(திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக:)
பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.
நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.
பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.
நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.
பிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும்.
வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.
இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.
நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம்.
பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.
இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன் செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.
பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது.
இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல
ே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.
சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.
பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்
பட்டுள்ளது. யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.
---------------------------------------------
-------
ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே
பிராணன் அபானன் என்று இரண்டு (மூச்சுக்காற்று ) குதிரைகள் உண்டு. இவைகளை வீசி பிடித்து ஓட்டும் திறமை அறிவாரில்லை. இந்த பிராண ஜெயம் கொண்ட குருவிடம் பணிந்து சரணடைந்து அவர் அருளால் பிராணனை ஆளும் ஜெயம் காணலாம்.
பின் குறிப்பு...
வாழ்கையில் சாதிக்க வேண்டியது இதுவே..
---------------------------------------------
------------------------------------
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே
பறவையை விட வேகமான குதிரையான பிராணானை சிரசை நோக்கி செலுத்தினால் கள் உண்ண வேண்டியதில்லை. கள் போன்றவை உடல் மகிழ்ச்சி தரும். இது கீழான சுகம். மேலே செல்லும் பிராணன் ஆத்மா சுகம் அளிக்கும். சுறுசுறுப்பு ஏற்ப்பதும். சோம்பல் தவிர்க்கும். உள்ளதை சொல்லிவிட்டேன் இறைநிலை அடைய விரும்புபவருக்கு..
---------------------------------------------
--------------------------------
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.
பிராண சக்தி மனதில் அடங்க .. மனதை அடக்க .. ஒருவருக்கு இறப்பு இல்லை.
பிராண சக்தி இயக்கத்திற்கு தேவை. இந்த சக்தி பிறவி விடுதலைக்கு அடிப்படை. ஆகவே பிராண சக்தியை மாயையுடனும் மயக்கத்துடன் சேராமல் செய்தால் பிறப்பு இறப்பு இல்லை.
சிவசிவ சிவசிவ என்று அடங்குவோம்.
---------------------------------------------
--------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
பூரகம் - Breathin 16 (வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல்.)
கும்பகம் - Hold 64 உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல்.)
திரேசகம் - Breathout 32 (உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல்.)
குறிப்பு:: குரு இல்லாமல் செய்ய தொடங்க வேண்டாம்...
---------------------------------------------
--------------------------------
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே
பிராரனை அடக்கி ஆளும் வல்லமை பெரும் ஒருவன் காலத்தே அவனது உடல் முதுமை எய்தாது..
சிந்தை தெளிய குருவின் அருள் பெற பரவெளி அதுவும் வெளிப்படும்..முக்தி அடைவான்...
---------------------------------------------
---------------------------------
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.
மனம் எங்கே இருந்தாலும் இறைவன் சிந்தனயில் அது அடங்க :
இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் கும்பகமும் ரேசகசக்கமும் செய்ய உடலானது அழிவதில்லை. ஓம் கார நாதம் ஒலிக்கும் .. ஆன்மா அவன் நிலை அடையும்.
---------------------------------------------
----------------------------
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.
இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்ளே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் வாழ்வின் அளவை கூட்டமுடியும் இவர்கள் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.
---------------------------------------------
------------------------------
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே
பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள மாற்றத்தை குருவிடம் தெரிந்து பயிற்சி செய்யவும்.
16 மாத்திரை பூரகம் ::64 மாத்திரை இரசித்து:: 32 மாத்திரை விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்
1:4:2
---------------------------------------------
-----------------------------
இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே.
ஊழ் வினை நீக்ககி இறைவனை ஆடைவதற்கும் கொடுக்கப்பட்ட உடலை கொண்டு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, தசை நாடிகள் விம்முமாறு பூரித்து பிராணனும் அபாபனும் சீராக்கப்பட்டு நிற்க எம்மான் அருகில் வரான்.
பிராணன் :(தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது.)
அபானன் (குண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு.
---------------------------------------------
--------------------------------
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
வாயுவை அடக்கி நெறிப்பட ஆளும் திறம் பெற்றால் மலங்கள் நீங்கி ஆன்மா தூய்மை பெரும். இவர்களை சுற்றி இருக்கும் ஒளியானது சிவக்கும் ~தங்க நிறம் பெரும். உடல் இளமையாக இருக்கும். உரோமம் கருக்கும். இவர்களது ஆன்மாவானது சிவமாய் திகழும்.
---------------------------------------------
-------------------------------
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.
மீண்டும் மீண்டும் 1 : 4 : 2 பற்றி கூறுகிறார்...
ஆரம்ப கட்டமாக
பூரகம் :: 4 அங்குலம் மூச்சை உள்வாங்குவது ...
கும்பகம் :: 12 அங்குலம் / மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது ..
ரேசகம் :: 8 அங்குலம் / மாத்திரை அளவு வெளியே விடுவது ..
---------------------------------------------
---------------------------------
பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.
பன்னிரண்டு அளவு சுவாசம் உள்ளே செல்லவும் வெளியே செல்லவுமாக இருக்கிறது. சூர்ய கலை சந்திர கலை என்று வெறும் காற்றின் பயணமாய் இருக்கிறது. ஆன்மா விழித்த (சகஸ்ரம் அடைந்த) பின் பிராணன் சக்தி இரவு பகல் என்று பாராமல் இயங்க ஆரம்பிக்குமே.
---------------------------------------------
-----------------------------------
#பிராணன்
?
**************
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
புளிங்கொத்துக் காயும் பழுக்கினும் பிஞ்சாம்.
இந்த சித்தர் பாடல் பிராணாயாமத்தின் பலனைத் தெளிவாகவும், எளிமையாகவும் சொல்கிறது. சாதாரணமாக மூச்சை இழுத்து, உடனே வெளியே விடுகிறோம். இவ்வாறு மூச்சு விடுவதிலேயே நமக்கு இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்றால், உள்ளே இன்னும் சிறிது நேரம் வைத்திருந்தால் காற்றிலுள்ள பிராணசக்தி முழுவதும் நுரையீரலில் உள்ள காற்றறைகளால் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கிடைத்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும்.
சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது 79% நைட்ரஜன் வாயு உள்ளே சென்று அப்படியே திரும்பிவிடுகிறது.
பிராணவாயுவோ 20% உள்ளே போய் 16% வெளியே வருகிறது. கரிமில வாயு 0.04 உள்ளே போய் 4.04% வெளியே வருகிறது. இந்தக் கணக்கை உற்று கவனித்தீர்கள் என்றால் ஒரு சூக்கும இரகசியம் விளங்கும். அதாவது சுவாசிக்கும் போது நம் நுரையீரல் ஈர்த்துக் கொண்டது 4% பிராணவாயுவை.
எந்த அளவு பிராணவாயுவை ஈர்த்துக் கொண்டதோ அந்த அளவு கரிமிலவாயு வெளியேறுகிறது. அதிக அளவு பிராணவாயுவை நாம் கும்பகம் செய்வதால் ஈர்த்துக் கொள்கிற நுரையீரல், அதே அளவு கரிமிலவாயுவாகிய அபானவாயுவை வெளியேற்றிவிடும். இது நம் ஆரோக்யத்திற்கு மிகவும் பேருதவியாக இருக்கும். ஒரு மனிதன் சுவாசத்தை 4 வினாடி இழுத்து 4 வினாடி இருத்தி? 4வினாடி வெளியிட்டால், அவன் வயது ஐம்பது. 4 வினாடி இழுத்து 8 வினாடி இருத்தி 6 வினாடி வெளியிட்டால் அவன் வயது எழுபத்தைந்து. 4 வினாடி இழுத்து 16 வினாடி இருத்தி 8 வினாடி வெளியே விட்டால் அவன் வயது 100. இப்படியே காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்து கொள்ள வேண்டியது. இது சித்தர்கள் கூற்று.
இனியும் ஒரு கணக்கைத் தருகிறார்கள். அதாவது, பொதுவாக நாம் இடது நாசியில் 16 அங்குலமும், வலது நாசியில் 12 அங்குலம், சுழுமுனையில் 8 அங்குலம் என்று சராசரியாக நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் வீதம் ஒரு நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்களை நடத்துகிறோம்(இது சித்தர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சுவாசக் கணக்கு). சராசரியாக 12 அங்குலம் சுவாசம் வெளியேவிடுவதில் 4 அங்குலம் குறைந்து 7200 சுவாசம் நஷ்டமாகி 14400 சுவாசமே உள்ளடங்குகிறது என்கிறார்கள். இந்த நஷ்டக் கணக்கை சரி செய்யக் கண்டுபிடிக்கப்பட்ட வழியே பிராணாயாமம்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே !
96 தத்துவங்களுக்குள் அடங்கிவிடுகிறான் மனிதன். அவை, அறிவு -1, குணம் -3,வினை -2,மண்டலம் -3, மலம் -3, தோஷம் -3, ஏசனை -3, கரணம் -4, பூதங்கள் -5, பொறிகள் -5, தொழில் -5, கோசங்கள் -5, நிலை -5, அவஸ்த்தை -5, புலன்கள் -5, கன்மேந்திரியம் -5, ஆதாரம் -6, தூண்டல் -8, நாடிகள் -10, காற்று -10 என்பனவாம்.
