#நாகதோஷம்!
"நல்ல உடல்நிலை கொண்ட திடகாத்திரமான மனிதருக்கு, எந்த காயங்களும் இல்லாமலேயே, திடீரென்று சில இடங்களில் முதுகுத்தண்டு வீக்கமடைய துவங்கும் - இது நாகதோஷம்".
"முடிவில்லாத சிறுநீர் பாதை தொற்றுநோய் எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதை நாம் நாகதோஷம் என்று சொல்வோம்".
இதற்கு பல அம்சங்கள் உள்ளன. நாகதோஷம் என்று சொல்லும்போது, நாம் வெளியில் உள்ள ஒரு பாம்பைப் பற்றி சொல்லுவதில்லை. இன்று, ஓர் நிரூபிக்கப்பட்ட உண்மை என்ன வென்றால், உங்கள் மூளையின் ஒரு குறிப்பிட்ட பாகம் ஊர்வனவற்றிற்கான மூளையின் அம்சம் (Reptilian Brain) கொண்ட தன்மையாக உள்ளது. உங்கள் மூளைக்குள்ளேயே ஒரு சிறிய மூளை, தோராயமாக உங்கள் கைமுட்டி அளவு உள்ளது. அது ஒரு முதலையின் மூளை அளவில் உள்ளது.
மூளையின் இந்த பகுதிதான், உங்கள் பிழைப்புக்கு உதவிகரமாக உள்ளது. மூளையின் இந்த பகுதிதான், நீங்கள் எங்கு செல்லவேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. மூளையின் இந்த பகுதிதான், எல்லா பயங்களுக்கும் அடிப்படையானது. மூளையின் இந்த பகுதிதான், எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறது. மூளையின் இந்த பகுதிதான், உங்களை திருமணம் புரியச் செய்தது. ஏனென்றால், திருமணம் என்பது உங்கள் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு வழிதான். குடும்பம் என்பது ஒரு எல்லைதானே? உண்மையா, இல்லையா? குடும்பம் என்பது ஒரு எல்லை, ஒரு மரபுரீதியான எல்லை. எனவே, பெரும்பான்மையான மக்களுக்கு மூளையின் இந்த பகுதிதான் அதிகமாக செயல்படுகிறது. மூளையின் அடுத்த பகுதியான புறமூளை (Cerebral Cortex) என்பதை, துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான மக்கள் ஒரு பிரச்சனையாகவே உணர்கிறார்கள்.
பெரும்பான்மையான மக்கள் விடுதலையை நாடுவதில்லை. அவர்கள் பந்தத்தையே விரும்புகிறார்கள், உண்மைதானே? நீங்கள் சுதந்திரத்தை விரும்புகிறீர்களா அல்லது பந்தத்தை விரும்புகிறீர்களா? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், நீங்கள் ஒருவிதமான பந்தத்தையே விரும்புகிறீர்கள் என்று உங்களுக்குப் புரியும். நீங்கள் எப்போதுமே ஒரு விதத்தில் கட்டுண்டு இருப்பதையே விரும்புகிறீர்கள், அதுதான் ஊர்வனவற்றிக்கான மூளை என்பது. உங்களை மனிதனாக்குகிற புறமூளையின் பரிமாணங்கள் உங்களுக்குள் செயல்படுமேயானால், நீங்கள் சுதந்திரம் அடையவே விரும்புவீர்கள். நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடைய விரும்புவீர்கள்.
ஆன்மீக செயல்பாடுகள் இயல்பானவை. தேடுதல் என்பது இயல்பானது. ஆனால், நீங்கள் ஊர்வனவற்றிக்கான மூளையின் பாகத்திலிருந்து செயல்படுவீர்களானால், அதைத்தான் நான் நாகதோஷம் என்பேன். இதுவே மிகக் கொடிய விதமான நாகதோஷம். ஆனால், உண்மையில் நாகதோஷம் என்பது பலதரப்பட்ட நிலைகளில் உள்ளது. சிலர் தோல் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாவர் - இதுவும் நாகதோஷமே. ஆனால், நீங்கள் உங்கள் ஊர்வன வற்றிக்கான மூளையோடு எல்லைகட்டி நிற்பதே மிகக் கொடிய விதமான நாகதோஷம் ஆகும். உங்களை மனிதத் தன்மைக்கு கொண்டு வருகிற மூளையின் பாகம் இன்னும் செயல் பாட்டில் இல்லை. நீங்கள் இதை எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு என்பதை விட ஒரு தொந்தரவாகவே, ஒரு பிரச்சனையாகவே உணர்கிறீர்கள்.
ஆகையால், ஆன்மீக செயல்பாடு என்பது இதுதான்: எப்போதும் எல்லை கட்டவே முயற்சிக்கின்ற ஊர்வன வற்றிக்கான மூளையிலிருந்து விடுபட்டு செல்வது. ஒரு நாய் எல்லா இடத்திலும் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது அந்த நாய்க்கு ஏதோ சிறுநீர் பிரச்சனை இருக்கிறது என்பதால் அல்ல. (சிலர் சிரிக்கிறார்கள்). அது தன் எல்லையை நிர்ணயம் செய்துகொள்கிறது. நீங்கள் நம்புவது போலவே, அந்த நாயும் அதுவே தனது ராஜ்ஜியம் என நம்புகிறது. நீங்கள் தொடர்ந்து எல்லைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள் - மக்களுடனோ அல்லது பொருள்களுடனோ அல்லது இப்புவியின் பரப்புடனோ - நீங்கள் எல்லை கட்டவே விரும்புகிறீர்கள். ஊர்வனவற்றிக்கான மூளையின் அதிகபட்ச வெளிப்பாடுதான் தேசம். ஊர்வனவற்றிற்கான மூளையின் குறைந்த பட்ச வெளிப்பாடுதான் குடும்பம் (கை தட்டல்). எனவே நீங்கள் கண்டிப்பாக நாகதோஷத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், சர்ப்பத்தின் சாபத்தினால்.
எனவே, நீங்கள் விடுதலை அடைய, நாகம் தனது எல்லைகளைக் கடந்து மேலெழும்புதல் என்பது யோகத்தின் முழு அடையாளமாகவே உள்ளது. நாகம் எப்போது மேலெழும்புகிறதோ அப்போது அது நுண்ணுணர்வின் வித்தியாசமான பரிமாணமாக ஆகிறது, அங்கே அது எல்லா தளைகளையும் உடைக்கிறது, எல்லா எல்லைகளையும் கடந்து செல்கிறது. மனிதத்தன்மை என்று கருதப்படுவதையும் தாண்டிச் செல்கிறது. எனவே நாகத்தை தன் தலைக்கு மேலே கொண்டவனை தமிழில் கடவுள் என்றே சொல்கிறார்கள். ஏனென்றால், அவனுடைய உணரும்திறன், அவன் உள்ளனுபவம், அவனுடைய புரிதல் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்கிறது. எனவே நீங்கள் அவனை கடவுளுக்கு ஒப்பானவன் என்றே கொள்வீர்கள்.
தீராநோய்களும் நாகதோஷமும்:
இந்தியாவில் உள்ள சில ஊர்களில், பொதுவாக நாகதோஷம் என்று சொல்லப்படுவது, ஒரு குறிப்பிட்ட விதமான நோயாகும். அது எந்தவித சிகிச்சை முறைக்கும், எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. ஆனால் நீங்கள் நாகம் சம்பந்தப்பட்ட ஒருசிலவற்றைச் செய்தீர்களேயானால், அந்நோய்கள் மறைந்தே போகும். சில சமயங்களில், இது, சிறுநீர் பாதை தொற்றுநோய் போல வெளிப்படலாம். நீங்கள் எண்ணற்ற மருத்துவரிடம் செல்லலாம், எவ்வித மருந்தும் உட்கொள்ளலாம். ஆனால் வருடக்கணக்கில் குணமடையாது, குணமடையாது, குணமடையவே ஆகாது. மருத்துவர்கள் இது போன்றோரை பார்த்திருக்கக்கூடும். முடிவில்லாத சிறுநீர் பாதை தொற்றுநோய் எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதை நாம் நாகதோஷம் என்று சொல்வோம். நோய் எதற்குமே கட்டுப்படவில்லை எனும்போது, சில குறிப்பிட்டவற்றை ஒருவர் செய்யமுடியும்.
ஏனென்றால், இந்நாட்களில் பெரும்பான்மையானவர்களுக்கு முதுகுத்தண்டு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவர்களுக்கு உடலில் போதுமான அளவு தசைகள் இல்லை - அது வேறு விஷயம். அவர்கள் தங்கள் உடலை கல்லறைக்காக பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உடலை அவர்கள் உபயோகப் படுத்துவதே இல்லை. அந்த மாதிரியானவர்களுக்கு முதுகுத்தண்டு பிரச்சனை இருக்கும். இது அதை பற்றி அல்ல. நல்ல உடல்நிலை கொண்ட திடகாத்திரமான மனிதருக்கு, எந்த காயங்களும் இல்லாமலேயே, திடீரென்று சில இடங்களில் முதுகுத்தண்டு வீக்கமடைய துவங்கும் - இது நாகதோஷம்.
சில குறிப்பிட்டவற்றைச் செய்வதன் மூலம் இதை சுலபமாக சரிசெய்துவிட முடியும். அவர்கள் கோயிலுக்கு சென்று வந்தாலே பிரச்சனை மறைந்துவிடும். இதுபோன்ற எண்ணற்ற மக்களை, குறிப்பாக தென்னிந்தியாவில் நீங்கள் பார்க்க முடியும். அல்லது அவர்கள் ஏதேனும் அர்ப்பணம் செய்தால் அது மறைந்துவிடும்.
No comments:
Post a Comment