Sunday, January 17, 2021

ஏன் தியானம் கண்டிப்பாக செய்ய வேண்டும்?

#தியானம்

மனக்குதிரைக்கான மந்திரம்!!!!! 

வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் படுத்தி எடுக்கிறது மன அழுத்தம். இதன் விளைவு,  ரத்த அழுத்தம், சர்க்கரைக் குறைபாடெல்லாம் வெகு சீக்கிரமே  குடியேறி விடுகின்றன.  நோய் தரும் வலிகளும் இழப்புகளும் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை இளம் தலைமுறை மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதைத் தொடர்ந்து உணவும் வாழ்க்கையும் இயற்கையின் பக்கமாகத் திரும்பிருக்கின்றது. ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எளிய யோகா பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனதுக்குத் தியானம், வயிற்றுக்கு உணவு,  உடலுக்கு யோகாசனங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது.  

யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம் நிலவுகிறது. ‘தியானம், சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் தான் கைவரும். நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எல்லாம் தியானம் செய்ய முடியாது’ என்று கருதுகின்றனர். இதற்குக் காரணம் உள்ளது. தியானத்தின் போது எண்ண ஓட்டங்களை நிறுத்தி மனதை அமைதிப்படுத்த வேண்டும். எதையும் நினைக்கக் கூடாது என்று கண்களை மூடினால் எண்ண அலைகள் கடலாய் மாறிக் கலங்கடிக்கும். ‘‘எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தெரியாமல்தான் மக்கள் இப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். ஆனால், தியானம் அவ்வளவு கடினம் இல்லை. 

“தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம்” என்பதோடு மட்டுமல்லாமல், மனம் எனும் குதிரையை இழுத்துக் கட்டுவதற்கான மந்திரங்கள் உள்ளது.

‘‘உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே  தியானத்தின் நோக்கம்.  இறுதியில் பேரமைதியை உங்கள் மனம் உணரும்.  ஒருவருக்கு  தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில் உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது. நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டி யதன் அவசியம் புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும். மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது. 

மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். அந்தச் சூழலைத் தெளிவாகக் கையாள்வதுடன் மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன் போன்ற வார்த்தைகள் உங்களை விட்டு விலகி நிற்கும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது. இந்த ரசாயனங்கள் உங்களது ஹார்மோன் மாற்றங்களுக்குக் காரணம் ஆகின்றன. ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் நம் மனநிலையையும் உடல் நிலையையும் பாதிக்கின்றன. மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள் அடைய முடியும். 

பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது. ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். 

மூச்சுப்பயிற்சியின்போது உள் இழுக்கும் காற்று, நம் உடலுக்குள் பயணிப்பதை உணர வேண்டும். அதேபோல் வெளிவிடும் காற்றின் பயணத்தையும் கவனிக்கும்போது மனமும் மூச்சும் ஒற்றைப்பாதையில் பயணிக்கத் துவங்கும். மனம் ஒரு விஷயத்தில் ஆழமாய் பயணிக்கும்போது எண்ண அலைகள் ஓய்வெடுக்கும். மனதில் நடக்கும் உரையாடல் மௌனமாகும். இப்படித் தான் எண்ண அலைகளைப் பேரமைதிக்கு இழுத்துச் செல்ல முடியும். தியானத்தில் அமர்ந்து பேரமைதி நிலையை அடைய முடியும். 

‘‘இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஏன் இவ்வளவு டென்ஷன் என உங்களிடம் நீங்களே கேட்டுப்பாருங்கள், விடை கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாத காரணத்தால்தான் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நம்மையும் சேர்த்துக் கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். எல்லோரும் நம்மைப்போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மன மாசுக்களை நம் மூளையில் ஏற்றுவதால் ஏற்படும் அழுத்தம், நம்மைப் பாதி மனநோயாளியாக மாற்றி விடுகிறது. மற்ற உடல் நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கான வழிகளையும் இதுவே திறந்து வைக்கிறது. தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்’.

எந்த வயதில் தியானம் செய்யலாம்?

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும். 

எந்த நேரம் நல்ல நேரம்?

அவரவருக்கு விருப்பமான நேரத்தைத் தியானத்துக்குத் தேர்வு செய்யலாம். பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை தியானத்துக்கு மிகவும் உகந்த நேரம். இந்த நேரத்தில் பறவைகள் கத்தும் ஒலிகள்கூட இருக்காது. மாலை மற்றும் இரவு நேரத்திலும் தியானம் செய்யலாம். 

எண்ணங்களை இழுத்துக்கட்டும் கயிறு எது? 

நிறைய எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். கண்களை மூடி எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கும் போது மனதுக்குள் ஓயாமல் கேள்வி பதில் போன்ற உரையாடல் நிகழ்வதைக் கவனிக்கலாம். மூச்சுப் பயிற்சியின் போது மூச்சுக்காற்று உள்ளே செல்வதைக் கவனிக்கலாம். எண்ணங்கள் ஓயாதபோது மனதுக்குப் பிடித்த வார்த்தையைத் தொடர்ந்து உச்சரிப்பதன் வழியாக அதில் மனதைச் செலுத்தலாம். இசையைக் கேட்டபடியும் தியானம் செய்யலாம். மனதுக்குள், எண்ணங்கள் கேள்விகள் எழும்போது அதற்கு எதிர்வினை செய்யாமல், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், தியானம் செய்யும்போது மனம் அமைதியடையும். எண்ணங்களற்ற நிலையை அடையலாம்.  

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம் செய்யலாமா? 

கண்டிப்பாக. அதுவும் சாத்தியமே. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பரபரப்பான துறைகளில் பணியாற்றுபவர்கள்  பயண நேரங்களைத் தியானம் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம். கார் அல்லது டிரெயினில் பயணிக்கும் போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்ப்பதையும் பாடல் கேட்பதையுமே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  யுடியூபில் தியானம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.  தியானம் பற்றிய யுடியூப் சானலை ஆன் செய்து ஹெட்போன் மாட்டிக்கொண்டு அதில் சொல்வதைச் செய்தால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் பயணநேரம் வீணாவதால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்கலாம். தியானத்தின் வழியாக மன நிறைவும் மன அமைதியும் கிடைக்கும். 

உச்ச மனநிலையில் தியானம் செய்யலாமா? 

அதிகபட்ச கோபம், டென்ஷன், சோகம் போன்ற உச்ச மனநிலைகளில் தியானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. கண்டிப்பாகச் செய்யலாம். அந்த உணர்வு நிலையின் தீவிரத்தை மெள்ள அமைதி நிலைக்குக் கொண்டு வர தியானமே சிறந்த வழி. நமது நன்மைக்காகவும் உச்ச மனநிலையில் இருந்து வெளியில் வரவும் இதைச் செய்யப் போகிறோம் என்ற மனநிலையுடன் கண்களை மூடி மூச்சுப் பயிற்சியைச் செய்தபடி தியானத்தைத் தொடருங்கள். மெள்ள மனம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தியானம் செய்யலாமா? 

மாதவிடாய்க் காலத்தில், தான் ஒதுக்கி வைக்கப்பட்டதாகப் பெண் நினைக்க வேண்டியதில்லை. அந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள் நடக்கும். மாதவிடாய் நேரத்தில் யோகாசனங்கள் செய்யக் கூடாது. ஆனால், மூச்சுப்பயிற்சி செய்யலாம். தியானம் செய்யும்போது மாதவிடாய்க் கால வலிகளை மனம் கவனிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடியும். தியானம் செய்வதால் அந்த நேரச் சிரமங்களை மனம் ஏற்றுக்கொள்ளும். மாதவிடாய்க் காலத்தில் பெரிய அளவில் டென்ஷன் இன்றிக் கடக்க தியானம் பெண்களுக்கு உதவும். 

புதிதாக தியானம் செய்யத் தொடங்குபவர்கள் கவனிக்க: 

உங்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்யுங்கள். நேரம் இல்லை என்பவர்கள் வழக்கமாக எழும் நேரத்தைவிட அரைமணி நேரம் முன்னதாக எழ முயற்சிக்கலாம். காலைத் தியானத்தின் போது  தூக்கக் கலக்கத்தில் இருந்து வெளியில் வர எளிய யோகா பயிற்சிகள் செய்யலாம். பின் மூச்சுப்பயிற்சி, அடுத்து தியானம் என வழக்கப்படுத்திக்கொண்டால் எளிதாகும். தியானத்துக்கு முன் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்தே தியானத்தில் அமர வேண்டும். 

தியானத்துக்குப் பதிலாக... 

