Saturday, January 9, 2021

மனைவி என்னும் தெய்வத்தை போற்றுங்கள்

*மனைவி எனும் தெய்வம்*

எழுபத்தைந்து வயதில் ஆதரவு இன்றி நிக்குது மனசு...

நாற்பதைந்து வருடம் ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்...

என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்...

அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...

ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு  ஊட்டி இருக்கலாம்...

ஒரு நாளாவது அவளுக்கு பதில் நான் அவளது துணியையும் சேர்த்து  துவைத்து இருக்கலாம்...

ஒரு நாளாவது TVயையும், Mobilலையும்  அணைத்துவிட்டு, அவளை  கொஞ்சி இருக்கலாம்...

ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும், எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...

ஒரு நாளாவது என் விடுமுறை நாட்களில் அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்...
ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...

அவள் விரும்பி கேட்காத போதும் ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...

ஒரு மாசமாவது என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...

ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்..

நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...

அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...

அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் அவளை கவனித்து இருக்கலாம்...

அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...

என்...
தாயே.!.
தாரமே.!.

நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...

என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...
தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும் சினம் வருது...

என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...

நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...
ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது உனக்கு வாங்கி தராதவன் நான்...

மூச்சு இழந்த உன் புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் 
மன்னிப்பு கேட்கிறேன்...

மனைவியே.!.
என்னை மன்னித்து விடு...

மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு...

நான் உன்னை கொண்டாட வேண்டும்...

எழுபத்தைந்து வயதில் இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க...

உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்.!.
வாழ்க்கை வசந்தமாகும்.!

🌷🌷

Friday, January 8, 2021

சிவன் அர்த்தநாரீஸ்வர ராய் ஏன் ஆனார்?

🏵️ சிவன் அர்த்தநாரிஸ்வரர் ஆனது ஏன்? 

ஒரு முறை கயிலாயத்திற்க்கு சிவபெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர் தேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும்  வலம் வந்து வணங்கிவிட்டு போனார். 

இதை பார்த்து துணுக்குற்ற பார்வதிதேவி அடுத்தமுறை முனிவர் வந்தபொழுது இறைவனை விட்டு பிரியாமல் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டார். முனிவரோ ஒரு வண்டு வடிவம் எடுத்து இறைவனின் திருமுடியை மட்டும் சுற்றி வலம் வந்து வணங்கிவிட்டு போனார்.

முனிவரின் செய்கையால் வருத்தம் அடைந்த தேவி அந்த முனிவர் என்னை ஒதுக்கிவிட்டு தங்களை மட்டும் வலம் வந்து வணங்கி விட்டு போகிறார். நீங்களும் எதுவும் சொல்லாமல் இருக்கிறீர்களே உங்களை வணங்கிய பிருகு முனிவர்  எம்மையும் வணங்காது அலட்சியப்படுத்தியது சரியா எனக்கேட்டார்.  

உலக இன்பங்களை விரும்பி இருந்தால் உன்னையும் வணங்கி இருக்க கூடும். முனிவர் மோட்சத்தை மட்டுமே கருதி வந்ததால் என்னை மட்டுமே வணங்கி  வழிபட்டிருப்பார் போலிருக்கிறது என்று பதில் அளித்தார் இறைவன். 

ஈசனின்  சமாதானம் அன்னைக்கு ஏற்புடையதாக இல்லை. ஈசனை  விட்டு தம்மை தனியாக பிரித்தது பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெற்று விட்டால் தம்மை பிரிக்க முடியாதல்லவா என்று நினைத்தார். தனது எண்ணம் ஈடேருவதற்காக  தவம் மேற்கொள்ள நினைத்தார். 

பூவுலகில் திருமறை காட்டை (வேதாரண்யம் ) அடுத்து எட்டு திக்குகளிளும் சிவ ஸ்தலன்களால் சூழப்பட்ட எட்டி வனத்தை தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தார்.

வால்மீகி முனிவர் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருப்பதையும் புற்று அவரை மூடி  கொண்டிருப்பதையும் கண்டார். முனிவரின் தவ வலிமையால் ஒரு காந்த சக்தி வனம் முழுவதும் பரவி இருப்பதை தேவி பார்த்தார். அந்த இடமே  நாம் தவம் செய்ய உகந்த இடம் என்று உணர்ந்து வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு அருகிலேயே ஒரு எட்டி மரத்தின் கீழ் அமர்ந்தார் தேவி.  

புற்றிலிருந்து  வெளியேறிய முனிவர் ஆசிரமத்தின் அருகில் உமையம்மை தவக்கோலத்தில் வீற்றிருப்பதை  பார்த்து அவரை வணங்கினார். இறைவன்  திருமேனியில் இடம் பெறுவதற்காக தாம் தவம்  செய்ய  வந்திருப்பதாக தேவி கூறியபொழுது கேதாரீஸ்வரர் விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமானை திருப்தி செய்தால் வேண்டிய வரத்தை பெறலாம் என முனிவர் யோசனை கூறினார். 
  
வனத்தில் தேவி சிவலிங்க பிரதிஷ்டை செய்து புரட்டாசி மாதத்து  மாதத்து வளர்பிறையில் இருந்து  தொடங்கி ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி வரை விரதம் இருந்து சிவபெருமானை வழி பட்டு வந்தார். தேவியின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த இறைவன் தேவி வேண்டியபடி தமது திருமேனியில் இடப்பாகத்தை தேவிக்கு அளித்து விடுகிறார். . இறைவனும் இறைவியும் ஒன்று சேர்ந்த அந்த அந்த திருஉருவம் தான்  அர்த்தநாரீஸ்வரர்.

🙏 

Thursday, January 7, 2021

தங்கமான வாழ்க்கைக்கு அர்த்தமுள்ள யோசனைகள்

*பிறப்பிற்கும்* 
      *இறப்பிற்கும் இடையில்,*
      *நீ செய்யும்* *பாவம்*
      *புண்ணியம்* *மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்* 
      *இதுவே...!!*

01) பெற்றோர்களை  
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!

02) பணம் பணம் என்று 
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய்   
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே  
     போ...!!

03) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!

04) நேர்மையாக 
இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை 
     காப்பாற்றும். ..!!

05) வாழ்வில் சின்ன சின்ன 
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம் 
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!

06) உன் அம்மாவிற்காக
     ஒரு போதும் 
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!

07) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய் 
     இரு...!!

08) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!

10) ஒருவன் துரோகி
      என்று தெரிந்து 
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!

11) எல்லோரிடமும் 
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

12) நீ கோவிலுக்கு
      சென்று தான்
       புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!

13) நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!

14) எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

15) அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை 
      என்று நினைக்காதே...
      நம்மை விட  
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள் 
      என்பதை மனதில்
      கொள்...!!

16) பிறப்பிற்கும் 
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும் 
      இதுவே...!!

*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Wednesday, January 6, 2021

உங்களை நீங்கள் புரிந்து கொள்ள ஒரு பதிவு

🙏இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...❤
(இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

.    👍 பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...👍
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
🌹🌹 உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... நன்றி.  படித்ததில் பிடித்தது அன்புடன் உங்கள் நண்பன்
🌹🌹🌹🙏🍄🍄

Tuesday, January 5, 2021

விதியின் உண்மையான அர்த்தம் இதுதான்

*விதி என்றால் என்ன ..?*

காலம் ..!!
எந்த விதியும் இதற்குள் அடக்கம் ! 
விதிகள் காலத்தால் மாறும் ..!!
 
விதி விளையாடி விட்டது. 
அது அவன் விதி. 
விதிப்படி நடந்தது 
எல்லாம் என் விதி
என்றெல்லாம் சொல்கிறோமே ! 
இந்த விதி என்பது என்ன? 
யார் இதை நிர்ணயிக்கிறார்கள்? 
ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
 
விதி தான் ஒருவனது வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படித்தான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய ஏன் உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்குதான் என்ன? இன்னும் இந்த விதியைப் புரிந்து கொள்ள இப்படி நிறைய கேட்டுக் கொண்டே போகலாம்.
 
முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவோம். பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
 
விதி என்பது பெரும்பாலும் நமது மன சமாதானத்திற்க்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது போய் விட்டான். தோற்க வேண்டும் என்று விதி அதனால் தான் தோற்றேன். எனக்கு விதிக்கப்படவில்லை அதனால் தான் கிடைக்கவில்லை. அவன் விதி நல்லாயிருக்கு அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்காக நாம் விதியைப் பயன்படுத்துகிறோம்.
 
உண்மையில் இப்படி நமது செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழிபோடா விட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைந்திருப்போம் என்பதே உண்மை. இத்தகைய மன சமாதானத்திற்கு விதி பயன்படுகிறது.
 
இப்போது விதி என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். 
விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது.
 
1. சுய நிர்ணய விதி. 
2. சமூக விதி. 
3. பிரபஞ்ச விதி.

1. சுய நிர்ணய விதி.
 
விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கற்பனைக்கு விளங்காத ஒரு வலைப்பின்னலாக இருக்கிறது. இதில் சுய நிர்ணய விதி என்பது என்ன?
 
எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்க்கைக்கான விதியை என்னால் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்...முடியும் . உங்கள் விதி உங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல்.... அநேகமாக உங்களுக்கு புரிந்திருக்காது. புரியவைக்க முயற்சிக்கிறேன்.
 
சுய நிர்ணய விதியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அடிப்படையில் மறுபிறப்பு என்பதை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது.
 
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனைப்பார்த்துச் சொல்கிறார் "அர்ஜுனா! நீயும் நானும் இந்த மண்ணில் பலமுறை பல வடிவங்களில் பிறந்திருக்கிறோம்! அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது" என்று சொல்லி அர்ஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்துரைக்கிறார்.
 
மேலும் மனிதனின் உடல் தான் இறக்கிறது. ஆத்மா என்ற நமது உணர்வு ஸ்வரூபம் இறப்பதில்லை. அத்தகைய ஆத்மா உடலை விட்டுப் பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்தமானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிறவியில் தான் விட்டுப்போன உணர்வுகளுக்கு பதில் கிடைக்குமாறு வாழ முயற்ச்சிக்கும். 

முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்க்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியாது.
 
உதாரணமாக நல்ல தெய்வபக்தியுடன் கூடிய அமைதியாக தர்மத்தைக் கடைபிடித்து வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அடிதடியும் முரட்டு குணமுமாக போலீஸ் கேஸ் என்று அலையும் நிலையில் இருப்பார். உங்க குடும்பத்துக்கே இல்லாத புத்தி உனக்கு எங்கே இருந்துடா வந்தது என்ற புரியாமல் கேட்பார்களே அது இப்படித்தான்.
 
ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அந்த குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படைக் குணத்தை நிர்ணயிக்கும்.
 
இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்பத்தின் வளர்ப்பு ஒருவனது குழந்தைப்பருவத்தைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமைபருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது. அந்த விதிப்படி அவன் இளமைப்பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்க்கை முழுவதுக்குமான விதியாக அமைகிறது. 

இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை சுய நிர்ணய விதி நிர்ணயிக்கப்படுகிறது.
 

2.சமூகத்தாலான விதி
 
நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பிப் போவோம். குடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம். 

எனவே ஒரு சமூகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும். இந்த சங்கிலித்தொடர் இருக்கிறதே இது சமூகத்தால் உண்டாகும் விதி.
 
உதாரணமாக நமக்கு முந்தைய தலைமுறையில் ஆண் குழந்தை தான் பெரிசு என்று பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தார்களானால் இந்த தலைமுறைக்குத் திருமணத்திற்குப் பெண்ணே கிடைக்காமல் போகிறது. 

ஆனால் தனி ஒரு மனிதனுக்கு, தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் போகும். ஆனால் இது சமூகத்தின் நடவடிக்கையால் உண்டான விதி. அது நமக்கு சம்மந்தமில்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமூகத்தால் உண்டான விதி ஆகும்.
 
அதேபோல இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைப்போர்கள் உரிமைப் போர்கள் இனச்சண்டைகள் அதனால் ஏற்படும் மரணமும் இதற்கு உதாரணமகச் சொல்லலாம்.
 
இவைகள் கடந்தகாலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட சமூகத்தாலான விதிகளாகிறது.
--------------------- 

3. பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி:
 
சுனாமி. இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. ஆம். இயற்க்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. 

ஆனால் இயற்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலங்காலமாக நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதியாகும்.
 
இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிக்குட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளைக் கொண்டு வாழ்க்கையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்குப்பண்ணிப் பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்ந்திருக்க முடியாது.
 
இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாடில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்கப்படுவதாலேயே நாம் விதியை நம்புவது நமது விதியாகிறது.
 
ஆக கடந்தகால இயற்க்கையின் நிகழ்வு, சமூக நிகழ்வு, மனித வாழ்க்கை இவற்றின் விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிக்கின்றன. நிகழ் காலத்தில் நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிக்கிறது. 

எனவேஇதை நன்றாக உணர்ந்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களிலிருந்து மீறாமல் வாழ்வது எதிர்காலத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதிக்கொள்வது போல் ஆகும்.

Monday, January 4, 2021

குறை கூறிக்கொண்டு இருந்தால் நம் வாழ்க்கையில் குறையாகவே இருக்கும்.

💓 நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் 

குறை கூறும் இயந்திரம் ஒன்று ஓயாமல் செயல்பட்டு கொண்டே இருக்கிறது

குறை சொல்வது மனிதனின் இயற்கை குணம் என்றே கூறலாம் 

“இது சரியில்லை அது சரியில்லை என்று 

சதா கூறிக்கொண்டிருக்கும் நபரின் மனம் 

முற்றிலும் தவறான விஷயமாக பெரிது படுத்தி காட்டும் 

வீட்டில் குப்பை கூளங்கள் நிறைந்திருப்பதால் வீடே சரியில்லை 

அதில் வாழும் மனிதர்களே சரியில்லை என்பதும் 

ஹோட்டலில் சர்வீஸ் சரியில்லை என்று நிர்வாகியிடம் புகார் கூறுவது

மின்சாரம் துண்டிக்கபப்ட்டால் மின் வாரிய அலுவகத்தில் புகார் கூறுவது 

இன்னும் சற்று வித்யாசமாக குறை கூறும் நபர்களும் உண்டு 

வானிலை பற்றி குறை கூறுவது

இதனால் இயற்கையே தவறு செய்வது போலவும் 

தான் மட்டும் உலகில் நல்லவர் போலவும் 

இந்த அகங்காரம் தன்னையே பெரிதாக நினைக்கிறது

நம்மால் எதுவுமே செய்ய முடியாதபோது 

இதுபோல விஷயத்தை பற்றி குறை சொல்வதால் 

நாம் வெறுப்பு என்ற விதையை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கிறோம்

உதிக்கும் சூரியனின் கதிர்களை பார்க்கும்போது 

புருவத்தை உயர்த்தி முகத்தை சுளித்து 

மொத்தத்தில் இந்த ஊரே இப்படித்தான் 

என்று ஒட்டுமொத்த நகரத்தையே சபிக்க ஆரம்பிக்கிறோம்

அரசியல் பற்றியும் 

அரசாங்கம் நடத்தும் ஆட்களை பற்றியும் 

குறை கூறுவது ஏகப்பட்ட அலாதியான இன்பம் சிலருக்கு 

இது மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனையாகவே கருதுகிறோம்

அவர்களை குறை கூற தெரிந்த நமக்கு 

நாம் எப்படிப்பட்டவர்கள் என்று சற்று குனிந்து நம்மை பார்க்க நேரம் இருப்பதில்லை

இப்படி குறை கூறும்போது 

நம்முடைய அகங்காரம் பெரிதளவு வளர்ந்து விருட்சம் ஆகிறது

இன்னும் இறைவனை பற்றிய குறை கூறும் படலம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள்

யாரையும் குறிப்பிட்டு குறை கூற முடியாமல் போகும்போது 

நம்முடைய குறைகள் இறைவனை நோக்கி திரும்பிகிறது 

இன்னும், உறவினர்கள், 

சக குடும்பத்தினர்கள்

சக தொழிலார்கள் 

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்

மனிதர்களுடைய அகங்காரத்தால் 

பார்த்து பார்த்து தயார் செய்யபடும் குற்றங்கள் தான் இந்த குறை கூறும் பழக்கம்

மனிதனின் அகங்காரமானது சரி என்றும் 

தவறு என்றும் வாதிடும் போது 

அவருடைய அறிவுக் கண்ணை மறைத்து 

தேடித்தேடி குறை கூறும்

அது நியாயம் என்றே வெளிப்படுத்தும்

இந்த குறைகளை வெளிப்படுத்துவதே அகங்காரத்தின் வெளிப்பாடு தான்

குறை கூறும் போது 

தனது அகங்காரம் திருப்தி அடைகிறது 

இதனால் சமுதாயத்தில் 

“எதற்கெடுத்தாலும் புலம்புவர்” என்ற பட்டம் மட்டுமே கிடைக்கும்

குறைகளை சுட்டிக்காட்டுவதில் மனதிற்கு ஏன் இத்தனை குதூகலம் ....???

இதன் உளவியல் காரணம்தான் என்ன..???

குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும் 

என்று மனம் எப்போதும் நினைப்பதில்லை

குற்றங்களை கண்டுபிடிப்பதில் 

குறைகளை சுட்டிக்காட்டுவதில் 

மனம் அதீத திறமையுடன் செயல்படுகிறது 

இந்த பழக்கத்தால் நமக்குள் என்ன மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது 

என்று என்றைக்காவது நினைத்ததுண்டா.....???

குறை சொல்லும் மனதை பொறுத்தவரை 

மகிழ்ச்சியும் நிம்மதியும் இரெண்டாம் பட்சம் தான் 

மனித மனம் எப்போதுமே தன்னை சிறந்ததாகவும், உயர்ந்ததாகவும், பெரியதாகவும் காட்டிக்கொள்ளவே ஆசைபடுகிறது

மனதின் தேவை இதுதான் 

தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 

மனமானது என்ன வேண்டுமானாலும் செய்யும் 

எப்போதுமே முழுமை அற்றதாக 

தெளிவற்றதாக

திருப்தி அற்றதாக உணரும் அகங்காரத்தின் ஆணிவேர் தான் 

“தானே உயர்ந்தவன் என்ற சுய முக்கியத்துவத்தை முன்னிலை படுத்தும்

தன்னை உயர்ந்ததாக வெளிப்படுத்த மற்றவரின் குறைகளை சுட்டிக்காட்டி 

அவர்களை மட்டம் தட்டும்போது 

தானே வென்றாதகவும் நினைத்துக் கொள்கிறது

அவர்களுக்குள் இருக்கும் அறியாமை தான் 

இதுபோல குறைகளை சுட்டிக்காட்டுவதில் வெளிப்படுகிறது

இந்த பழக்கம் நாளடைவில் பிரிக்க முடியாத பழக்கமும் ஆகிவிடுகிறது

இதனால் நல்ல விஷயங்களையும் கண்டுணர அவர்களால் முடிவதில்லை 

இதனால் தம்முடைய வாழ்க்கையே சலிப்புற்றதாக எண்ண வேண்டிய சூழலுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள்

தங்களுடைய வாழ்வில் திருப்தி இல்லாத மனிதர்கள் தான் 

பிறருடைய குறைகளை காணுகிறார்கள்

இந்த உலகில் எந்தக் குறையும் இல்லாத மனிதர்கள் 

இதுவரை பிறக்கவும் இல்லை 

இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை 

வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களை கூட 

நன்றி உணர்வை தெரிவிக்கும் போது 

குறை கூறும் பழக்கம் எளிதில் விடுபடும் 💓

💗 மனித மனதின் அலசலில் : உள் முக பயணம் 💗

Sunday, January 3, 2021

12 ராசிகள் 12 கோயில்கள்

12 ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய கோயில்கள்

இன்பங்கள், துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்த அனுபவம் தான் வாழ்க்கை. அனைவருமே வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் பல விதமான கஷ்டங்கள், சோதனைகளை சந்திக்கவே செய்கின்றனர். அப்படியான காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிகம் மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடமே தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியினரும் எந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்:

சூரிய பகவான் உச்சமடையும் ராசியான மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிவோடு செய்பவர்கள் ஆவர். இவர்கள் தங்கள் வாழ்வில் நன்மையான பலன்களை பெற உங்களால் முடிந்த போது பழனி மலை பாலதண்டாயுதபாணி முருகனை வணங்கி வர வேண்டும்.

ரிஷபம்:

பொதுவாக கலைகளில் அதிகம் ஈடுபாடு கொண்ட ரிஷப ராசிகாரர்கள் தாங்கள் ஈடுபடும் எத்துறைகளிலும் தங்களின் தனித்தன்மையை காட்டுவார்கள். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாறுதல்களை பெறுவதற்கு திருவையாறு அருள்மிகு ஐயாறப்பரையும், அறம்வளர்த்த நாயகியையும் வருடமொருமுறை தரிசிப்பது நல்லது.

மிதுனம்:

எத்தகைய ஒரு பிரச்சனைக்கும் தங்களின் சிறந்த சிந்தனை திறன் மற்றும் அறிவாற்றலை கொண்டு தீர்வு வழங்குபவர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆவர். மிதுன ராசியினர் தங்களின் வாழ்வில் அனைத்திலும் சிறப்பாக விளங்க பாண்டி நாட்டு நவ திருப்பதி கோயில்களில் ஒன்றான திருத்தொலைவில்லி மங்கலம் கோயில் சென்று அங்கிருக்கும் பெருமாளையும், தாயாரையும் வணங்க வேண்டும்.

கடகம்:

சிறந்த நிர்வாக திறனால் அனைவரையும் உங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திறமை கொண்ட கடக ராசியினருக்கு எப்போதும் பெண் தெய்வ வழிபாடு சிறந்த நன்மைகளை தரும். அதிலும் மயிலாடுதுறை அருகில் இருக்கும் திருமீயெச்சூர் லலிதா பரமேஸ்வரி தேவியை வணங்கி வர பல சிறந்த மாற்றங்கள் கடக ராசியினருக்கு உண்டாகும்.

சிம்மம்:

வாழ்வில் ஒரு இலட்சியத்தை கொண்ட பிறகு எப்பாடுபட்டேனும் அதை நிறைவேற்றும் திறம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்கார்களின் குணமாகும். தங்கள் வாழ்வில் அனைத்திலும் மலை போல் உயர திருவண்ணாமலை அருணாச்சல மலையின் கீழ் கோயில் கொண்டிருக்கும் அண்ணாமலையரையும், உண்ணாமுலை அம்மனையும் நீங்கள் வழிபட்டு வர வேண்டும்.

கன்னி:

பிறரை சரியாக எடைபோடுவதில் வல்லவர்களான கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் சொந்த முயற்சியால் முன்னேற்றமடைவர். எப்போதும் கன்னி ராசியினரின் வாழ்வில் பொருளாதார உயர்வுகளையும், மிகுந்த நன்மைகளையும் பெறுவதற்கு சீர்காழி அருகே இருக்கும் திருவெண்காடு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

துலாம்:

எப்போதும் தங்களை சிறப்பாக அலங்கரித்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் தீமைகள் நீங்கி, எப்போதும் நன்மையான பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்களை அதிகம் பெறுவதற்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் வளமை பெருகும்.

விருச்சிகம்:

எத்தகைய கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தங்களின் வாழ்வில் முன்னேற தொடர்ந்து உழைக்க கூடியவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள் ஆவர். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், சோதனைகள் நீங்க எந்த ஒரு சித்தர் ஜீவ சமாதி பீடத்திற்கும் சென்று வழிபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக நெரூர் சதாசிவ பிரம்மரேந்திரர் ஸ்வாமிகளின் ஜீவ சமாதி சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

தனுசு:

வாழ்வில் பணத்தின் தேவை முக்கியமானது தான் என்றாலும் அதை விட உயரிய ஒன்றான இறைவன் பற்றிய சிந்தனை மற்றும் செயல்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற சென்னைக்கு சற்று அருகே இருக்கும் திருப்புட்குழி கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

மகரம்:

எளிதில் சோர்வடையாத உடல் மற்றும் மனமும்,எப்போதும் உழைத்து கொண்டிருப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மகர ராசிக்காரர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற சிறந்த பொருளாதார பலன்களை பெறவும், வாழ்வில் முன்னேற்றமடையவும் ஆண்டிற்கு ஒரு முறையேனும் திருவரங்கம் சென்று ஸ்ரீ ரங்கநாதரை வணங்க வேண்டும்.

கும்பம்:

திறமைகள் பல இருந்தாலும் தங்களை சரியாக வெளிப்படுத்தி கொள்ளும் மனமில்லாத கும்ப ராசிக்காரர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகள் வெளிப்பட்டு அதனால் பொருளும், புகழும் ஈட்ட கும்பகோணத்தில் இருக்கும் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

மீனம்:

சுப கிரகமான குரு பகவானின் ஆதிக்கம் மிக்க மீன ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான குணங்கள் அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களின் தர்ம நெறிக்கு பங்கம் ஏற்படாமல் நியாயமான முறையில் வாழ்வில் முன்னேற்றங்களை பெற திருச்சிராப்பள்ளி அருகில் இருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் மீன ராசியினர் நன்மைகளை பெறலாம்.