மனமது செம்மை.....
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
இது அகஸ்தியர் பெருமானின் ஞான உபதேச பாடலாகும்....
இந்தப் பாடலுக்கு மனம் செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று ஒரே வரியில் விளக்கம் சொல்லி தன் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் இந்த பூமியிலே நிரம்ப உண்டு...
ஒற்றை வரியில் பொருள் கூறும் ஒரு சாதாரண பாடல் அல்ல இது அகஸ்தியர் பெருமான் மேன்மையான ஞானத்தை மக்களுக்காக சுருக்கமாக உபதேசம் செய்த ஒரு சூட்சம பாடலே இது......
(1) மனமது செம்மையானால் மந்திரம்
செபிக்க வேண்டாம்
இதற்கு விளக்கம்:-
மனமானது செம்மையான பின்னால் எந்த ஒரு மந்திரத்தையும் செபிக்க வேண்டாம் என்பதே இதன் சூட்சம பொருளாகும். மனம் செம்மையாக வேண்டுமென்றால் அதற்கு மந்திரமும் வேண்டும் என்பதே இதன் மையக் கருத்து.
உயிர் இருக்கின்ற வரை மனம் அடங்காது ஆனால் அந்த உயிரிலே மனம் அடங்கும் இதை உணர்த்துவதற்காகவே இந்தப் பாடல்.
உயிர் என்பது நமது பிராண காற்று என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சொல்லை ஒரு குறிப்பிட்ட காலம் திரும்பத் திரும்ப வேறு ஒரு சிந்தனை இல்லாமல் நினைத்து வந்தால் அதாவது செபித்து வந்தால் நமது நினைவானது ஒரே சொல்லை நினைவு கூறுவதால் அந்த சொல்லிலேயே நமது மனமானது ஒடுக்கமாகும்.
தொடர்ந்து ஒரே சொல்லை சொல்வதால் இதனால் வேறு ஒரு நினைவுகள் நமக்குள்ளே அதிகம் தோன்றாததால் இதையே மன அடக்கம் என்று சொல்லப் படுகிறது.
நமது மனதை செம்மைப் படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் சூட்சமமான ஒரு சொல்லை தொடர்ந்து சொன்னால் அல்லது நினைத்தால் நமது மனமானது இதை கவனிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நம்மால் கொண்டு வரப்படுகின்றது.
இதன் விளைவாக மனமானது தனது தேவையற்ற சிந்தனையை குறைத்துக்கொண்டு நமது விருப்பத்திற்கு கட்டுப்படும் ஒரு நிலையை கற்றுக் கொள்கின்றது.
ஆக.....
மனம் நமக்கு வசமாக மந்திரம் தேவை மனம் வசமான பின்னால் மந்திரம் வேண்டாம் இதுவே இந்தப் பாடலின் முதல் வரிக்கான விளக்கமாகும்.....
(2) மனமது செம்மையானால் வாயுவை
உயர்த்த வேண்டாம்
இதற்கு விளக்கம்:-
மனம் செம்மையான பின்னால் வாயுவை உயர்த்த வேண்டாம்.
ஆனால்,
மனம் செம்மையாவதற்கு வாயுவை உயர்த்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
மனம் செம்மையாவதற்கு மந்திரம் மட்டும் போதாது ஏனெனில் நமது மனமானது ஒன்றை நினைக்கும் போதே மற்றொன்றை நினைவுகூறும் ஒரு மாய குணத்தை பெற்றிருக்கின்றது. இரு வேறு வேறான நினைவுகளை ஒரே நேரத்தில் நினைக்கும் ஒரு அதிசய ஆற்றல் நமது மனதிற்கு மட்டுமே உண்டு
ஆகவே,
இரண்டாக இருக்கின்ற நமது மனதை நமது சக்தியாய் மற்றொன்றாக இருக்கின்ற நமது உயிர் மூச்சான காற்றை கவனிக்க பழக்க வேண்டும். இப்படி கவனித்தாலே மனதின் இரண்டான கூறுகளில் ஒன்று
காற்றான நமது உயிர் சக்தியிலே கலந்து அதிலேயே கரைந்து அதன் விளைவால் மனமானது சலனம் எனும் தீயசக்தியை இழந்து விடுகின்றது.
மனமானது தீய சக்தியை இழந்து விட்டால் மட்டும் போதாது இது நல்ல சக்தியாக என்றென்றும் நிலையாய் இருப்பதற்கு நமது காற்றான வாசியோடு இதை கலந்து விடவேண்டும்.
எப்படியெனில்,
நமது காற்றை உள்ளே உயர்த்தினால் இந்த மனமானது அதிலே கலந்துவிடும். காற்று எனும் வாசியை கவனிக்காமல் மனம் ஒரு போதும் அடங்காது.
அதாவது,
உள் நாக்கின் உள்ளே இருக்கின்ற இரண்டு துவாரத்தின் வழியே நாம் உதிப்பதற்கு ஆதாரமாய் இருந்த அந்த உற்பத்தி ஸ்தானமான சகஸ்கரத்தை நோக்கி உயிர் காற்றை உயர்தத வேண்டும்.
நமது செயலால் வாயுவை உயர்த்தும் அந்த செயல்பாட்டை மனம் கவனித்தால் அந்த செயலில் நமது மனம் ஒடுங்கி அதன் மூலமாக இந்த மனமானது ஞான சக்தியைப் பெற்று விடுகின்றது.
ஆக...
இப்படி மனம் ஓடுங்க இதன் மூலம் ஞான சக்தியை பெற காற்றை உயர்த்த வேண்டும் என்பதே இந்தப் பாடலின் இரண்டாவது வரிக்கு அர்த்தம்...
(3) மனமது செம்மையானால் வாசியை
நிறுத்த வேண்டாம்
இதற்கு விளக்கம்:-
மனதை செம்மைப்படுத்திய பின்னால் வாயுவை நிறுத்த வேண்டாம் என்பதே இதன் சூட்சம பொருள். அதாவது உள்ளேயே ஏற்றி இறக்கி நமக்குள்ளே நிறுத்திய வாசியை இனி உணர்வால் செயலால் உள்ளே ஏற்றவோ இறக்கவோ வேண்டியதில்லை என்பதே இதன் கருத்து.
ஏனெனில் மனம் செம்மையான பின்னால் வாசியான காற்றும் நமக்கு வசப்பட்டு விடும். மனமானது வாசியிலே அடங்கி அதன் விளைவால் வெவ்வேறாக இருந்த மனமும் உயிரான காற்றும் ஒன்றுள் ஒன்று என ஒன்றாகவே ஒடுங்கிவிடும்.
மனம் வேறு மனிதன் வேறு என்ற நிலை மாறி ஜீவனும் சிவனும் ஒன்றே என்ற உணர்வு உண்டாகிவிடும்....
அதாவது,
காற்றாலே ஜீவிக்கின்ற உயிரான ஜீவாத்மாவும் மனமாய் உயிர்களுக்கு உள்ளே சூட்சமமாக இருக்கின்ற பரமாத்மாவும் ஒன்றாகி விடும் என்பதே இதன் உட்பொருளாகும். இந்த நிலையை மனம் பெற்ற பின்னால் வாசியை நிறுத்த வேண்டாம் அது தானாகவே உதித்த இடத்திலேயே சூழலும் ஒரு நிலையை பெற்றுவிடும்
ஆக இந்த நிலையை பெறுகின்ற வரை வாசியான உயிர்காற்றை உயர்த்தும் சிவயோகம் எனும் வாசியோகத்தை நிறுத்த வேண்டாம் என்பதே இந்தப் பாடலின் மூன்றாவது வரிக்கான கருத்தாகும்.....
(4) மனமது செம்மையானால்
மந்திரம் செம்மையாமே
இதற்கு விளக்கம்:-
அதாவது மனம் செம்மையான பின்னால், இந்த மனதை செம்மைப்படுத்திய ஒரு யோகியானவன் சொல்கின்ற ஒரு சொல்லே மந்திரமாக ஒரு உயிர் சக்தியை பெற்றுவிடும் என்பதாலே
மனம் செம்மையான பின்னால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என சித்தர் பெருமான் அவர்களால் சொல்லப்பட்டு இருக்கின்றது.
அதாவது,
மனதை மந்திரம் எனும் ஒரு நினைவிலே ஒடுக்கி காற்றின் உணர்விலே அதை கலக்க செய்து
அதாவது,
காற்றின் உணர்வான சப்தத்தை மனதால் கவனிக்க செய்து, இப்படி காற்றும் மனமும் ஒன்றாக கலந்தால் அதன் விளைவால் மனமானது செம்மையாகிவிடும் என்பதாலே.....
அதற்குப்பின்னால்,
மந்திரம் செபிக்க வேண்டாம்
வாயுவை உயர்த்த வேண்டாம்
வாசியை நிறுத்த வேண்டாம்
என்று பாடலிலே கூறப் பட்டிருக்கின்றது.
அதாவது மனம் செம்மையான பின்னால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பதை கருத்தில் கொண்டே
மனமது செம்மையானால்
மந்திரம் செம்மையாமே
என்று அகஸ்தியர் பெருமான் இந்த பாடலின் மூலமாக நமக்கு ஞான உபதேசத்தை செய்திருக்கிறார் என்பதே உண்மையாகும்
யோக பாதையில் தொடர்ந்து இயமநியமத்துடன் பயணிப்போம்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்.
No comments:
Post a Comment