Friday, March 5, 2021

சூலினி தேவி துர்காவின் சிறப்பு அம்சங்கள்.

சூலினி துர்க்கையின் சிறப்புகள் ..

மூன்று அங்கங்களுடன் கூடிய சூலத்தைக் கையில் ஏந்தியுள்ள தால் சூலினி துர்க்கை என இத்தேவி வழிபடப்படுகிறாள். சூலம், பாணம், கத்தி, சக்கரம், சங்கு, கதை, வில், பாசம் இவற்றைக் கைகளில் தரித்துக் கொண்டருளும் அம்பிகை இவள். உயரமான கிரீடத்தைக் கொண்டவள்.

மேகம் போன்ற நிறத்தினள். அணிகலன்களை அணிந்து அழகே உருவாய் தோற்றமளிக்கும் இத்தேவி சிம்மத்தை தன் வாகனமாகக் கொண்டவள். கத்தி, கேடயத்துடன் கூடிய ஜெயா, விஜயா, பத்ரா, சூல காத்யாயனீ எனும் நான்கு கன்னியர்களால் சூழப்பட்டவள். அம்பிகை மும்மூன்றாக உள்ள எல்லா வடிவங்களாகவும் விளங்குகிறாள்.

ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் போன்ற மூன்று சரீரங்களாகவும், கர்மம், உபாசனை, ஞானம் எனும் மார்க்கங்களாகவும், அ, உ, ம எனும் பிரணவத்திலுள்ள பீஜாக்ஷரங்களாகவும், இச்சா, க்ரியா, ஞான சக்திகளாகவும், பூ, புவ: ஸுவ: எனும் லோகங்களாகவும், சத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களாகவும், ஜாக்ரத், ஸ்வப்ன, சுக்ஷுப்தி எனும் அவஸ்தைகளாகவும், சத், சித், ஆனந்தம் எனும் நிலைகளாகவும், சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஜோதிகளாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் போன்ற காரியங்களாகவும் தேவி விளங்குகிறாள்.

அனைத்திலும் மூன்றாக விளங்கி அதற்கு அப்பாலும் துரீய நிலையில் நான்காக விளங்குபவள். மும்மூன்றாக உள்ள சகல மானவைகளும் எந்த தேவியை வணங்கி நிற்கின்றதோ அவளே சூலினி துர்க்கை என்கிறது  திரிபுரோபநிஷத். மகா தேவியின் உடல் ஓங்கார ரூபமாகவும், ஹ்ரீங்கார ரூபமாகவும், இரண்டும் சேர்ந்து ஓம், ஹ்ரீம் ரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. திரிபுர ஸம்ஹாரம் செய்ய முனைந்த சிவபெருமானுக்கு சூலம் ஏந்திய கையுடன் பக்கத்துணையாக இருந்தவள் இந்த சூலினி துர்க்கை. ராவண சம்ஹாரத்தில் ராமனுக்குத் துணையாக இருந்து வெற்றியைத் தேடித்தந்தவள் இவள்.

அம்பிகையின் நினைவு, தாமரைக்காடுகள் மலர்வதற்குக் காரணமான உதயசூரியனாக விளங்குகிறது, இனிமையான வசந்த காலத்தில் பாடும் குயில்கள் போல கவிவாணர்கள் தேவியின் தியான விசேஷத்தால் கவிகளை இயற்றிப்பாடும் திறன் பெறுகிறார்கள். பௌர்ணமி தினத்தன்று தேவி அமுதத்தைப் பொழியும் நிலவில் ஞானமே வடிவாய் வீற்றிருக்கிறாள். இதை சந்த்ரமண்டல மத்யகா என்றும் லலிதா ஸஹஸ்ரநாமம் மெய்ப்பிக்கிறது. தேவி நாம் மனதால் நினைத்த மாத்திரத்தில் மனதில் எழுந்தருள்வாள்.

தேவி ஞானமே வடிவாகத் திகழ்பவள். அஞ்ஞானத்தை அழித்து மெய்ஞானம் அருள்பவள். நீலோத்பலம் போன்ற கண்கள். அக்னி போல் ஜொலிக்கும் நெற்றி. கையில் திருசூலம் ஏந்தியருள்பவள். ஈசன் காமனைக் கண்ணால் காய்த்தார். காலனைக் காலால் கடிந்தார். தேவி மன்மதனை தன் சந்த்ர நேத்ரத்தால் அம்ருதத்தைப் பொழிந்து அவனை யாரும் ஜெயிக்க முடியாத வரத்தையும் தந்து அனுப்பினாள்.

ஈசன் புரிந்த திருவிளையாடல்கள் அனைத்தும் தேவியின் அனுக்ரஹத்தினாலேயே நிகழ்ந்தது முக்கண்ணனாகிய ஈசனின் கண்களுக்கு விருந்தாகும் தேவி மிகச் சிறந்த ஸௌந்தர்யவதியாவாள். அவள் முகமென்னும் தாமரை மன் மதனின் முதல் பாணமாகிய தாமரையை இகழ்வது போலவும், அதைத்தன் அழகால் துன்புறுத்துவது போலவும் உள்ளது. மேலும், இந்த முகத் தாமரை யில் பிறந்த நான்முகனின் வாகனமான அன்னத்தையும் தன் நடையால் தேவி ஜெயிக்கிறாள்.

தேவர்கள் அமிர்தம் உண்டதால் என்றுமே நரை, திரை, மூப்பு, மரணம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் என்றும் யௌவனமாகவே இருப்பவர்கள். ஏதாவது நல்ல உணவு கிடைத்தால் அம்ருதம் போல் இருக்கிறது என்று அம்ருதத்திற்கு ஈடாகக் கூறுவோம். தேவர்கள் உண்ணும் அமிர்தத்தையும் தன் இனிமையான சொற்களால் ஏக்கமுறச் செய்யும் சொல்வளம் படைத்தவள் அம்பிகை.

அம்பிகையின் திருவடிகள் இரண்டும் தாமரை புஷ்பங்கள். புஷ்பங்கள் பூமியில் நடந்தால் எப்படி யிருக்கும்? அதுபோல் மெத்து மெத்தென்று மெதுவாக நடப்பதில் அந்த திருவடிகள் கஜேந்திரனைத் தோற்கடிக்கிறது. தேவியின் பாதங்கள் தாமரை மலர்களிடம் பொறாமை கொள்கின்றது. நாம் என்ன?

மிக உயர்ந்த ஞானிகளும் தேவியின் பாதங்களில் மிகுந்த ஆசை கொள்கிறார்கள். தேவியின் திருவடிகள் போகம், மோட்சம் என்ற இரண்டையுமே தருவதால் முனிவர்களும் ஞானியர்களும் அப்பாதங்களில் வீழ்ந்து வணங்கியே மோட்சத்தைப் பெறுகிறார்கள். தேவி உபாசனை போகம், மோட்சம் இரண்டையுமே தரவல்லது. தேவி வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரவல்லவள்.

தேவியின் பாதங்களின் யானை போன்ற நடையால், தாமரையைப் பழிக்கும் குணத்தால், ஞானிகளின் ஆசைக்கு இருப்பிடமாய் உள்ளதால் துரோகம், பொறாமை, காமம் ஆகிய குணங்களைக் கொண்டிருந்தும் ஞானிகள் அதை விரும்புவது அதிசயம் என மூகர் தன் பாதார விந்த சதகத்தின் கரீந்த்ராய துதியில் அருளியுள்ளார்.

தேவியின் திருவடியின் மகிமையை யாரால் இயம்ப முடியும்?தேவியின் திருவடிகளை வணங்குபவர்கள் மஹாபாஷ்யம் எனும் வியாக்யானத்தை இயற்றிய பதஞ்சலி முனிவராக அவதரித்த ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு அதில் துயிலும் திருமாலைப் போல் ஆவார்கள்.

மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த பரமேஸ்வரன் எனும் பெரிய தெய்வமாகவும் ஆவார்கள். வண்டுகள் உறையும் தாமரையில் வசிக்கும் நான்முகன் என்ற பிரம்மதேவனாகவும் செய்து விடும். மும் மூர்த்திகளும் கூட தேவியின் பாதத்தூளியாலேயே தங்களுடைய தொழில்களை ஆற்ற வல்லவராகிறார்கள். அவ்வாறே நாமும் தேவியின் பாதகமலங்களைப் பணிந்து இக பர சுகம் பெறலாம். தேவியின் பாதங்களில் எப்பொழுதுமே லாக்ஷாரஸம் அல்லது மருதாணி ஈரம் உலராமல் காணப்படும்.

தேவியின் பாத தீர்த்த லாக்ஷா ரஸத்துடன் கலந்து வருவதாகும். அந்தப் பாத தீர்த்தத்தை ஒரு காலத்தில் பருகிய மூகர் கவி பாடும் திறமை பெற்றார் என்பது வரலாறு. தேவி மூகாம்பிகை எனும் பெயர் கொண்டவளாகவும் திகழ்கிறாள். மேலும், காளிதாஸர், மூகர், காளமேகம் போன்ற கவிகள் தேவியின் தாம்பூலம் தேவியின் வாயாலேயே கிடைக்கப்பெற்று அதனால்தான் கவித்துவம் பெற்றார்கள் என்பது வரலாறு.

சரப சக்திகளில் பிரதான இடத்தை பிரத்தியங்கிரா வுக்கு கொடுத்து விட்டு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பவள் சூலினி. பிரத்தியங்கிரா காளி, இவள் துர்க்கை. மனித வாழ்க்கையில் துன்பங்களை ஒழித்துக்கட்ட துர்க்கை யின் தயவு வேண்டும். சிவபெரு மான் சூலத்தைப் பிரயோகித்து துஷ்ட நிக்ரஹம் செய்த காரியங்களில் எல்லாம் பக்கத்துணையாக இருந்தவள் சூலினி தான்.       

சூலபாணியாக எப்போதும் விளங்குவதால் சூலினி. தேவியின் உபாசனை நான்முகன் பொறாமைப்படும் அளவு கல்வியறிவு, நாரணன் பொறாமைப்படும் அளவு ஐஸ்வர்யம், மன்மதன் பொறாமைப்படும் அளவு பேரழகு போன்றவற்றை தரும். இவ்வளவு பாக்கி யங்களுடன் தீர்க்காயுள் இருந்தால்தான் இதையெல்லாம் அனுபவிக்க முடியும். தான்யம், தனம், பசும், பஹுபுத்ரலாபம் ஸத ஸம்வத்ஸரம் தீர்க்கமாயு: என்று ஸ்ரீ ஸுக்தத்தில் தேவியிடம் கடைசியில் ‘நூறு வயது கொடு’ என்று ப்ரார்த்திக்கின்றோம். இவ்வளவு பாக்கியங்களையும் தேவியின் உபாசகன் அடைகிறான். அதோடு பேரானந்தமும் அடைகிறான்.

இத்தேவி பட்டாடை உடுத்தி நீளமான திரிசூலத்தை ஏந்தி போரிடும் பாவனையிலேயோ அல்லது அனுக்ரஹம் செய்யும் பாவனையிலேயோ இருப்பாள் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. திருவாரூர் கோயிலிலும், தீர்த்த மலையிலும் இந்த சூலினி துர்க்கைக்கு வடிவங்கள் உண்டு. வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர் இத் தேவியை வழிபட்டு அருள் பெறலாம்.சூலினி துர்க்கா த்யானம் பிப்ராணா சூல பாணாஸ்யரி ஸதரகதா சாப
பாசான் கராப்ஜை:

மேக ச்யாமளா கிரீடோல்லிகித ஜலதரா பீஷணா
பூஷணாட்யா
ஸிம்ஹஸ் கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடான்
ஸிதாபி - பரீதா
கன்யாபி பின்ன தைத்யா பவது பவபயத்வம்ஸினீ
சூலினி. 
சூலினி துர்க்கா மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ச் ரௌம் தும் ஜ்வல ஜ்வல
சூலினி
துஷ்ட க்ரஹ ஹும் பட் ஸ்வாஹா.
ஸ்கந்தமாதா

சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து, சிவனை மணந்து, முருகனை ஈன்று, அவரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு உலகைக் காக்கும் தேவி ஸ்கந்தமாதா. இவள் அக்னி மண்டலத்தின் தேவதையாவாள். தமிழர் கடவுளாம் கந்தனின் அன்னை. வடமாநிலங்களில் முருகன் குமார், கார்த்திக் எனும் பெயர்களில் வணங்கப்படுகிறான். சிம்மத்தை வாகனமாகக் கொண்டவள்.

நவராத்திரியின் ஐந்தாம் நாள் துர்க்காதேவி அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியிருந்தது.

அச்சமயம் ஈசன் ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். குமார ஜனனம் வேண்டி தேவர்கள் ஈசனின் தவத்தைக் கலைக்க முற்பட்டனர். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் சிதறித்தெறித்தன. தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈசன் அத்தீப்பொறிகளை சரவணப்பொய்கையில் விடும்படி பணித்தார்.

அத்தீப்பொறிகளை அதில் சேர்ப்பிக்க உதவியவளே இந்த ஸ்கந்தமாதாதான். சரவணப்பொய்கையில் சேர்க்கப்பட்ட ஆறு தீச்சுடர்களும் ஆறு குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் செவிலித் தாயாக இருந்து அவர்களை பாலூட்டி வளர்த்தனர். தேவி தாயன்புடன் அந்த ஆறு குழந்தைகளையும் தன் இரு கரங்களால் ஒரே சமயத்தில் அணைக்க ஆறுமுகப்பெருமான் தேஜோமயமாகக் காட்சியளித்தார்.

 ஸ்கந்தமாதா அக்னி வடிவமாக இருந்து உலகை காக்கின்றாள். சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமிட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள்.

இத்தேவி நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலும் துதிக்கப்பட வேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திருவவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே.

அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே.

அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப்படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள். தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது.

நவராத்திரியின் ஐந்தாம் நாள் காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் உள்ள ஸ்கந்தமாதா கோயிலுக்கு பக்தர்கள் தரிசிக்கச் செல்வார்கள். இவளே ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகளை ஆற்றில் ஒன்றாகச் சேர்த்தவள்.

 அசுரர்களை வென்றிட முருகனுக்கு வேலினை ஈந்த துர்க்கையவள். ஸ்கந்தமாதா எனப் பெயர் பெற்று குமரக்கடவுளை எப்போதும் மடியில் அணைத்து வைத்து மகிழும் பாக்கியம் பெற்றவள். இந்த ஸ்கந்தமாதாவை விசுத்தி சக்கரத்தில் அமர்த்தி வழிபட வாழ்நாள் முழுவதும் பேரின்பம் கிட்டும். ஆத்மசுத்தியோடு வழிபடும்போது அம்பிகையின் மடியில் தவழும் கந்தனுக்கும் வழிபாட்டில் பங்கு கிடைப்ப தால் பக்தனுக்கு கிடைக்கும் பலன் இரட்டிப்பாகிறது.

ஸ்கந்தமாதாவின் த்யான ஸ்லோகம் ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில்
தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.

No comments:

Post a Comment