Tuesday, August 1, 2023

சூரியனார் கோவில் முழு விவரங்கள்..

சூரியனார் கோவில் முழு விவரங்கள்..!

சூரியநாராயணன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் 1800 வருடங்கள் பழமைவாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது. ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

சூரியநாராயணன் கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. சூரியனார் கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக விளக்கப்பட்டுள்ளது.

முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.

சூரியனார் கோவில் விவரங்கள்:
மூலவர்: சிவசூரியன்
அம்மன் / தயார்: உஷாதேவி, பிரத்யுஷாதேவி
தல விருட்சம்: வெள்ளெருக்கு
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
ஊர்: சூரியனார்கோவில்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
சூரியநாராயணன் கோவிலின் வரலாறு:
சூரியனார் கோவில் குறித்த ஒரு சுவையான புராணச் செய்தி உள்ளது.

அதாவது கால முனிவர் , எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவராய் இருந்தார். தனக்கு தொழுநோய் வர போவதாய் முன் கூட்டியே அறிந்து, அக்கொடிய நோயில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நவக்கிரகங்களை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவ வலிமையில் அகமகிழ்ந்த நவக்கிரகங்கள் அவருக்கு காட்சி புரிந்து வரம் அளித்தனர்.

தான் எழுதிய விதியை மாற்றியதால் கோபம் கொண்ட பிரம்மா கால முனிவர் அடைய வேண்டிய துன்பங்களை நீங்கள் அடைவீர்களாக என்று நவகிரகங்களை சபித்தார்.

அவரது சாபத்தால் தொழு நோயை அடைந்த நவக்கிரகங்கள் சாப விமோச்சனம் வேண்டி மன்றாடினார்.

திருமங்கலக்குடி சூரியனார் கோவில் பிராணநாதரை தரிசித்து அவரது அருளை பெறுமாறு பிரம்மா கூறினார். அதன் படி பிராணநாதரையும் மங்களாம்பிகையையும் வேண்டி நவக்கிரகங்கள் அங்கு ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தனர்.

கடவுள் அவர்களுக்கு பாவ விமோச்சனம் அளித்தார் . நவக்கிரகங்களுக்கு நன்றி கூறும் விதமாக காலவ முனிவர் அவர்கள் தவம் புரிந்த இடத்தில் கோவில் எழுப்பினார்.

இக்கோவிலில் பிரதான கடவுளாக சூரியநாராயணன் தன்னுடைய மனைவிகள் பிரத்யுஷா தேவி, உஷா தேவி உடன் ரதத்தில் இருப்பது போல் காட்சியளிக்கின்றார்.

பக்தர்கள் விஜயதசமி அன்றும் ரத சப்தமி அன்றும் சூரியனாரை தரிசித்து அவர் அருளை பெறுவர்.

சூரியநாராயணன் கோவில் தலபெருமை:
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.

சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார்.

அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.

இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில் இது.

திருவிழா:
ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, இந்த கோவிலின் மிகவும் முக்கிய திருவிழா ஆகும்.

சூரியநாராயணன் கோவில் சிறப்பு வழிபாடு:
பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரும். மகா அபிஷேகம் என்று அழைக்கப்படும் இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி நாட்களில் இந்தகோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

பிராத்தனைகள்:
நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மை என்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களது பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிராத்தனை செய்கின்றனர்.

குறிப்பாக ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனியால் தோஷமுள்ளவர்கள், வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களுக்கும் இந்த சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்று கிழமை வரை பிராத்தனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் மற்றும் காரிய தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சூரியநாராயணன் கோவில் எப்படி செல்வது?
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது.

கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை – திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோவிலை அடையலாம்.

கோவில் திறக்கப்படும் நேரம்:-
காலை 09 மணி முதல் 11 மணி வரை திறக்கட்டும். அதன் பிறகு மலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்

No comments:

Post a Comment