மறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது?
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது விதி. இந்த உலகில் பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே யிருக்கும். மறுபிறவி அல்லாத வீடுபேறு வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்நியாசிகள் மட்டுமே. ஆசை என்பதை முற்றிலும் துறந்தவர்களுக்கு மட்டுமே வீடுபேறு என்பது கிட்டும்.
மற்றபடி ஆசை என்ற எண்ணம் எவர் ஒருவர் இடத்தில் உள்ளதோ அவர் யாராக இருந்தாலும் மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. ஆசை என்பது இவ்வுலகில் நாம் விதைக்கின்ற விதை. அது மரமாகி கனி தரும் நேரத்தில் நாம் அதை அனுபவிப்பதற்கு மறுபிறவி எடுத்திருப்போம். இதில் ஒரு சிலர் புண்ணியம் எனும் நல்ல விதையை விதைத்து அதற்குரிய பலனை மறுபிறவியில் அடைகிறார்கள். இன்னும் சிலர் பாவம் எனும் விதையை விதைத்து அதற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள்.
நடைமுறை வாழ்வினில் ஒருவர் சகல சௌபாக்யங்களுடன் வாழ்வதையும் மற்றொருவர் தரித்திர நிலையில் கஷ்டப்படுவதையும் காண்கிறோமே, இவை அனைத்தும் முற்பிறவியின் பலனே. ‘பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே..’ என்று ஜோதிஷ சாஸ்திரமும், ஆயுர்வேத சாஸ்திரமும் ஒரே குரலில் சொல்கின்றன.
முன்ஜென்மத்தில் செய்த பாபத்தின் தண்டனையை இந்த ஜென்மத்தில் வியாதியாக அனுபவிக்கிறோம் என்பது இதன் பொருள். அவ்வாறு முன்ஜென்ம பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் என்பது உண்மையாகில் இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கான பலனை அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்போம் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுவதால் மனிதருக்கு மறுபிறவி உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆசை என்பது எவர் ஒருவரிடத்தில் உண்டோ அவருக்கு மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. இதில் அணு அளவும் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment