இடைக்காடார் சித்தர்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.
திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.
பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இடைக்காடர் திருவண்ணாமலையில்தான் அடங்கி இருக்கிறார் என்பது 99 சதவீத சித்த ஆய்வாளர்களின் கருத்தாகும். நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் திருவண்ணாமலையில் இடைக்காடரின் ஜீவ சமாதி உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி அல்லது ஒளி சமாதி எங்கு உள்ளது என்பதில்தான் மாறுபட்ட தகவல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி 5 இடங்களில் இருப்பதாக பேசப்படுகிறது.
1. அண்ணாமலையாரின் கருவறையே இடைக்காடரின் ஜீவ சமாதி என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். திருவண்ணாமலை கோவிலின் கருவறை 4-ம் நூற்றாண்டில் உருவானது. அந்த கருவறை சுற்றுச் சுவர்களில் ஏராளமான ஆடுகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த கருவறைக்குள்தான் இடைக்காடர் அடங்கி இருப்பதாக நம்புகிறார்கள்.
2. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி நுழைவாயில் இருபுறமும் இரண்டு பெரிய அறைகள் உள்ளன. வடக்கு புறம் உள்ள அறையின் அருகே ஒரு சுரங்க பாதை செல்கிறது. அந்த சுரங்க பாதை மலைக்குள் ஊடுருவி செல்வதாகவும், அந்த சுரங்கப் பாதைக்குள்தான் இடைக்காடரின் ஜீவ சமாதி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
3. திருவண்ணாமலை கோவிலின் 3--ம் பிரகாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்கு அருணை யோகீஸ்வரர் மண்டபம் என்று பெயர். அந்த மண்டபம்தான் இடைக்காடர் ஜீவசமாதி என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மண்டபத்தின் கீழ் இடைக்காடரின் சிலை உள்ளது. எனவே அவர் அந்த மண்டபத்தில் சூட்சும வடிவில் புதைந்திருப்பதாக கருதப்படுகிறது.
4. திருவண்ணாமலை மலையின் மேற்கு பகுதியில் இடைக்காடர் ஜீவசமாதி இருப்பதாக மற்றொரு கருத்து உள்ளது. அங்கு பாத வடிவம் உள்ளது. எனவே அதுதான் இடைக்காடர் ஜீவசமாதியான இடம் என்று சொல்கிறார்கள்.
5. திருவண்ணாமலை ஆலயத்தில் 6-வது பிரகாரத்தில் பிரம்மலிங்கம் பின்புறம் சுற்றுச்சுவரில் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு உள்ளது. 7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட அந்த இடம்தான் இடைக்காடர் சித்தர் ஒளிசமாதி பெற்ற இடமாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம் தான் இடைக்காடரின் ஒளிசமாதி அமைந்து இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்ல தொடங்கி உள்ளனர்.
திருவண்ணா மலையில் இடைக்காடரின் #ஜீவசமாதி அமைந்திருக்கும் இடமாக இந்த இடம்தான் சமீபத்தில் அதிகமான ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. எனவே இந்த இடத்துக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
#திருவண்ணாமலை பெரிய தெருவில் #இடைக்காடர் சித்தர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடைக்காடர் சித்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று இடைக்காட்டுக்கு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment