#உணர்ச்சிநெரிசலில் (#EmotionalStampede) சிக்கி கொத்துக்கொத்தாக இறந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள்.
வியாதியினால் இறப்பவர்களை விட, பீதியினால் இறப்பவர்களே அதிகம் இருக்கக் கூடும் என நம்புகிறேன்.
பயமும் பதட்டமும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு இளைஞனுக்கே கூட, அவனது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை (#Cortisol) தூண்டும். அதனால் உடல் வெப்பநிலையை அதிகரிக்க வைக்கும். காரணம் உடல் வெப்பநிலையை மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் (#Hypothalamus) என்ற பகுதிதான் கட்டுப்படுத்துகிறது.
"சூடு உடம்பு" என்று சொல்வார்கள், கேள்விப்பட்டிருப்போம். "இவன் உட்கார்ந்து எழுந்தால், அந்த இடமே சூடாக இருக்கும்," என்றும் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இயற்கையாகவே பதட்ட சுபாவம் (#Anxious_Personality)உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஹைப்போதலாமஸ் மிதமாக வேலை செய்து கொண்டிருப்பதால், உடலில் சுரக்கும் அட்ரினல் என்னும் ஹார்மோன் உடல் வெப்பநிலையை கொஞ்சம் சூடாகவே வைத்திருக்கும். ஆனால் அவர்களுக்கு தெர்மாமீட்டரில் டெம்பரேச்சர் அளவிடும்போது நார்மலாகத் தான் இருக்கும்.
மேலும் அந்த ஆரோக்கியமான இளைஞனுக்கு பயமும் பதட்டமும்
உடல் வெப்பநிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல்...
நெஞ்சு படபடப்பு(palpitation), அதீத உடல் அசதி(Severe fatigue), மூச்சுத்திணறல் (breathing difficulty) ஆகியவற்றை ஏற்ப்படுத்தும்.
பதட்ட குணம் இல்லாதவர்களுக்கே கூட மேலே சொன்ன அறிகுறிகள் வரும் எனும்போது,
இயல்பாகவே பதட்ட சுபாவம் கொண்டவர்களுக்கு..., இந்த பயமும் பதட்டமும் பீதியாக(PANIC) மாறி இந்த அறிகுறிகளை பன் மடங்கு அதிகப்படுத்தும். ஆகையினால் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு கணமும்
"இதனால் என்ன ஆகுமோ?, நம் அன்புக்குரியவர்களை பறிகொடுத்து விடுவோமோ?, நாம் பலியாகிவிட்டால் நம் குடும்பத்தை யார் பார்ப்பது?,"
என்பன போன்ற, அதீத கட்டுப்படுத்த முடியாத துளைத்தெடுக்கும் எண்ண ஓட்டங்கள்( #irresistible intrusive thoughts), அவர்களுக்குள் மேலும் மேலும் ஸ்ட்ரஸ் ஹார்மோன்களை சுரக்க வைத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்து, காய்ச்சல்-கோல்டு (Fever &cold) போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
உள உளைச்சல் சில நேரங்களில்
காமன் கோல்டு, முதல் கேன்சர் வரை
காரணமாகவும் பல நேரங்களில் பிரச்சனையை அதிகரிப்பதாகவும், ஆராய்ச்சிகள் சொல்கின்றன(#PsychologicalDistress can cause a cold or aggravate the seriousness of cancer progression).
சூழ்நிலைகளில் ஏதேனும் பதட்டமடையச் செய்யும், கவலையுரச் செய்யும் நிகழ்வுகள் நடக்கும்போது
ஒரு கட்டத்தில்......
ஸ்ஸ்ஸஸபாபா.....என்று பெருமூச்சு (Sighing Respiration) விடுவோமல்லவா?
அப்படி பெருமூச்சு விடுவதற்கு முன்பாக நம் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளுக்கு, நாம் இழுத்துவிடும் அந்த ஒரு பெரிய மூச்சு....
நாம் இன்று மூச்சுப்பயிற்சி என சொல்கிறோமே?, அதை உடல் இயற்கையாகவே செய்யும் ஒரு பாதுகாப்பு செயலே (defence mechanism) ஆகும்.
சிறுவயதில் நான் பெருமூச்சு விடும் நேரங்களில் எனது பாட்டி,
"ஏண்டா பெருமூச்சு விடுற வீட்டுக்கு தரித்திரியம்டா," என்று சொல்வார்கள். அதன் அர்த்தத்தை நான் யோசித்துப் பார்க்கும்போது... அந்தப் பாட்டி மறைமுகமாக அந்த காலத்தின் அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப,
"செல்லம் பயப்படாதடா" என்று சொல்வதற்கு பதிலாக, அந்த பாட்டி கொஞ்சம் அதட்டி பயப்படாமல் இருக்கச் சொல்லும் ஒரு ஆலோசனையோ? என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த இடத்தில் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று குழம்பாதீர்கள். நான் பலமுறை சொல்வதுண்டு. "நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை, ஆனால் அதை சொல்லி இன்றைய நவீன உணவு முறையை மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் மனிதர்கள் முட்டாள்கள் தான்".
இந்த உணர்ச்சி நெரிசலை பத்திரிகைகளும், சமூக வலைதளங்களும் செய்தி சேனல்களும் பன்மடங்கு அதிகப்படுத்தும் சமூக அவலத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது.
ஸ்டாம்பீட் ( Stampede) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றால், கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு அல்லது மூச்சுத்திணறி உயிரை இழப்பது அல்லது பெரும் உடல்-உள காயங்களுடன் தப்பித்து வருவது. உதாரணமாக 1996 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலில் ஒரு தீ விபத்து நடந்தது. அப்போது கோயில் வளாகத்துக்குள் இருந்த சில நூறுபேர் பீதியில், தப்பிக்கும் முயற்சியில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறும் ஒரே ஒரு நுழைவாயிலை நோக்கி அத்தனை பேரும் ஓடினார்கள். அப்போது அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் அதிகமானோர் இறந்து போனார்கள், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். அதில் இறந்தவர்கள் ஒருவர்கூட தீயினால் கருகி இறந்தவர்கள் அல்ல. தீயினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் தான்.
அதேபோல இன்றைய கொரோனா நோய் 135 கோடி பேர் வாழும் இந்திய தேசத்தை தாக்கும்போது... கொத்துக் கொத்தாக பிணங்கள் கிடப்பது, அதை எரிப்பதற்கு சுடுகாடுகள் நிரம்பி வழிவது, பிணங்களை ஆற்றில் எரிவது போன்ற நிகழ்வுகளை ஊடகங்களின் வாயிலாக காணும் மனிதர்கள் பீதியடைந்து, உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை சுரக்க வைத்து, உணர்ச்சி நெரிசலில் சிக்கி அதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் கொரோனா நோய்க்கான அத்தனை அறிகுறிகளையும் அப்படியே வெளிப்படுத்தும் பட்சத்தில்... அதற்கான தீர்வு தேடி அலையும்போது அந்த அலைச்சல்-உளைச்சலாலேயே பலருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், மிதமாக தொற்று ஏற்பட்வர்கள் அந்த அலைச்சல் நேரத்தில் உடலுக்கு நீரும், காற்றும் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தாகவே முடிந்துவிடுகிறது.
நேற்று ஒரு 34 வயது இளைஞன், கடந்த 2 மாதங்களில் ஆறு தடவை RT-PCR பரிசோதனை செய்திருக்கிறான். கொரோனா உடலில் வந்ததற்கான அத்தனை அறிகுறிகளும் இருக்கிறது.
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பார்க்கிறான்.
உடல் வெப்பநிலை 96, 97, 98 மாறி மாறி வருகிறது. PULSE-OXYMETERல் நாடித்துடிப்பு 95, 100, 110 என மாறி மாறி வருகிறது. ஆக்சிஜன் அளவு 99, 100, 96 என மாறி மாறி வருகிறது. இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் அந்த இளைஞன், நிலைகுலைந்து போயிருக்கிறான். தன்னால் தன் குடும்பத்துக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தன்னை தனி அறையில் அடைத்து கொண்டு தூக்கமில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். உறவினர்களும் நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும்...
"பயப்படாதேடா!"
என்பதை பல்வேறு கோணங்களில் அந்த அறையின் ஜன்னல் வழியாக மாற்றி மாற்றி அறிவுரைகளையும் ஆறுதல்களையும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் அனைத்தும் அவனுக்கே புரிகிறது.
'தான் தேவையில்லாமல் அதிகமாக பயப்படுகிறோம்'
'தேவையில்லாமல் பரிசோதனைகள் செய்கிறோம்'
என்பது நன்றாகவே அவனுக்குத் தெரிகிறது. அவனுக்கு தெரியும் அதே விஷயத்தை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் சொல்லும்போது..
எனக்கே தெரிகிறதே?, ஆனால் அவர்கள் சொல்லும்படியாக என்னால் இருக்க முடியவில்லையே?! நான் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்கிறேனே?, நான் உளைச்சல் அடைவது மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்தையும் உளைச்சல் அடையச் செய்கிறேனே?, நாம் உயிருடன் இருப்பதால் தானே நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் உளைச்சல்!?."
என்பன போன்ற எண்ணங்கள் வந்து தற்கொலை முயற்சி செய்து காப்பாற்ற பட்டிருக்கிறான்.
நான் மனநல மருத்துவத்தில் நிபுணன் அல்ல, ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தினமும் இத்தகைய மன உளைச்சலினால் ஏற்படும் உடல் உபாதைகளை (Psychosomatic distresses) ஆர்வத்துடன் பார்த்து சிகிச்சை கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த கட்டுரையின் வாயிலாக நான் சொல்ல வருவது.... நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், zinc, vitaminC, வைட்டமின் டி போன்ற சப்ளிமெண்ஸ்(supplements) கொடுப்பதைப் போல, இந்த பெருந்தொற்றின் உச்சநிலை குறைந்து இயல்பு நிலைக்கு வரும் வரை....
மிகுந்த கட்டுப்பாட்டுடன் (strict guidelines) சில மனப் பட்டத்திற்கான மருந்துகளை, சில மாதங்களுக்கு கொடுத்து அதை படிப்படியாக குறைத்து அடுத்த சில மாதங்களில் நிறுத்திவிடலாம்.
சில வளர்ந்த நாடுகளில்
மனச்சோர்வுக்கான மருந்துகள் (#SSRI) கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பதாகவும், ஏற்பட்டவர்களுக்கு நோயின் தன்மை தீவிரமடைவதை தடுப்பதாகவும் ஆங்காங்கே சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
நம் தேசத்தில் ஒரு துறையில் நிபுணன் என்றால், அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட பெரும் இன்ஸ்டிடியூஷன்களில் வயது மூப்பின் காரணமாக தலைமையில் இருப்பவர்கள் தான். அவர்கள் ஒருங்கிணைந்து இது மாதிரியான ஆலோசனைகளை கொடுத்தால்தான் அரசாங்கங்கள் செவிசாய்க்கும்.
ஒரு தனியார் மருத்துவர் சொல்வது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விஷயங்களில் நூற்றில் நூற்றி ஒன்றாகத்தான் பார்க்கப்படும். ஆகையினால் அரசாங்கங்கள் மனநல மருத்துவ நிபுணர்களை கூட்டி இத்தகைய பரிந்துரைகளை, பெரும் சமூகத்திற்கு ஒரு supplementஆக சில மாதங்களுக்கு கொடுப்பதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்தலாம்.
Dr P. ஆனந்தன். MBBS, DPM, FIPS
Fellow: European Association of Psychosomatic Medicine
மனநல மருத்துவர்
08/05/2021.
No comments:
Post a Comment