தியானம் செய்யக்கூட நேரம் இல்லை என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர்கள்கூட தன் எண்ணங்கள்மீது கவனம் செலுத்த வேண்டும். இரவில் படுக்கைக்குச் சென்றபின் தூங்கும் முன்பாக இதைச் செய்யலாம். நன்றாக உடலை நீட்டி இலகுவாகப் படுத்தபடிக் கண்களை மூடிக் கொள்ளவும். நான்கு முறை மூச்சை நன்றாக இழுத்துவிடவும். மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும்படியாக காலை முதல் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று வரிசைப்படுத்துங்கள். இரண்டாவதாக,  மற்றவர்கள் மனம் கஷ்டப்படும்படியாக என்னென்ன செய்தீர்கள் என்று வரிசைப் படுத்துங்கள். உங்களால் காயம்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதோடு அவர்கள் மகிழும்படியாக என்ன செய்யலாம் என்று திட்டமிடுங்கள். இதனை வழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் மனம் பாசிட்டிவ் எண்ணங்கள் நிரம்பியதாக மாறும்.  

தியானத்தில் எத்தனை வகை?   

தியானத்தை நாம் எந்த நோக்கத்துக்காகச் செய்கிறோம் என்பதில்தான் அது வேறுபடுகிறது. உடல் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்து மீட்க வெவ்வேறு பயிற்சித் திட்டங்கள் உள்ளன. சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுக்குள் வைத்தல், மாதவிடாய்க் கோளாறுகள், ரத்த அழுத்தப் பிரச்னைக்குத் தீர்வு காணுதல், மன அழுத்தம் குறைத்தல் எனப் பல பயிற்சித் திட்டங்கள் உள்ளன. அவரவர் தேவைக்கு ஏற்ற உணவுத் திட்டம், யோகாசனப் பயிற்சிகள் மற்றும் தியான முறைகள் வழியாகத் தீர்வு காண முடியும். உங்களை வெறுப்பவர்களின் எண்ணிக்கை குறையும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். நீங்கள் மகிழ்ச்சியாக உணரும்போது உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் அது தொற்றிக் கொள்ளும். அன்பு சூழ் உலகுக்கான அழகிய மந்திரமே #தியானம்.

Saturday, January 16, 2021

வராகி அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா

வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வணங்குவது நல்லதா . . . ?

வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால் , இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள் .
நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை . குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல் , கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன்.
பொதுவாகவே கிருத்திகை , பூரம் , மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும் . அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும் . இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள் , இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது .
நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும் , தீராத நோயாக இருந்தாலும் , தீராத மன கஷ்டம் , பணக்கஷ்டம் , எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து , அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து , அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு , தீபம் ஏற்றினால் போதும் . இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம் . கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம் .
வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும் . பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும் .
வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை , நவதானிய அடை , மிளகு சேர்த்த வடை , வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை, நிலத்தின் அடியில் விலையும் கிழங்குகள், காய்கள் போன்றவற்றை நிவேதனம் செய்வது சிறப்பு.

Friday, January 15, 2021

கடவுள் ஏன் கெட்டதையும் படைத்தார்.

நல்லதை படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?*
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
 சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக ‘தெரிந்து’ கொள்ள முடியாது. ஆனால், அந்த கேள்விகளுக்கான விடையை ‘புரிந்து’ கொள்ள முடியும். ‘இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்! 
நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நாம் சிந்தித்து பார்த்துள்ளோமா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம்!!

*ஒரு சிறிய கதையோடு!*

குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? அந்த குரு, சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார். 

 சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு தட்டில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார். ‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’ பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.  
சாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார். 

இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது. அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும்.

Thursday, January 14, 2021

வலிகளே நம் வாழ்க்கையின் வழிகள்.

வலிகளே நல்ல வழிகாட்டி.

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்...

வலி வந்த போது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடு தான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டது தான் இந்த வாழ்க்கை...

உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போது தான் அழகான உடற்கட்டைப் பெற முடிகிறது...

இப்படித் தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போது தான் வளமான வாழ்க்கை வாழ முடியும்...

'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்...

'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகி விடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்தத் துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிகாட்டியும் கூட...!

வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழி காட்டும்...

நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம் தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது...

வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...

ஆம் நண்பர்களே...!

அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...!

நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத் தான் ஆகவேண்டும்...!!

வலிகளையும், இடையூறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்.

Wednesday, January 13, 2021

தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம்

தீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் !
*********************

சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும்,
சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில்
தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு
வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தை
பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய
சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு
சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.

தலபெருமை:
************

மலையின் சிறப்பு: அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில்
இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்த மலை இது.

பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சிவன் காட்சி தருகிறார். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு
விசேஷ பூஜை நடக்கும்.

கோயிலுக்கு
அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக்
கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல
மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது.
வயிற்று வலி, தீராத நோயால்
அவதிப்படுவோர் நிவர்த்திக்க இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச்
செல்கின்றனர்.

அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள்
கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு,
வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும்
இருக்கிறார். இவருக்கு எதிரே தந்தைக்குரிய
நந்தி வாகனம் இருப்பது விசேஷமான
அமைப்பு.

தீப வடிவ குகை: சோமலிங்கசுவாமி
சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம்
செய்த குகை உள்ளது. பாறையில்
இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு
தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப்
போல அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின்
அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு
இடங்களில் உள்ளது.

பழநியில் முருகனுக்கு நவபாஷாண சிலை
வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம்
செய்துள்ளார். ஒரு சமயம் அவர் கௌரி பூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து
அங்கலட்சணங்களும் பொருந்திய பெண்
வேண்டுகின்றார். அத்தகைய பெண்ணைத் தேடிச்சென்ற கொங்கணர் மற்றும் கருவூரார் சித்தருக்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய
பெண் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் தந்திரமாக போகர் விரும்பியபடி ஒரு கல்லில் சிலை வடித்து, அதற்கு உயிர் கொடுத்து
அவரிடம் அழைத்துச் சென்றனர்.

 நடந்ததை தன் ஞானதிருஷ்டியில் அறிந்த போகர், அப்பெண்ணைப் பார்த்து “கல் நீ வாடி’ என அழைத்தார். கொங்கணரும், கருவூராரும்
தங்களை மன்னிக்கும்படி வேண்ட, போகர்
அவர்களை மன்னித்தருளினார். இவ்வாறு,
போகர் அப்பெண்ணை அழைத்ததால் கல்நீவாடி என்றே அழைக்கப்பட்ட ஊர், பிற்காலத்தில்
கன்னிவாடி என மருவியது. இந்த தகவல் ஜலத்திரட்டு என்னும் புராதனமான நூலில்
கூறப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:
*************

திருமணத்தடை, மாங்கல்ய தோஷம்,
பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச்
செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:
**************

வேண்டுதல் நிறைவேறியதும் சிவனுக்கு
அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முகவரி:
*******

அருள்மிகு சோமலிங்கசுவாமி திருக்கோயில்,
சோமலிங்கபுரம், கன்னிவாடி – 624705.
திண்டுக்கல் மாவட்டம்.✍🏼🌹

Tuesday, January 12, 2021

காப்புக்கட்டு சடங்கு என்றால் என்ன?

காப்புக் கட்டு சடங்கு. பொங்கல் பன்டிகைக்கு முன் போகி பன்டிகை அதாவது காப்பு கட்டு பற்றி தெரிந்து கொள்வோம்.

மாதங்களில் அழகிய மாதம்  மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை. தமிழர்கள் வாழ்வில்  வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து,  மண்ணுக்கும் கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம். மார்கழி மாதத்தின் கடைசி நாள்  போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன்  தை மகளை வரவேற்பது தமிழர் மரபு. 

இதோ இன்று போகி. இந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு' என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்குதான் நமக்கென்ன என நினைத்து, விரல் சொடுக்கில்  செல் இணைய உலகத்துக்குள் உலா போய்விடலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் சடங்குகளுக்குப் பின்னால் உள்ள  அறிவியலை உணர்ந்துகொண்டு, அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். 
படிப்பறிவு இல்லாத அந்தக் காலத்தில் அறிவியலைச் சடங்குகள் மூலமாகவே பாமர மக்களுக்குப் புரிய வைத்தார்கள் முன்னோர்கள்.  காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. இத்தனை மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. 

 காப்புக் கட்டில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகள் அரிதாகிவிட்டன. தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை இவை மூன்றும்தான் நவீனக் காப்புக் கட்டில் இடம் பெறுகின்றன. எத்தனையோ மூலிகைகள் இருக்க, இந்த மூன்று மூலிகைகள் மட்டும் ஏன் இடம் பெறுகின்றன? அந்த மூலிகைகளின் பலனைத் தெரிந்துகொண்டால், இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்து விடும்.

 ஆவாரை: 

" ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ" என்கிறது சித்தர் பாடல். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. தரிசுகள் எங்கும் தானாக விளைந்து கிடக்கும் அற்புத மூலிகை. இன்றைக்கு உலகை உலுக்கி வரும் கொடிய நோய்களான சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வாக இருக்கிறது ஆவாரை. கிராமங்களில் ஆடு,மாடுௐ மேய்ப்பவர்கள், வெயிலினால் ஏற்படும் சூட்டைத் தனித்துக் கொள்வதற்காக, தலையில் ஆவாரை இலையை வைத்துக் கொள்வார்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கிரீன் டீ யை விட, அற்புதமானது ஆவாரை நீர். கையளவு ஆவாரம் பூவை, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங் கருப்பட்டி கலந்து அருந்தினால், உடல் புத்துணர்வு பெறும். சரும நோய்கள் குணமாகும். ஆவாரை இலையை, கல்லில் வைத்து ஒன்று இரண்டாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு, கண் வழியேௐ வெளியேறுவதை உணர முடியும். உடல் துர்நாற்றத்தைத் துரத்த, உடலை மினுமினுப்பாக்க, தலைமுடி வளர என ஆவாரையின் பயன்பாடு அநேகம். ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால் உடல் சோர்வு, நா வறட்சி, நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய்கள் குணமாகும். ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவுௐ கட்டுக்குள் வரும். இத்தனை அற்புதங்கள் இருப்பதால்தான் ஆவாரையைக் காப்புக் கட்டில் வைத்தார்கள். 

 சிறுபீளை: (பூளைப்பூ)

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிது கற்பேதி யறி"

என்கிற பதார்த்த குணபாடம்(219) சிறுபீளையின்ௐ மகத்துவத்தை விளக்குகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள். 

 வேப்பிலை:

வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத்ௐ தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான்  காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள்.

இப்போது புரிகிறதா..? காப்புக் கட்டு வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது நம்ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம்ௐ அனைவரின் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்று காப்புக் கட்டும் போது, அதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும். 

பழைய பிளாஸ்டிக்,டயர் மற்றும் குப்பைகளை எரிப்பது மட்டும் போகிப்பண்டிகை அல்ல. அது காற்றை மாசுபடுத்தும் சுகாதாரக்கேடு. உண்மையில் அது நம் மனதில் உள்ள 
 காமம்
 கோபம்
 சுயநலம்
 கர்வம்
 பொறாமை
ஆகிய பஞ்சமா பாதகங்கள் என்னும் குப்பைகளை  முழுவதும் எரித்துப் போக்கி விடுவதுதான் போகிப்பண்டிகை.
🌹🌻🙏🏻MPK🙏🏻🌻🌹

Monday, January 11, 2021

எதிர்பார்ப்பதை விட்டு விடுங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

*எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள்:-*

எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. 

மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். 

அது எப்படி வருகிறது எனில் கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். 

எனக்கு இப்படி வர வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையான எதிர்பார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத்தான் கிடைக்கிறது. 

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று நீங்கள் யோசித்துச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். 

பிறருக்கு மனப்பூர்வமாக எந்த அளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும் மன அமைதியும் ஆற்றலும் உண்டாகும்.

பொருளைக் கொடுத்துத்தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ அந்த ஆற்றலைக் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலே, பொருளாலே, பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.

காலையிலும் மாலையிலும் இந்த உலகம் சமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்த முடியாதா? அதைச் செய்யலாமே. 

அம்மாதிரி எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டே இருப்போமானால் மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும். 

நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால், எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் மனதளவில் ஏழ்மையில்தான் இருப்பார்கள். 

நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக் கொண்டு என்னென்ன வகையில் பிறர்க்கு சேவை, உதவி, செய்ய முடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
.

இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் மேலும் மேலும் ஆற்றல் வளரும். செல்வமும் வளரும், மகிழ்ச்சியும் நிறைவும் வளர்ந்து கொண்டே போகும். 

*எதிர்பார்த்தல் ஏமாற்றம்:*

"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண 
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".

*மனநிறைவு :*

"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது 
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில் 
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும் 
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும் 
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும் 
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும் 
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி 
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்."

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*