில் முதலையாக இருந்தார். அப்போது யதேச்சையாக லட்சுமணனைப் பார்த்தார் ராமர். அந்தத் தருணத்தில் ராமர் இருவருக்கும் பூர்வ ஜன்ம ஞாபகத்தை ஏற்படுத்தினார். உடனே லட்சுமணனுக்கு சினம் ஏற்பட்டது. என் முன் இந்த அற்ப முதலை ஐயனின் காலை அலம்புவதா? என்று அகங்காரத்துடன் குகனைப் பார்த்தார். குகன், இப்போது உன்னால் என்னை என்ன பண்ண முடியும்? என்பது போல் சிரித்துக் கொண்டே இன்னும் அதிக நீர் விட்டு ஐயனின் பாதத்தை ஆசை தீர அலம்பினார். ராமர் சட்டென்று அவர்கள் பூர்வ ஜன்ம நினைவை மறைத்துவிட, இருவரும் சாதாரணமாக மாறினர். பக்தனின் மனப்பூர்வமான ஆசையை, அது விலங்கானாலும் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை...
No comments:
Post a Comment