12 ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய கோயில்கள்
இன்பங்கள், துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்த அனுபவம் தான் வாழ்க்கை. அனைவருமே வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் பல விதமான கஷ்டங்கள், சோதனைகளை சந்திக்கவே செய்கின்றனர். அப்படியான காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிகம் மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடமே தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியினரும் எந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
மேஷம்:
சூரிய பகவான் உச்சமடையும் ராசியான மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிவோடு செய்பவர்கள் ஆவர். இவர்கள் தங்கள் வாழ்வில் நன்மையான பலன்களை பெற உங்களால் முடிந்த போது பழனி மலை பாலதண்டாயுதபாணி முருகனை வணங்கி வர வேண்டும்.
ரிஷபம்:
பொதுவாக கலைகளில் அதிகம் ஈடுபாடு கொண்ட ரிஷப ராசிகாரர்கள் தாங்கள் ஈடுபடும் எத்துறைகளிலும் தங்களின் தனித்தன்மையை காட்டுவார்கள். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாறுதல்களை பெறுவதற்கு திருவையாறு அருள்மிகு ஐயாறப்பரையும், அறம்வளர்த்த நாயகியையும் வருடமொருமுறை தரிசிப்பது நல்லது.
மிதுனம்:
எத்தகைய ஒரு பிரச்சனைக்கும் தங்களின் சிறந்த சிந்தனை திறன் மற்றும் அறிவாற்றலை கொண்டு தீர்வு வழங்குபவர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆவர். மிதுன ராசியினர் தங்களின் வாழ்வில் அனைத்திலும் சிறப்பாக விளங்க பாண்டி நாட்டு நவ திருப்பதி கோயில்களில் ஒன்றான திருத்தொலைவில்லி மங்கலம் கோயில் சென்று அங்கிருக்கும் பெருமாளையும், தாயாரையும் வணங்க வேண்டும்.
கடகம்:
சிறந்த நிர்வாக திறனால் அனைவரையும் உங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திறமை கொண்ட கடக ராசியினருக்கு எப்போதும் பெண் தெய்வ வழிபாடு சிறந்த நன்மைகளை தரும். அதிலும் மயிலாடுதுறை அருகில் இருக்கும் திருமீயெச்சூர் லலிதா பரமேஸ்வரி தேவியை வணங்கி வர பல சிறந்த மாற்றங்கள் கடக ராசியினருக்கு உண்டாகும்.
சிம்மம்:
வாழ்வில் ஒரு இலட்சியத்தை கொண்ட பிறகு எப்பாடுபட்டேனும் அதை நிறைவேற்றும் திறம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்கார்களின் குணமாகும். தங்கள் வாழ்வில் அனைத்திலும் மலை போல் உயர திருவண்ணாமலை அருணாச்சல மலையின் கீழ் கோயில் கொண்டிருக்கும் அண்ணாமலையரையும், உண்ணாமுலை அம்மனையும் நீங்கள் வழிபட்டு வர வேண்டும்.
கன்னி:
பிறரை சரியாக எடைபோடுவதில் வல்லவர்களான கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் சொந்த முயற்சியால் முன்னேற்றமடைவர். எப்போதும் கன்னி ராசியினரின் வாழ்வில் பொருளாதார உயர்வுகளையும், மிகுந்த நன்மைகளையும் பெறுவதற்கு சீர்காழி அருகே இருக்கும் திருவெண்காடு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
துலாம்:
எப்போதும் தங்களை சிறப்பாக அலங்கரித்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் தீமைகள் நீங்கி, எப்போதும் நன்மையான பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்களை அதிகம் பெறுவதற்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் வளமை பெருகும்.
விருச்சிகம்:
எத்தகைய கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தங்களின் வாழ்வில் முன்னேற தொடர்ந்து உழைக்க கூடியவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள் ஆவர். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், சோதனைகள் நீங்க எந்த ஒரு சித்தர் ஜீவ சமாதி பீடத்திற்கும் சென்று வழிபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக நெரூர் சதாசிவ பிரம்மரேந்திரர் ஸ்வாமிகளின் ஜீவ சமாதி சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.
தனுசு:
வாழ்வில் பணத்தின் தேவை முக்கியமானது தான் என்றாலும் அதை விட உயரிய ஒன்றான இறைவன் பற்றிய சிந்தனை மற்றும் செயல்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற சென்னைக்கு சற்று அருகே இருக்கும் திருப்புட்குழி கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
மகரம்:
எளிதில் சோர்வடையாத உடல் மற்றும் மனமும்,எப்போதும் உழைத்து கொண்டிருப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மகர ராசிக்காரர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற சிறந்த பொருளாதார பலன்களை பெறவும், வாழ்வில் முன்னேற்றமடையவும் ஆண்டிற்கு ஒரு முறையேனும் திருவரங்கம் சென்று ஸ்ரீ ரங்கநாதரை வணங்க வேண்டும்.
கும்பம்:
திறமைகள் பல இருந்தாலும் தங்களை சரியாக வெளிப்படுத்தி கொள்ளும் மனமில்லாத கும்ப ராசிக்காரர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகள் வெளிப்பட்டு அதனால் பொருளும், புகழும் ஈட்ட கும்பகோணத்தில் இருக்கும் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.
மீனம்:
சுப கிரகமான குரு பகவானின் ஆதிக்கம் மிக்க மீன ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான குணங்கள் அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களின் தர்ம நெறிக்கு பங்கம் ஏற்படாமல் நியாயமான முறையில் வாழ்வில் முன்னேற்றங்களை பெற திருச்சிராப்பள்ளி அருகில் இருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் மீன ராசியினர் நன்மைகளை பெறலாம்.
No comments:
Post a Comment