Monday, January 11, 2021

எதிர்பார்ப்பதை விட்டு விடுங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

*எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள்:-*

எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. 

மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். 

அது எப்படி வருகிறது எனில் கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். 

எனக்கு இப்படி வர வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையான எதிர்பார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத்தான் கிடைக்கிறது. 

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று நீங்கள் யோசித்துச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். 

பிறருக்கு மனப்பூர்வமாக எந்த அளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும் மன அமைதியும் ஆற்றலும் உண்டாகும்.

பொருளைக் கொடுத்துத்தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ அந்த ஆற்றலைக் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலே, பொருளாலே, பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.

காலையிலும் மாலையிலும் இந்த உலகம் சமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்த முடியாதா? அதைச் செய்யலாமே. 

அம்மாதிரி எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டே இருப்போமானால் மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும். 

நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால், எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் மனதளவில் ஏழ்மையில்தான் இருப்பார்கள். 

நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக் கொண்டு என்னென்ன வகையில் பிறர்க்கு சேவை, உதவி, செய்ய முடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
.

இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் மேலும் மேலும் ஆற்றல் வளரும். செல்வமும் வளரும், மகிழ்ச்சியும் நிறைவும் வளர்ந்து கொண்டே போகும். 

*எதிர்பார்த்தல் ஏமாற்றம்:*

"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண 
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".

*மனநிறைவு :*

"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது 
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில் 
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும் 
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும் 
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும் 
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும் 
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி 
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்."

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

No comments:

Post a Comment