பைரவர், சக்தி வாய்ந்தவர். சதிகளையும் எதிர்ப்புகளையும் முறியடிப்பவர். அந்த ஆலயத்தையே காவலனாக இருந்து காப்பவர். அதுமட்டுமின்றி, தன்னை வணங்கும் சிவ பக்தர்களையெல்லாம் தீய சக்திகள் அண்டாமல் காத்தருள்பவர். ஸ்ரீ காலபைரவர் எல்லோரையும் காத்து அருளட்டும்
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு. நடந்துகொண்டிருக்கும் கலியுகத்தில், காலபைரவரே பக்கத்துணையாக இருக்கிறார். அகிலத்து மக்களுக்கு ஒரு குறைவும் நேராமல் அவர் நொடிப்பொழுதில் காத்தருள்கிறார்.
பைரவரின் வாகனம் நாய். எனவே தெருநாய்களுக்கு உணவளித்தாலே பைரவரின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம். அதேபோல், எதிரிகளை வீழ்த்த, எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்க, பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், பைரவருக்கு வடை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் தடைகள் அனைத்தையும் நீக்கி அருள்வார் பைரவர் என்கிறார்கள்.
அஷ்டமி நாளில், பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவாஷ்டகம் பாராயணம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தெருநாய்களுக்கு உணவளியுங்கள். இயலாதெனில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டாவது வழங்குங்கள்.
பைரவரில் எட்டு வகையான பைரவர்கள் உண்டு. அஷ்ட பைரவர்கள் என்றே அழைக்கப்படுகிறது. இவர்களில், சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இன்னும் சிறப்புகளைக் கொண்டது. அஷ்டமியிலும் மற்ற நாட்களிலும் பைரவருக்கு செந்நிற மலர்கள் சூட்டியும் பைரவாஷ்டகம் சொல்லியும் வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார் சொர்ணாகர்ஷண பைரவர் என்பது ஐதீகம். இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
பைரவரை வழிபடுங்கள்; பலன் பெறுங்கள்!
No comments:
Post a Comment