இதில் 10 காற்றுகளை(வாயு) தசவாயுக்கள் என அழைப்பர். அவை 1 பிராணன், 2 அபானன், 3வியானன், 4 உதானன், 5 சமானன், 6 நாகன், 7 கூர்மன், 8 கிருகரன், 9தேவதத்தன், 10 தனஞ்செயன் என்பனவாகும். மனித உடல்கள எதனால் இயக்கப் படுகின்றன? காற்றால்தான. இதையே ஒரு சித்தர் ''காயமே இது பொய்யடா ! வெறும் காற்றடைத்த பையடா !'' என்று உறுதிப் படுத்துகிறார்.
மனித உடல் முழுவதும் காற்றானது நீக்கமற நிறைந்து இயங்கியும், இயக்கியும் வருகின்றது.மனித இயக்கத்திற்கு ஆதார சக்தி காற்றுதான் என்று அனைத்து சித்தர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். மனதை இயக்குவதும் சுவாசிக்கும் காற்றுதான். சித்தத்தின் சலனத்திற்கு காரணம் காற்றுதான்.
காற்றைக் கவனித்து தியானிப்பதே வாசியோகம் எனப்படும். அதாவது வாசியை கவனித்து அதனோடு ஒன்றுதல். வாசி என்ற சொல்லைத் திருப்பினால் சிவா அல்லவா, எனவே வாசியோகமே சிவயோகமாகும்.
தியானம் செய்ய சுத்தமான காற்றிருந்தாலே போதும் வேறென்ன வேண்டும் என்பார்கள். மூச்சு இல்லையேல் பேச்சு இல்லை. அதிகாலையில் தியானம் செய்வதன் சூட்சுமம் என்னவென்றால், அதற்கும் காற்றுதான் காரணம்.
அதாகப்பட்டது, சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆனால் அதிகாலையில் அதோடுகூட ஓசோனும் சேர்ந்து கிடைக்கிறது. அப்போது அது அமிர்தக்காற்று எனப்படுகிறது. அமிர்தம் உண்ட பலன் அதற்கு உண்டு. அதாவது நீடித்த ஆயுள் அல்லது மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த அமிர்தக் காற்றே தேவர்கள் சுவாசிக்கும் காற்று என்று சொல்லப்படுகிறது.
அமிர்தக் காற்றில் பஞ்சபூத சக்திகள் நிரம்பித் ததும்பி வழிகின்றன.
சுவாசம்தான் மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்களே. ஒரு நாயானது ஒருநாளைக்கு 72000 தடவை சவாசித்து 14 வருடங்களில் மரித்துவிடுகிறது. குதிரையானது ஒருநாள் ஒன்றுக்கு 50400 தடவைகள் சுவாசித்து 30 லிருந்து 35 வயதுகாலம் வாழ்ந்து மரிக்கிறது.
யானை 28800 தடவைமட்டுமே சுவாசிப்பதால் 100 வருடங்கள் வாழ்ந்து விடுகிறது. ஆமை ஒருநாள் ஒன்றுக்கு 7200 தடவைகள் மட்டுமமே சுவாசிப்பதால் 400 வருடங்கள் உயிர் வாழ்கிறது. பாம்புகள் அதையும் மிஞ்சி 4320 தடவைகள் மட்டுமே சுவாசித்து சுமார் 500 முதல் ஆயிரம் வருடங்கள் கூட உயிர் வாழ்வதாக சொல்லப் படுகிறது.
மனிதனுக்கு விதிக்கப்பட்ட சுவாசமாக சித்தர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை 21600 ஆகும். அப்படி சுவாசிக்கும் மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்கின்றனர். அதே சுவாசத்தை உற்று கவனித்து இழுத்து நிதானமாக மூச்சுவிட பழகிக் கொண்டால் ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர். உதாரணமாக 10800 தடவைகள் நிதானமாக நன்றாக மூச்சுவிட பழகிவிட்டான் என்றால் 240 ஆண்டுகள் உயிர் வாழலாம். 5400 தடவையே நாள் ஒன்றுக்கு சுவாசிப்பவன் 480 ஆண்டுகள் உயிர் வாழலாம் . இதையே திருமூலர் சித்தர்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே!'' என்று குறிப்பிடுகின்றார். நமது சரீரம் அல்லாது மேலும் நான்கு சூக்கும சரீரங்கள் நமக்கு உண்டு என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஐந்து. அன்னமய கோஷம் -இது நம் தூல தேகமாகும். பிராணமய கோஷம் - பிராணனும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. மனோமய கோஷம் - மனமும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. விஞ்ஞானமய கோஷம்- புத்தியும், ஞானேந்திரியங்களும் கூடி நிற்பது. ஆனந்த மய கோஷம் - பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பது.
