Tuesday, January 12, 2021

காப்புக்கட்டு சடங்கு என்றால் என்ன?

காப்புக் கட்டு சடங்கு. பொங்கல் பன்டிகைக்கு முன் போகி பன்டிகை அதாவது காப்பு கட்டு பற்றி தெரிந்து கொள்வோம்.

மாதங்களில் அழகிய மாதம்  மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை. தமிழர்கள் வாழ்வில்  வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து,  மண்ணுக்கும் கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம். மார்கழி மாதத்தின் கடைசி நாள்  போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன்  தை மகளை வரவேற்பது தமிழர் மரபு. 

இதோ இன்று போகி. இந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு' என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்குதான் நமக்கென்ன என நினைத்து, விரல் சொடுக்கில்  செல் இணைய உலகத்துக்குள் உலா போய்விடலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் சடங்குகளுக்குப் பின்னால் உள்ள  அறிவியலை உணர்ந்துகொண்டு, அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். 
படிப்பறிவு இல்லாத அந்தக் காலத்தில் அறிவியலைச் சடங்குகள் மூலமாகவே பாமர மக்களுக்குப் புரிய வைத்தார்கள் முன்னோர்கள்.  காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. இத்தனை மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. 

 காப்புக் கட்டில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகள் அரிதாகிவிட்டன. தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை இவை மூன்றும்தான் நவீனக் காப்புக் கட்டில் இடம் பெறுகின்றன. எத்தனையோ மூலிகைகள் இருக்க, இந்த மூன்று மூலிகைகள் மட்டும் ஏன் இடம் பெறுகின்றன? அந்த மூலிகைகளின் பலனைத் தெரிந்துகொண்டால், இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்து விடும்.

 ஆவாரை: 

" ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ" என்கிறது சித்தர் பாடல். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. தரிசுகள் எங்கும் தானாக விளைந்து கிடக்கும் அற்புத மூலிகை. இன்றைக்கு உலகை உலுக்கி வரும் கொடிய நோய்களான சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வாக இருக்கிறது ஆவாரை. கிராமங்களில் ஆடு,மாடுௐ மேய்ப்பவர்கள், வெயிலினால் ஏற்படும் சூட்டைத் தனித்துக் கொள்வதற்காக, தலையில் ஆவாரை இலையை வைத்துக் கொள்வார்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கிரீன் டீ யை விட, அற்புதமானது ஆவாரை நீர். கையளவு ஆவாரம் பூவை, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங் கருப்பட்டி கலந்து அருந்தினால், உடல் புத்துணர்வு பெறும். சரும நோய்கள் குணமாகும். ஆவாரை இலையை, கல்லில் வைத்து ஒன்று இரண்டாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு, கண் வழியேௐ வெளியேறுவதை உணர முடியும். உடல் துர்நாற்றத்தைத் துரத்த, உடலை மினுமினுப்பாக்க, தலைமுடி வளர என ஆவாரையின் பயன்பாடு அநேகம். ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால் உடல் சோர்வு, நா வறட்சி, நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய்கள் குணமாகும். ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவுௐ கட்டுக்குள் வரும். இத்தனை அற்புதங்கள் இருப்பதால்தான் ஆவாரையைக் காப்புக் கட்டில் வைத்தார்கள். 

 சிறுபீளை: (பூளைப்பூ)

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிது கற்பேதி யறி"

என்கிற பதார்த்த குணபாடம்(219) சிறுபீளையின்ௐ மகத்துவத்தை விளக்குகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள். 

 வேப்பிலை:

வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத்ௐ தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான்  காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள்.

இப்போது புரிகிறதா..? காப்புக் கட்டு வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது நம்ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம்ௐ அனைவரின் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்று காப்புக் கட்டும் போது, அதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும். 

பழைய பிளாஸ்டிக்,டயர் மற்றும் குப்பைகளை எரிப்பது மட்டும் போகிப்பண்டிகை அல்ல. அது காற்றை மாசுபடுத்தும் சுகாதாரக்கேடு. உண்மையில் அது நம் மனதில் உள்ள 
 காமம்
 கோபம்
 சுயநலம்
 கர்வம்
 பொறாமை
ஆகிய பஞ்சமா பாதகங்கள் என்னும் குப்பைகளை  முழுவதும் எரித்துப் போக்கி விடுவதுதான் போகிப்பண்டிகை.
🌹🌻🙏🏻MPK🙏🏻🌻🌹

No comments:

Post a Comment