Sunday, May 30, 2021

சித்தர் பட்டினத்தார் உடைய கருத்துள்ள பாட்டு.

*சித்தர் பாடல் - பட்டினத்தார்..!*

"நாட்டம் என்றே இரு! சற்குரு
பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றே இரு! பொல்லா
உடலை: அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றிரு சுற்றத்தை
வாழ்வைக் குடம் கவிழ் நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே
உன்னக்குபதேசம் இது."

- பட்டினத்தார் -

"உண்டென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காம
லே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு
உப தேசம் இதே"

- பட்டினத்தார் -

மேலே சொல்லப்பட்ட இரண்டு பாடலும் பட்டினத்தார் தன் மனதிற்கு தானே சொல்லிக் கொள்வது போல அமைந்துள்ளது.

உண்மையை உணர்ந்த ஒழுக்கமுள்ள குருவின் உபதேசங்களை நம்பு, அவர் திருவடிகளை தொழு,

உனது உடலும், உறவுகளும், செல்வமும் நிலையானது என்று நம்பாதே ,

அப்படி நம்பினால் உடலை வளர்க்கவே பாடுபடுவாய்.

இந்த உடல் தோன்றி மறையும் பொம்மலாட்டம் என்று எண்ணு. 

குடத்தைக் கவிழ்த்ததும் ஓடி மறையும் நீர் போல நிலையற்றது செல்வம் என்று உணர்ந்துகொள். 

இந்த உண்மையை மறவாமல் எண்ணியிருந்தால் பாவம் செய்யாமல் நன்மை செய்து வாழ முடியும்.

மனமே! நான் உனக்கு செய்யும் உபதேசம் இதுவே, என்று சொல்லும் பட்டினத்தார்....

தொடர்ச்சியாக

யாராக இருந்தாலும் முதலில் தன்னை ஒரு ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும், 

நேர்மையான வழியில் நடத்தல் வேண்டும், 

தீய வழியில் நடந்து கொண்டு, பிறருக்கு உபதேசம் செய்பவர் சொல்லும் சொல்லுக்கு மதிப்பிருக்காது,

அகந்தையை விடுங்கள், பஞ்சமா பாதகரின் கூட்டுறவு வேண்டாம், 

பாவ செயல்களில் இருந்து விலகியிருப்போம்,

நல்லவர்களை குறை கூறாது அவர்தம் நட்பை நாடுவோம், 

பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு நன்னடத்தை முதன்மையானது, 

எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாய் நன்றாய் இருப்பதே சிறந்தது.

இந்த உண்மைகள் பட்டினத்தார் பாடல்களில் நமக்கு விளங்குகின்றன. 

இதுவே பண்டைத்தமிழர் பின்பற்றிய ஒழுக்க நெறி.

புதிய மனிதனாய் எழுந்து பாருங்கள்.....

சித்தர் பட்டினத்தார் திருவடிகளே போற்றி..!

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

No comments:

Post a Comment