பஞ்சபூத சக்தியாலும், அன்னத்தாலும் நரம்பு, தோல், இரத்தம், மாமிசம், நகம், ரோமம், சுக்கிலம் ஆகிய தாதுக்களால் ஆன தூல தேகமே அன்னமய கோஷம். அந்தக்கரணம், ஞானேந்திரியங்கள், பிராணாதிகள், கர்மேந்திரியங்கள் போன்றவற்றின் சேர்க்கையே சூக்கும சரீரங்களாகிய பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்றும். நம் தூல சரீரத்தின் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற அறிவுக் கருவிகளான ஞானேந்திரியங்களையும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபதம் என்கிற கர்மேந்திரியங்களையும் இயக்குவது பிராணனே. நாம் தூங்கினாலும், விழித்திருந்தாலும் நம் இதயத்தை இயங்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தை தடையில்லாமல் நடைபெற வைப்பதும், நுரையீரலை இயக்கி மூச்சை முறைப்படி நடத்துவதும் பிராணனே. இப்படி உடலின் சகல உள்வெளி இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராணனே பிராணமய கோஷம். அன்னமய கோஷத்தைக் கலந்து பரவி தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது பிராணமய கோஷம், அன்னமய கோஷத்தின் ஆத்மா பிராணமய கோஷம். இந்த அன்னமய கோஷத்தை விட்டு உணர்வை உள்நிலைப்படுத்துபவன் பரம்பொருளே. தான் இந்த உடம்பு இல்லை என்கிற மெய்யுணர்வு வளர்ச்சிக்கு நுட்பமாக உடம்பினுள்ளும் வேறாகி நிற்கும் பிராணமய கோஷம் காரணமாகிறது.
சித்தர்கள், மகான்கள், யோகிகள் தங்கள் உடலை மாயமாக்கி மறையும் சித்துக்கு அன்னமய கோஷம் பிராணமய கோஷத்தில் அடங்குவதுதான் காரணம்.
சித்துக்களைக் கடந்து, அதற்கு மயங்காதவர்கள் பிராணமய கோஷத்தையும் கடந்து உணர்வை உள்ளே செலுத்த மனோமய கோஷம் ஆட்கொள்கிறது.
மனிதனுக்கு எது சரி, எது உணமை என்பதைத் தெளிவுபடுத்துவத
ே மனோமய கோஷம் தான். மனம் அழிந்து உணர்வு தலைதூக்குமிடம் விஞ்ஞானமய கோஷம். நம் பாதை சரிதானா ? என்ற கேள்வியோடு இலட்சியத்துக்கான முடிவு எடுக்கப்படுவது விஞ்ஞானமய கோஷத்தினால்தான்.
விஞ்ஞானமய கோஷத்தை எட்டுபவர்களுக்கே உள்ளும் புறமும் ஜோதியைக் காண வாய்ப்பு கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சியின் வெற்றியின் மகிழ்ச்சியை உணரும் இடமே ஆனந்தமய கோஷம். யோகத்தின் எட்டு நிலைகளையும் கடந்தவர்களுக்கே ஆனந்தமய கோஷத்தை அனுபவிக்க முடியும். இந்திரியங்களைக் கட்டி மனத்தை வென்று நம் உடலில் உயிராய் கலந்து நிற்கும் இறைவனை உணர்ந்து, கலந்து, இன்புற்று இருக்கும் நிலையே ஆனந்தமய கோஷத்தில் உணரப்படுகிறது. இந்த கோஷங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மனம் உள்ளே ஒடுங்க ஒடுங்க உணர்வுகள் ஒடுங்குகின்றன. உணர்வுகளின் ஒடுக்கமே சமாதி நிலை.
இவ்வளவும் பிராணனின் கைவல்லியத்தால்தான் விளைகிறது.
வாழ்கையில் சாதிக்க வேண்டியது இதுவே..
நீங்கள் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்...
குறிப்பு:-
-------------
மேலும் திருமூலர் முதல் பதினெண் சித்தர்கள் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ யோக முறையான பிராணாயாம கலையை முழுமையாக தனிப்பட்ட என்னுடைய திருமந்திர whatsaap வகுப்பில் நேரடியாக கற்பிக்கிறேன். கற்க விரும்புபவர்கள் கற்று கொள்ளுங்கள். உலகில் எங்கிருந்தாலும் நேரடியாக whatsaap மூலம் கற்று கொள்ளும் அறிய வாய்ப்பு. கற்க விரும்புபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம் குமார் அவர்களை (+918903834667) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வகுப்பில் இணையவும்.
- சித்தர்களின் குரல் shiva shangar
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment