Sunday, September 27, 2020

உங்கள் எண்ணமே உங்கள் வாழ்க்கை

உங்கள் சிந்தனைக்கு

மனிதக்குலத்தின் மிகப்பெரிய

கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது. நம் எண்ணத்தை மாற்றினால் நம்வாழ்க்கையை மாற்றலாம் என்பதுதான்

மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச்சாதிக்க முடியும் என்பதுதான்

மனிதக்குலவரலாறு

வேளாண்மை முதல் வாட்ஸ்அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது

தான் நம் உள்ளே உள்ள எண்ணமே நம் வாழ்வின்

சகல நிகழ்வுக்கும் விதை

என்கின்றன நவீன

ஆராய்ச்சிகள்

என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள் அதை எப்படி மாற்றுவது என்று கேட்கலாம்

உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களை ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா

உங்கள் படிப்பு, வேலை

காதல், திருமணம், தொழில்

செல்வம், குடும்ப வாழ்க்கை

என அனைத்தையும்

உறுதிப்படுத்துவது உங்கள்

எண்ணங்கள் தான்

ஆம் நண்பர்களே

நாம் எண்ணாத எந்த

செயலும் செயலாக

உருப்பெறுவது இல்லை உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள் உங்களின் ஒவ்வொரு

பெருமை படக்கூடிய

வளர்ச்சிக்கும்

வாழ்க்கைக்கும், உங்கள் எண்ணமும், மனமும் தான் காரணமாய் உள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்

கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப்பாடல் வரியில்

சொல்லிவிட்டார்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.

சித்தர்களை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?

*சித்தர்களை எப்படி வழிபடுவது ?*

*இவர்களை வழிபட மந்திரம்கள் ஏதும் உண்டா?*

*இவர்களை எப்படி குருவாக வழிபடவேண்டும்...*

சிலர் என்னிடம் இப்படி கேட்பது உண்டு ,இதை பற்றி அறிந்து கொள்ளும் முன் நாம் சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டால் எளிமையாக புரிந்து கொள்ளமுடியும் ....

முதலில் *சித்தர்கள்* என்பவர்கள் யார் என்று புரிந்து கொள்ளவேண்டும் ..

இவர்களை பற்றி முகநூலில் பல தகவல்கள் வந்து உள்ளது வந்த படி உள்ளது ,

எளிமையாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால்..

"பிறந்தோம் வளர்ந்தோம் கடமைகளை செய்தோம் வாழ்த்தோம் என்றவர்கள் சாமானி" ,

"எல்லோரை போல நாமும் பிறந்தோம் ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் சில அடையாளம்களோடு வளரவேண்டும் வாழவேண்டும் சில சம்பவம்களை சாதித்து புகழ் பெறவேண்டும் என்றவர்கள் அபிமானி"

"இந்த பூமியை விட்டு செல்லும் முன் சில அறிய தகவல்களை கண்டு அறிந்து உலகிற்கு எடுத்து சொல்லி பதித்து மக்களுக்கு பயன்படும்விதம் செய்யவேண்டும் என்றவர்கள் விஞ்ஞானி" ,

"உலகத்தின் சத் விவரங்கள் ,பிரபஞ்ச ரகசியம்கள் ,தெய்வ ரகசியம்கள் போன்றதை அறிந்தவன் ஞானி"

"தன்னை உணர்ந்து, தன்னுள் எல்லாம் இருப்பதை உணர்ந்து , தானே இறைவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவன் மெய் ஞானி "

சித்தர்களை மெய்ஞானிகள் என்று சொல்லலாம்
அகத்தியர் நூல்களில் சித்தத்தன்மையை பற்றி உரைக்கும் பொழுது மனிதன் சித்தர்களாக மாற பல 10 ஆயிரம் ஜென்மங்கள் கடந்து காய சுத்தி, காய சித்தி பெறவேண்டும் என்கிறார்.

பொதுவாக சித்தம் என்பது மனதின் உச்சப்பட்ட விருப்ப செயல்பாடு /குறிகோள் எனலாம் ,
இது பலபிறவிகளாக நம்மில் கலந்து நம்முடன் வந்தபடி இருக்கும் கர்மம் சார்ந்தது
எனலாம்,

இதை கவனிக்கும் பொழுது முற்பிறவியில் உண்டான அறிவு ,செய்த பூசைகள் பலன் ,அவர்களின் நன்மை /தீமை என்கிற அவர்களின் கர்மா தான் அவர்களுக்கு தற்பொழுது உள்ள பிறப்பில் பட்டம், பதவிகளை தருகிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறது .

உபாசகர்கள் சில நபர்களை பார்க்கும் பொழுது பெருமாளுக்கு மலர் கட்டி அலங்கரித்து அழகு பார்த்த கர்ம பலனால் மனிதர்களை
வசீகரபடுத்தும் பொன்னவனின் பொற்தொழிலை செய்கிறாய் என்பார்கள் ,

சில நபர்களை பார்த்து சுயநலம் இல்லாமல் உன் அறிவால் பலருக்கு நீ
நல்ல தீர்வுகளை தந்தால் இப்பிறவியில் நீதிபதியாக உள்ளாய் என்று சொல்வார்கள் ,

நல்ல கர்மாவால் நல்ல நிலையும் தீய கர்மாவால் வாழ்வில் மேன்மை பெறமுடியாமல் வாழ்வதை நாம் கவனித்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும் ....

சித்தத்தை வென்றவனை சித்தன் என்பார்கள் ,
அது எப்படி சித்தத்தை வெல்வது என்று சிந்தனை செய்தால் சில ரகசியம்
புலப்படும் ,

அது சலிப்பில் உண்டாகிறது ,ஆம் மனதின் வெறுமை தான் சித்தத்தை உணர செய்ய முடியும் .....எப்படி?

 பொதுவாக சித்தர்கள் என்றால் சித்து வேலை செய்பவர்கள் மந்திர தந்திர செயல்களில் கைதேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் என்றும் மனநிலையை மாற்றி மனிதர்களை குழப்பிவிடுவார்கள் என்ற சில மேலோட்டமாக சில கற்பனைகளை மனிதர்களிடத்தில் நாம் காண முடியும்.

இதன் காரணமாக கூட பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணமும் செய்வது உண்டு ,

மேலும் திருநீர் தரித்து சடை முடிகளை விரித்து பரதேசம் சுற்றிவரும் சிவ சிந்தனை நபர்களை முக்கண்ணன், பூச்சாண்டி என்று பிள்ளைகளிடம் கூறி இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தி பால பருவத்திலேயே இப்படி ஒரு பதிவை நம் பெற்றோர்கள்
மனதில் பதித்து விட்டார்கள் என்று சொல்லலாம் .

நான் சிறுவனாக இருந்த பொழுது என் பாட்டியுடன் நான் வெளியில் செல்லும் பொழுது சித்தம் கலங்கிய மனிதர்களை நான் கண்டு பாட்டியிடம் அவர்களை பற்றி கேட்க்கும் பொழுது தப்பு செய்தால் இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்பார்கள் .

கேளிக்கையும் ,பயமும், தவறான நம்பிக்கையும் நம்மிடையே நம் முன்னோர்களால் நமக்கு பதியப்பட்ட காலம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விலக ஆரம்பித்த காலம் ,சித்தர்களை பற்றிய இந்த தகவல் தொலைக்காட்சிகளினால் என்று சொல்லலாம் ,

சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று என்று சொல்ல காரணம் ..
நாம் வாழ்க்கையில் நம்மை நாம் ரசிக்கும் ,அனுபவிக்கும் உணவு /பிரயாணம் /உடை /பேச்சு /களிப்பு கொண்டாட்டம்/காமம் /போதை போன்றதுகள் ஒரு கட்டத்தில் அலுத்து விடும் இப்படி அலுத்துவிட்ட விட்ட மனம் ஒரு வெறுமையில் உழன்று
நிரந்தர இன்பம் எதில் கிடைக்கும் அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும் பொழுது சித்தம் விழித்து கொள்ளும் இது ஒரு புறம்
மறு பார்வை
பழைய புண்ணிய கணக்கில் அருளும் சேரும்பொழுது சித்தம் வேகமாக விழித்து செயல்படும்
சித்தம் விழித்தால் ஏன் பசிக்கிறது என்ற கேள்வியே முதலில் எழும் ,

இவைகளுக்கு விடை தேடினால் சர்வ ஞானமும் புலப்படும்,
ஞானத்தின் துவக்கமே மனதில் இருந்து அடக்குமுறையில்
துவங்குவது,

மனதை அடக்க அடக்க ஆற்றலும் அதிகரித்து புரியாதவைகள் எல்லாம் புலப்பட ஆரம்பம் ஆகும் ...

இப்படி புரியப்பட்ட ஆன்மாக்களே சித்தர்கள் ஆக முதல் படி நிலை எனலாம் .

மனதை அடக்குவது என்பது சாதாரண செயல் இல்லை ,

மொழியினால் அடைபட்டு அவைகளுக்கு கட்டுப்பட்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான் என்று சொல்லலாம் ,

மேலும் வெறுமனையாக மனதை வைத்து இருப்பது சிரமமான காரியும் கூட .

இப்படி மனதை அடக்கி வைத்து இருப்பவர்களை அடைமொழிவைத்து அழைக்கப்பட்டனர் என்று சொல்லவேண்டும் ,

பாம்பாட்டி சித்தர் ,பிண்ணாக்கு ஈசர் ,சிவவாக்கியர் ,தேரையர் ,குதம்பை சித்தர் ,அகத்தியர் என்று அடைமொழியை தான் நம் அறிந்து அழைத்து வழிபடுகிறோம் ,இது இவர்கள் பெற்றோர் வைத்த பெயர் இல்லை ,

இவர்களின் மூலம் யாரும் அறியார் .

இவர்களை குருவாக வணங்குவது என்பதை விட யாரிடம் இவர்கள் நெருங்குவார்கள் என்ற தகவலை அறிந்து கொண்டோம் என்றால் நாம் எளிதாக இவர்களின் ஆசிகளை பெறலாம் .....

இது வசியம் அல்ல .....மந்திரம் அல்ல ....வழிபாட்டு முறையும் அல்ல
..அது என்ன ?

 சித்தர்களுக்களின் மூலத்தை அறியமுடியாது காரண பெயரை தான் நாம் அறிந்து அழைக்கிறோம் ,
மனதை அடக்காமல் மனதின் அற்புதத்தை நாம் அறியமுடியாது ,வயிற்றை அடக்காமல் உடலை அறிய முடியாது
சித்தர்களின் முதல் படி நிலையே உடம்பை அடக்குவது ,

உதாரணமாக உடல் நிலை பாதிப்பு அடைந்தால் மனம் சோர்ந்து
விடும் ,

மனம் சோர்ந்தால் உற்சாகம் போய்விடும்,

உற்சாகம் என்பது உயிர் உணர்ச்சி சார்ந்த நிலை என்பதால் உயிரின் சக்திகள் குறைய துவங்கி மரணத்தை அழைத்து வரும் .

சித்தர்கள் பொறுத்தவரை உடலை வெல்வதை இரண்டாக கொண்டார்கள்
ஒன்று
உடலை கல்ப முறையில் வெல்வது இதை காய சுத்தி ,காய சித்தி என்பார்கள் ,

இரண்டாவது அனுபவித்து வெல்வது இது காயத்தில் ஏற்படும் அவஸ்தைகளை அனுபவித்து வெல்வார்கள் .

இதை தான் சித்தன் போக்கு சிவம் போக்கு என்பார்கள் .

மேலும் சித்தர்களுக்கு காலம் என்பது நிகழ் காலம் மட்டுமே ,
நாளை என்பது மாயை என்பது அவர்கள் கணக்கு ,

இன்று என்ன நடக்க வேண்டுமோ அதன் படிதான் நடக்கும் என்பதும் அப்படி நடந்து முடிக்க தான் பூமிக்கு வருகிறோம் என்பதும் அவர்கள் கணக்கு ,

இந்த கணக்கு அவர்களிடம் வசப்பட்டு எழுத பட்டது தான் சோதிட கணக்கு என்று சொல்லலாம் ,இதில் கைதேர்ந்தவர்கள் அகத்தியர் ,
புலிப்பாணி, புஜேந்தர் போன்றவர்கள் ,

இவர்கள் நூல்கள் தான் இன்று பலருக்கு வழிகாட்டியாக உள்ளது எனலாம் .

சரி

இவர்களை எப்படி வழிபடலாம் என்பதை விட இவர்கள் யாரை தேடி வருவார்கள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

இது ஒரு ஜென்மாந்திர தொடர் கணக்கு எனலாம்,பல ஜென்மங்களில் சித்தர்களின் வாசனை உடையவர்களுக்கு தான் இந்த வாசனையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று உறுதி பட சொல்லமுடியும் .

எல்லோருக்கும் மருத்துவம் புலப்படாது ,

எல்லோருக்கும் சோதிடம் புலப்படாது ,

எல்லோருக்கும் மந்திர ஞானம் ,யந்திர ஞானம்புலப்படாது ,

இந்த மூன்றும் தெய்விக ரகசியமும் தேவர்களின் ரகசியமும் கொண்டது,

எந்த மனிதனுக்கு இந்த ரகசியம்கள் தெய்விகம் சார்ந்தது என்று புலப்படுகிறதோ அவர்களுக்கு சித்தர்களின் ஆசிகள் ஏற்படும் என்பதை
என்னுடைய அனுபவம்களே எனக்கு புரிய வைத்தது என்று சொல்வேன்.

மற்ற ஒரு பார்வை பசியாற்றுதல் ,பிறர் உயிர்களின் பசியை உணர்ந்து உணவு வழங்குதல் எனலாம் .

பொதுவாக நட்புகள் மனிதர்களுக்கிடையே உண்டாவது அவரவர் பழக்கத்தின் விருப்பமே என்று கவனித்து பார்த்தால் புரியும் .

உதாரணமாக விளையாட்டு சிலரின் நட்புகளை துவங்கும் ,
சிலருக்கு மது பழக்கம் நட்பை தரும் ,

சிலருக்கு களிப்பு கொண்டாட்டத்தில் நட்பை தரும்,
சிலருக்கு ஆன்மிகம் நட்பை தரும் ,

சிலருக்கு உணவு பழக்கத்தில் நட்பை தரும் இப்படி ஒரு நபரின் ஆன்மாவில் பதிந்த விருப்பம் பிறரிடம் காணும் பொழுது நட்பை வளர்க்கும்
இது போல சித்தத்தில் சுயநலமில்லாத சேவை துவங்கும் பொழுது விண்மண்டலத்தில் கலந்து உள்ள சித்தர்களின் ஆன்மாக்கள் நம் ஆன்மாவை தொடர்ப்பு கொள்ளும் ,

ஆடு மேய்த்த இடைக்காடர், பிட்சை எடுத்து உண்ட பிராந்தர் , வாயில்லா உயிரினம்கள் மீது பரிவு வைத்தவர்கல் ,
பசுவிற்காக தன் உடலை மறைத்து மூலன் உடலில் புகுந்த சிவயோகி திருமூலர் ,
சீன தேசத்தில் இருந்து குருவுடன் வந்த புலிப்பாணி மருத்துவம் சோதிடத்தில் வல்லவர் ,
இவர் குரு போகர் புலிக்கும் ,சிங்கத்திற்கும் ஞான உபதேசம் செய்தவர் ,

சப்த சமுத்திரத்தை தாண்டி சென்று மூலிகை கொண்டுவந்தவர் ,

கிளி முகத்தை உடைய காலாங்கி நாதரையும் சீடனாக கொண்டவர் .
பறவைகளின்/விலங்குகளின் பால் ,மலம் ,மூத்திரம் ,இவற்றின் இயல்புகளையும் இவைகள் மருந்துகளாக பயன்படுத்தும் விதத்தையும் ,

மேலும் மரம் செடி, கொடி,பூ,இலை,கொட
்டை ,காய் ,கனி முதலியவற்றின் மருத்துவ பயன்களை சொல்லிய தேரையர்,

ரசவாத விதையில் தேர்ந்த வடக்கில் இருந்து வந்து தெற்கில் முருகனின் இருப்பிடத்தில் உறைந்த போகரின் மற்ற ஒரு சீடர் ,மேலும் அகத்தியரின் முதல் சீடர் என்கிற மச்ச முனி .

இருளர் குளத்தில் பிறந்து பாம்புகளின் தன்மை அறிந்து ,பிறகு தன்னுள் இருக்கும் பாம்பை அறிந்த சட்டைமுனி சீடர் பாம்பாட்டி சித்தர் .

முன் ஞானம் நூறு ,பின் ஞானம் நூறு என 200 பாடல்களை கொடுத்த போகரின் மற்ற ஒரு சீடர் சட்டை முனி .

கஞ்சாவை கண்டு அறிந்து அதை மருத்துவத்திற்கு பயன்படுத்தி வயிற்றின் உள்ளே உள்ள உபாதைகளை சரிசெய்யும் கோரக்கர் மூலி என்ற மூலிகையை தந்த மச்சமுனியின் சீடர் கோரக்கர் ,

கொங்கண தேசம் எனும் கேரளத்தில் பிறந்தவரால் கொங்கணர் என்ற போகரால் பெயர் பெற்ற கொங்கணவர் ரசவாதம் செய்வதவரும் அம்பைகையின் ஆசிகளை பெற்றவரும் ஆவர் .

குதம்பை என்கிற மூலிகையை கண்டு அறிந்தவரும் குதம்பை போல உள்ள காதணியை பற்றி பாடியவரும் குதம்பை சித்தர் ,
போலி சாமியார்களை அடையாளம் காட்டியவரும்,

கற்களில் சிலை செய்வதில் ஞானம் உடையவரும் ,கோவில்களில் சிவலிங்க பிரசுதிஷ்டை செய்ய பூசை விதிகளை தந்தவர் கருறார் சித்தர் .

காகத்திற்கும் அன்னத்திற்கும் பிறந்தவர் என்றும் ,
சிவன் சக்தி முருகன் இவர்கள் மூவரும் ஒருவரே என்று சொன்னதும் ,
1008 சீடர்களை உடையவரும் ,
காகம் போல பார்வையும் ,மூக்கும் உடையவர் என்றும்
முருக பெருமானின் அம்சமே என்று அழைக்கப்படும் வைணவ சித்தர் காக புஜேந்தர் .

பேயாக அலையும் மனதை பற்றி 100 பாடல்கள் பாடிய அகப்பேய் சித்தர் ,
அமுக்கனி மூலிகை கண்டு அறிந்து வாத காவியத்தில் சொல்லிய அமுக்கனி சித்தர் ,
பிறப்பால் இஸ்லாமியராக பிறந்து பல மாந்திரிக விவரமக்களை மூலிகையில் தந்த யாக்கோபு என்கிற ராமதேவர் .

புஜண்டரின் மகன் என்று சொல்லப்படும் ரோமா ரிஷி ,
ஆயுர்வேத முறைகளை தந்தவர் என்றும் ,சுசுருத்தர் என்ற வைத்திய மேதையை சீடராக உடையவரும் வாகட நூலில் வல்லவரான தன்வந்திரி சித்தர் ,
இவர்கள் எல்லோராலும் ஆசான் என்று போற்றப்படுபவரும் ,
பொதிகை மலையில் சிரஞ்சீவியாக இருப்பவரும் ,
சிவனை குருவாக கொண்டவரும் ,
நட்சத்திர வடிவில் விண்ணில் இருப்பவரும் ,
ராமபிரானுக்கு ஆதித்திய மகா மந்திரத்தை உபதேசித்தவரும் ,
முருகனை குருவாக ஏற்று தமிழ் சங்கத்தை நிறுவியவரும் ,
"அகத்தியம் என்கிற நிலையால் பசுவாக உருமாறி பல மூலிகைகளை உண்டு அவைகள் என்ன பலன்கள் தருகிறது என்று அறிந்து பிறகு சுவடிகளில் பதித்து மனிதர்களுக்கு மிக பெரிய மருத்துவ மூலிகைகளை தகவல்களை தந்த
குறு முனி ,குட முனி,கும்ப முனி என்று பெயர் பெற்ற அகத்திய முனி "

(இவர் பசுவாக மாறி எந்த மூலிகை நஞ்சை முறிக்கிறது அறிய எல்லா 
தாவரம்களையும் உண்டு அது படி அறிந்த மூலிகை தான் இன்று நாம் உண்ணுவதும் பசுக்களுக்கு கொடுக்கப்படும் அகத்திக்கீரை )

*சித்தர்களை முறையாக வழிபட்டால்*

*சித்தர்கள் தானாக வாசம் செய்வார்கள்.....*

*🚩சர்வம் சிவமயம்🚩*

Saturday, September 26, 2020

துன்பம் அதுதான் அனைத்து இன்பங்களுக்கும் காரணம்

*பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும்...!*

வாழ்க்கை என்பது நீண்ட பயணம் என்று சொல்வார்கள். 
ஒரு நதி தன் வழியே போய்க் கொண்டே இருப்பது போல, உயிர்கள் அனைத்தும் வாழ்க்கை எனும் வழியிலே போய்க் கொண்டே இருக்கின்றன. 

கணக்கற்ற பிறவிகள் மூலமாக இப்பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பயணம் முழுவதும் இன்பமும், துன்பமும் பலவாறு மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன. 

பெரும்பாலும் எல்லோரும் சொல்வது என்னவெனில் ''துன்பமே வாழ்வாக வடிவெடுத்து வந்ததோ'' என்றுதான். அதற்குக் காரணம் இன்பமே இயல்பாகவுடைய நாம் அதை அறியாமல் அதனின்று விலகி துன்ப வழியில் பயணிப்பதினால்தான். 

எனினும் அத்துன்பத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமே நம் உண்மை இயல்பை நாம் உணர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இன்பத்தினின்று நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை. 

தேன் குடித்த வண்டு போல ஆகி, அதிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால், துன்பம் அவ்வாறல்ல. அதிலிருந்து விடுபட்டு நம் உண்மை இயல்பை நாம் அடைவதற்கு தூண்டு கோலாக அது அமைகிறது.

துன்பத்தை நமக்குத் தருபவர்கள் யார் ? 

அவர்களை நாம் துஷ்டர்கள், கொடியவர்கள் என்று சொல்கிறோம். அத்தகைய கொடியவர்கள் இல்லாமல் இருந்தால் பூமி சுபீட்சமாகவும், இன்பமயமானதாகவும் இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். 

ஆனால், நாம் திருந்தி வாழவோ அல்லது தீய வழியில் செல்லாமல் இருக்கவோ இந்த தீயவர்களே நமக்கு குறிகாட்டியாக இருக்கிறார்கள். 

இவர்களைப் பார்த்துதான் நாம் நம்மை தற்காத்துக் கொள்கிறோம். எல்லாம் இறை சொரூபமே என்கிற பொழுது இந்தக் கொடியவர்கள் யார் ? என்று பார்த்தால், அவர்களும் பரம்பொருளே. உலக நடைமுறைக்கு நல்லோர்களும், தீயோர்களும் வெவ்வேறு விதங்களில் உதவி புரிகின்றனர். 

நல்லோர்களாக வடிவெடுத்து விளையாடுவதும், தீயோர்களாக வடிவெடுத்து விளையாடுவதும் பரம்பொருளே. இதையே கூத்து என்றும் திருவிளையாடல் என்றும் சொல்கிறோம்.

நாம் உண்மையை உணர்வதற்குப் பரம்பொருளே இரண்டு விதங்களில் உதவி புரிகிறார். நல்லோர் மூலமாக புரியும் உதவி அனுக்ரகம் எனப்படுகிறது. தீயோர் மூலம் மறைமுகமாகப் புரியும் உதவி விக்கினம் எனப்படும். 

நம்மைப் பண்படுத்துவதற்கு அனுக்ரகம், விக்கினம் இரண்டுமே இன்றியமையாதவைகள்தாம்., வெவ்வேறு படித்தரங்களில் ஜீவாத்மன் வெவ்வேறு விதங்களில் பண்பாடு அடைகின்றான். அதற்கு நல்லவர்களும், கெட்டவர்களும் தத்தம் போக்கில் உதவியாக இருந்து வந்துள்ளனர். 

விவேகம் எனும் ஞானத்தைப் பெற்ற யோகிக்குத்தான் இவ்வுண்மை அறிவில் புலப்படுகிறது. அவன்தான் தன் பழைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறான். பரம்பொருளே நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் வடிவெடுத்து வந்து நன்மை, தீமைகள் வாயிலாக தம்மைப் பக்குவப்படுத்தினார் என்பதை உணர்ந்து கொள்கிறான்.

கல், புல், பூடு நிலையிலிருந்து இந்த மனிதப் பிறவியை மனிதன் அடைவதற்கு மனிதன் எடுத்துள்ள ஜென்மங்கள் எண்ணிக்கையில் அடங்காதது. மனிதப் பிறவியிலும் இத் துன்பம் தொடர்கிறது. துன்பத்தில் உழன்று வருந்திக் கொண்டிருக்கும் ஒருவன் பல வேளைகளில் அத் துன்பத்திற்கான ஆதியையோ, அந்தத்தையோ அறியாமல் இருக்கிறான். 

துன்பப்படுகிறோம் என்பதை மட்டுமே ஓரளவு அறிந்து கொள்கிறான். இந்நிலையையே சான்றோர் மருள்நிலை என்பர். மனிதன் படுகின்ற துன்பங்கள் அனைத்திற்கும் மூலக் காரணம் மருள் நிலையென்றும், இருள் நிலையென்றும் சொல்லப்படும் அஞ்ஞானமேயாகும். 

தாங்க முடியாத அளவு துன்பங்கள் தொடரும் பொழுதுதான் மனிதன் அதிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று யோசிக்கிறான். தான் கொண்டுள்ள பற்றுகளே இவையனைத்துக்கும் காரணமாக இருக்கிறது என்பதை உணர்கிறான். தான் நுகர்கின்ற இன்பங்களனைத்தும் பிறகு துன்பங்களாக வடிவெடுப்பது புரிய வருகிறது.

பிரபஞ்ச இன்பம் என்பது வெறும் மயக்கமே. உண்மை இன்பம் இதுவல்ல. இந்த தேகமும் அழியக் கூடியது. என்றெல்லாம் தான் கொண்டுள்ள ஒவ்வொரு பற்றுகளையும், அதன் கேடுகளையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு அவன் உள்ளத்தில் அருள் தாகம் ஏற்படுகிறது. 

தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரைத் தேடி மனிதன் செல்வது போல, அருள் தாகம் ஏற்படும் அளவிற்கு மனிதன் பரம்பொருளைத் தேடி அலைகிறான். தாகத்தால் வருந்தியவன் நீர் நிலையைத் தேடி அடைந்து நீரைப் பருகி திருப்தி அடைவது போல, அருள் தாகம் கொண்ட மனிதனின் நாட்டத்திற்கு ஏற்ப பரம்பொருளின் அருள் சுரக்கிறது. 

அங்ஙனம் அருள் தாகம் நிறைவேறப் பெறுவதே வீடுபேறு ஆகும். மானுடப் பிறவியின் நோக்கமும் அதுவே. எனவே துன்பம் முற்றிவிடும் பொழுது அதனின்று விலகி ஓட வேண்டும் என்று எண்ணுவது போல, இன்பத்தினின்றும் விலகி விட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டால் மனிதன் பற்றுகளை விலக்கியவனாகி விடுவான். 

பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும். தன் உள்ளத்திலேயே துன்பமற்ற ஆனந்தம் வந்து குடி புகுந்த பின்பு வேறென்ன வேண்டியதிருக்கிறது. கவனித்துப் பார்த்தால் இத்தகைய முழுமையான நிலையை அடைவதற்குக் காரணமாக அமைவது துன்பங்களே என்பது புரிய வரும்.

*பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும்...!*

*ஓம் நமச்சிவாய..!*

ராம நாமமே விலைமதிப்பற்றது

🌹ராமநாமத்திற்கு விலை மதிப்பே கிடையாது🌹

🌹 ஆஞ்சநேயர் உச்சரித்த ராமநாமத்திற்கு விலை மதிப்பே கிடையாது.🌹

🌹 கபீர்தாசரின் மகன் கமலதாஸ் ஒரு பஜனைக்குச் சென்றார். அவர் ஸ்ரீராமனைப் புகழும் ஏராளமான பஜனைப் பாடல்களைப் பாடினார். இதைக் கேட்ட வணிகர் ஒருவர், மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க நினைத்தார். கமலதாசிடம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால், அவருக்கே தெரியாமல், அவரது மேல்துண்டில், தான் அணிந்திருந்த மோதிரத்தை கட்டி விட்டார்.
வீட்டுக்கு வந்த மகனைக் கபீர்தாசர் கடிந்து கொண்டார்.
""அப்பா! நான் அப்படிப்பட்டவனா? இது எப்படி வந்தது என்றே எனக்கு தெரியாது. ஆனாலும், யாரோ ஒருவர் அன்பளிப்பு அளிக்கும் அளவுக்கு என் பஜனை இருந்துள்ளது என்பதற்காக நீங்கள் பெருமைப்படலாம் அல்லவா!'' என்றார் கமலதாஸ்.
""மகனே! அதற்காக இல்லை! கேவலம்...ஒரு மோதிரத்துக்காக விலை மதிப்பற்ற ராமநாமத்தை விற்றுவிட்டாயோ என்று தவறாக நினைத்து விட்டேன்,'' என்றாராம் கபீர்தாசர்.
எல்லையில்லா மகிமையுள்ள ராமநாமமே, ஆஞ்சநேயருக்கு அனைவர் மனதிலும் நீங்கா இடத்தைத் தந்துள்ளது.

Friday, September 25, 2020

நாரதரின் கர்வம்

நாரதரின் கர்வம்

ஒரு சமயம் நாரதர், 

சிவபெருமானை குறித்து வெகு காலம் தவம் புரிந்தார். 

நாரதரின் தவத்தைக் கலைத்து அவர்  நோக்கம் நிறைவேறத் தடை செய்ய விரும்பினான் இந்திரன். 

அழகில் சிறந்த  அப்சரசுகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து நாரதரிடம் சென்று அவர் தவத்தைக் கலைக்குமாறு அனுப்பி வைத்தான்.

தேவ மங்கையரும், நாரதர் தவம் செய்யுமிடத்தை அடைந்து அவர் முன்பு ஆடிப்பாடிப் பலவிதங்களிலும் அவர்  உள்ளத்தைத் தங்கள்பால் திருப்ப முயன்றனர். 

நாரதர் தம் உள்ளத்தில் பரமசிவனைத் தியானித்து ஒருமித்த சிந்தையுடன் தவம் செய்து வந்ததால் அவரிடம் அப்சரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. 

ஆடி ஆடி முடிவில் அவர்கள் களைத்துப்போய் இந்திரலோகம் திரும்பினர்.

நாரதரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்து அவர் விரும்பிய வரத்தை அளித்தார். 

மகிழ்ச்சியோடு திரும்பிய நாரதர், தாம் தவத்தில் ஈடுபட்டிருக்கையில் இந்திரன் அப்சரசுகளை அனுப்பித் தவத்தைக் கலைக்குமாறு செய்த முயற்சி பலிக்காமல் போனதை நினைத்து கர்வம் கொண்டார்.  

தாம் காமனை வென்றுவிட்டதாக ஓர் எண்ணம் உண்டாயிற்று.

பிரம்மலோகம் சென்ற நாரதர், இந்திரன் தம்மிடம் தோல்வியுற்றதைச் பிரம்மாவிடம் பெருமையாக எடுத்துச் சொல்லி, தாம் காமத்தை, ஜெயித்துவிட்டதாகக் கூறினார். 

அதைக் கேட்ட பிரம்மன், நாரதரின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிவபெருமானின் அனுக்கிரகமே என்று கூறினார். 

நாரதர் அதை ஏற்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு நேராக வைகுந்தத்தை அடைந்தார். 

ஸ்ரீ விஷ்ணுபெருமானிடமும் அவர் தம் பெருமையைக் கூறிக் கொண்டார். 

மகாவிஷ்ணுவும் பிரம்மதேவனைப் போலவே, ’சிவபெருமானின் அனுக்கிரகமே அப்சரசுகள் தோல்வியுற்றுத் திரும்பக் காரணம் என்பதை நாரதரிடம் எடுத்துக் கூறினார். 

நாரதரோ தம் சொந்த முயற்சியாலேயே காமத்தை வென்றதாகக் கூறினார்.

நாரதரின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் கர்வத்தை திருத்த விரும்பினார் மகாவிஷ்ணு. 

ஸ்ரீபுரத்தில் இருக்கும் 

அம்பரீஷ சக்கரவர்த்தி தம் குமாரத்தி ஸ்ரீமதிக்கு விவாகம் செய்ய சுவயம்வரத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

மகாவிஷ்ணு நாரதரைப் பார்த்து, நாரதா, உனக்கு விஷயம் தெரியுமா? ஸ்ரீபுரத்து அரசன் தன் குமாரத்திக்கு விவாகம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறானாமே?" என்று கேட்டார்.

நாரதருக்குப் பூலோகம் செல்ல விருப்பம் உண்டாகியது. நாராயணனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட அவர், ஸ்ரீபுரத்திலுள்ள அரண்மனையை அடைந்தார். 

அரச குமாரத்தி ஸ்ரீமதியின் அழகு வடிவத்தைக் கண்டதும் அவர் உள்ளம் சலனம் கொண்டது. 

அரசகுமாரியைத் தாமே மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது, . 

அரசனை அழைத்து அவன் குமாரத்தியைத் தமக்கு மணம் செய்து கொடுக்குமாறு கேட்டார். 

மகரிஷி, தங்களுக்கு என் பெண்ணைக் கொடுப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால்..." என்று இழுத்தான் அரசன்.

பின் ஏன் இந்தத் தயக்கம்!" என்று கேட்டார் நாரதர். என் குமாரத்தியோ ஹரியையே மணப்பேன் என்று பிடிவாதம் கொண்டிருக்கிறாளே!..."

அரசனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் நாரதரின் உற்சாகம் அடங்கி விட்டது. அடுத்த கணமே அவருக்கு ஓர் யோசனை தோன்றியது. 

ஸ்ரீமதியின் விருப்பத்தைக் கெடுப்பானேன். இதோ விரைவிலேயே வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வைகுந்தத்துக்கு ஓடினார் நாரதர். 

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த நாரதரைக் கண்டதும் நாரயணன் வியப்போடு, நாரதா, என்ன விஷயம் ? ஏன் இந்தப் பரபரப்பு ?" எனறு கேட்டார்.

பிரபோ, எனக்கொரு வரம் தரவேண்டும். தாமதிக்கக் கூடாது?" என்று வேண்டினார் நாரதர். 

என்ன வரம் வேண்டும், நாரதா?" என்று ஒன்றுமே தெரியாதவர் போலக் கேட்டார் நாராயணன்.

பிரபோ, நான் நினைக்கும் நேரத்தில் யார் என்னைப் பார்த்தாலும் ஹரியின் முகமாக என் முகம் தோற்றம் அளிக்க வேண்டும்" என்று வேண்டினார் நாரதர். 

எதற்கு இந்த வரம்?..." என்று கேட்டார் நாராயணன்.

நின்று சொல்ல நேரமில்லை, பிரபோ. பூலோகத்திலே முக்கிய காரியம் ஒன்றிருக்கிறது. முடித்துக் கொண்டு வருகிறேன். வந்ததும் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்"  என்று சொல்லிவிட்டு ஓட்டமாக ஓடினார் நாரதர்.

பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு போய் வா, நாரதா?" என்றார் நாராயணன். 

ஸ்ரீபுரத்தை அடைந்ததும் நாரதர் நேராக அரசனிடம் சென்றார். நாளைக்கே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் உங்கள் மகள் கண்டிப்பாக சம்மதிப்பாள்" என்றார்.

அரசனோ தயங்கியபடி,

வைகுந்தவாசனைத் தவிர வேறு எவரையும் மாலையிடுவதில்லை என ஸ்ரீமதி உறுதி கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன் என்றார்.

."கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்.

நாளை ஸ்ரீமதி எனக்குத் தான் மாலையிடுவாள்" என்றார் நாரதர்.

அரசன் தன் மகளை அழைத்தார்.  அவளுடைய சம்மதம் பெற எண்ணினார்.

அவள் வரும்போது தம்முடைய முகம் ஹரியின் முகமாகத் தோன்ற வேண்டுமென நாரதர் வேண்டிக் கொள்ள, .

உள்ளே நுழைந்த ஸ்ரீமதியின் பார்வை நாரதர் பக்கம் திரும்பியது. அவள் அலறிக்கொண்டு தந்தையிடம் ஓடிவந்தாள். 

அப்பா, அவரைப் பாருங்கள்!..." என்று ஸ்ரீமதி, நாரதரின் பக்கம் கையைக் காட்டினாள். 

அனைவரின் பார்வையும் நாரதர் பக்கம் திரும்பியது. நாரதரின் முகம் குரங்கு முகமாகத் தோற்றமளிப்பதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் சிரிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு அரசனைக் கேட்டார். 

மகரிஷி, தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். விஷயம் புரியும்" என்றான் அரசன்.

கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்க்கும்போதுதான் நாரதருக்கு உண்மை வெளிப்பட்டது. 

ஹரி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருள் உண்டு. ஹரியின் முகமாகத் தோன்றுவதற்கு பதிலாகக் குரங்கு முகமாகத் தோற்றமளிக்கச் செய்து நாராயணன் தம்மை ஏமாற்றிவிட்டார் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். 

நாராயணன் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் உண்டாயிற்று. நேராக வைகுந்தத்துக்கு ஓடினார்.

அங்கே அவரைத் திடுக்கிட வைக்கக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்திருந்தது. 

எந்த ஸ்ரீமதியை மணக்க விரும்பியிருந்தாரோ அவள் நாராயணன் மடிமீது மணக் கோலத்தோடு அமர்ந்திருக்கக் கண்டார். அவர் ஆத்திரம் பன்மடங்காகிவிட்டது.

பிரபோ, என்னை ஏமாற்றி விட்டீர்கள். அந்தப் பாபம் உம்மைச் சும்மா விடாது. நீங்களும் மனிதனாகப் பிறந்து உங்கள் மனைவியும் பிறன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டு இழந்து வருந்துவீர்கள். உங்களுக்கு உதவ வானரங்களையே நாடுவீர்கள்" என்று சபித்தார்.

நாராயணன் புன்சிரிப்போடு நாரதரின் சாபத்தை ஏற்றுக் கொண்டு, நாரதா, பூலோகத்தில் என் காரியம் நிறைவேற உன் சாபம் தேவை. அதிருக்கட்டும், முற்றும் துறந்த முனிவனான உனக்கு ஏன் திருமணத்தில் விருப்பம் ஏற்பட்டது? காமத்தை ஜெயித்த நீயா இவ்விதம் அடிமையாக நிற்பது?" என்று கேட்டார்.

அப்போதுதான் இது நாராயணன் திருவிளையாடல் என்பதை உணர்ந்த நாரதர் தம் தவறுக்கு வருந்தி ஸ்ரீ பெரிய பெருமாளை சரணடைந்தார்.

வராகி தேவியை வழிபடும் முறை



🌹வாராகி வழிபாட்டு பூஜை முறைகள்🌹
  
வாராகி வழிபாட்டு பூஜை முறைகள்
வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள்.

வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள். வாராகி பற்றி ஒருசில பக்தர்கள் கோபநிலை, அதிகம் உக்ரம் பெருகுதல், ஏவல் தெய்வம் இப்படி எல்லாம் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன். உண்மை என்னவென்றால் வாராகி அன்புக்கு குழந்தை. அவளுக்கு உரிய இலக்கணம் நம்மிடத்தில் இருந்தால் இவ்வுலகமில்லை. ஏழு லோகத்திலும் அவரை

வாராகி ஏவல் தெய்வம் என்று பலர் கூறகேட்டேன். அது உண்மை இல்லை. ஏவல், பில்லி எனும் கெட்ட சக்திகளை அழிக்கவே அன்னை அவதாரம். ‘‘பெற்ற பிள்ளைக்கு இவ்வுலகில் கெடுதல் செய்யும் தாய் உண்டோ?’’, பூலோகம் காக்க அவதரித்த தாய் அதை அழிப்பாளா? அவள் அழிக்க பிறந்தது, அதர்மத்தை மகா சத்ருகளை ஏவல், ஏவி விடும் சத்ருகளை மட்டுமே. ஆக நீங்கள் அன்னையை கவலை இன்றி வழிபடலாம்.

 
வாராகி வழிபாடு முறைகள் :

1. வாராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கி றோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும்.
3. வழிபாட்டிற்கு அன்னையின் படம், அல் லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபாடு செய்யலாம், நாம் வடக்கு, மேற்கு நோக்கி அமரலாம்.
4. காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்லம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும்.
5. பூஜை அறையில் அன்னை படத்தை வைப்பதை காட்டிலும் தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.
6. அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை, அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்து கொள்வது நலம்.
7. தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
8. வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
9. பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்துவது நலம்.
10. தர்பை பாய், அல்லது கம்பளி போர்வை ஆசனத்திற்கு பயன்படுத்த நலம்.
11. சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
12. சாம்பிராணி புகையில், வெண்கடுகு, வெள்ளை குங்கிலியம் சேர்த்து போடுவது சிறப்பு.
13. வாராகி அன்னை படம், விநாயகர் படம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும்.

பூஜை முறை :

1. பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
2. முதலில் குருவை- மானசீகமாக வழிபாடு செய்து “குருவடி சரணம் திருவடிசரணம்” என்று 9 முறை கூறவும்.
3. பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை விநாயகாய நம என கூறி அர்ச்சிக்க வேண்டும்.
4. விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.
5. வாராகி அன்னையை துளசி, வில்லம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து “வாராகி மூல மந்திரம் மற்றும் “வாராகி மாலை” பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.
6. பூஜையில் அமர்ந்த பின் எழக் கூடாது.
7. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபஆராதனை காண்பித்து வாராகி தேவி பாதம் பணிந்தேன் என கூறி பணிந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.
8. பஞ்சமி, அம்மாவாசை அன்று, ஒரு ஐந்து நபருக்கு உணவளித்தால் நலம்.
9. கீழே விழுந்து வணங்கிய பிறகு, சங்கு நாதம் ஒலிக்க வேண்டும், அல்லது மணி இசைத்து மீண்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
10-. பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
11. கண்டிப்பாக நேரம் தவறக்கூடாது, ஆரம்ப நாளில் எந்த நாளில் நேரத்தில் செய்தீர்களோ அதே நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
12. ஒருவேளை வெளியூர் சென்றால் ஒரு அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த எளிமையான வழி பாட்டை அனைவரும் செய்து அன்னையின் அருளை பெறலாம்.
13. அன்னையின் கோடிக்கணக்கான மந்திரமும், இந்த வாராகி மாலை ஒன்றுக்கு சமம். ஆக இதே ‘பாமாலை’ சக்தி எண்ணிலடங்கா இது ஒன்றே பூஜைக்கு போதுமானது.

Thursday, September 24, 2020

வள்ளலார் தனி சிறப்பு

*#வள்ளலாரின்_தனிச்சிறப்பு*

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

காவி ஆடை உடுத்த மாட்டார்.

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

உடம்பில் எந்த மத அடையாளங்களை அணிந்து கொள்ள மாட்டார்.

ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாசனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாஸ்த்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றவர்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..

தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.

கடவுளைத்தேடி காடு, மலை, குகை,
குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர். 

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

மூச்சி பயிற்சி, வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.

தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.

உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.

ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார் , தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.

ஒளி வழிப்பாட்டிற்காக
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.

மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .
செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் வாழ்ந்த மண்ணில் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதில்தான் எத்தனை எத்தனை பெருமைகள்

அருட்பெருஞ்ஜோதி! 
அருட்பெருஞ்ஜோதி! தனிபெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி!