திருப்பட்டூர்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே ‘விதி இருப்பின்’ மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மையாகும்.
திருப்பட்டூர் வரலாறு:
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.
படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன் ”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.
படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.
மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
”என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
திருவிழா: இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.
சிறப்பு :
பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.
சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம்.
இந்த அமைப்பு மிக விசேஷமானது.
திறக்கும் நேரம் : காலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை 6- மதியம் 12.30 மணி.
பொது தகவல் : இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது. பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.
சங்க காலப் பாடல்களில் இத்திருக்கோயில் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நக்கீரனார் தம்முடைய 395வது புறநானூறு பாடலில் இக்கோயிலில் உறையும் சாஸ்தாவைப் புகழ்கிறார். சேக்கிழார் பெருமான் பெரிய புராண பாடலை தில்லையம்பலத்தில் தொடங்கி திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூரில் முடித்ததாக வரலாறு.
அமைப்பு:
இக்கோயிலின் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள மற்ற அய்யனார் கோயில்களிலிருந்து மாறுபட்டு உள்ளது. ராஜகோபுர வாசலிலிருந்து கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் தென்படுவது பலி பீடமும், கல் யானையும்.
கல் யானைக்கு இடது புறமும், வலது புறமும் அதாவது தெற்கிலும் வடக்கிலும் கோயிலின் உள்ளே செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்க்கில் வடக்கு பார்த்து காளியம்மன் என்கிற நருவிழியம்பாள் எனும் வன மாதா மகா மண்டபத்தில் விதானம் யந்த்ர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு உடலில் புதிய ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் வழியில் பிரதட்சிண மண்டபம் அமைந்துள்ளது.
பூர்ண புஷ்கலா தேவியரோடு அய்யனார் இடது கையில் ஓலை சுவடியும். வலது கையை முழங்கால் மீது வைத்தும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அய்யனார் சிரசிலும் மார்பிலும் மணிக்கட்டிலும் ருத்ராட்சம் அணிந்து சிவ ஸ்வரூபமாக உள்ளார்.
புராண வரலாறு: திருக்கயிலாயத்தில் சேரமான் பெருமாள் நாயனாரால் சிவபெருமானைப் போற்றி ”ஞான உலா எனும் பாடல் பாடப்பட்டது. அதை பூவுலகிற்கு தந்தருள்வதற்காக அய்யனார் திருவுளங்கொண்டு எழுந்தருளிய திருத்தலம் இது. எனவே அரங்கேற்ற அய்யனார் என்ற பெயர் பெற்றார். ”ஞான உலா பாடல் அரங்கேறிய 18 கால் கல் மண்டபம் இன்றும் உள்ளது.
ஏழாம் தேதி பிறந்தவரா?
ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.
சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன் ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.
ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
பிரார்த்தனை:
குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம், மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குரு பெயர்ச்சி அன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
நேர்த்திக்கடன்
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு :
வித்தியாசமான அமைப்பு:
”குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு;
குருர் தேவோ மகேச்வர;
குரு சாக்ஷ?த் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ’
என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
முருகன் வணங்கிய சிவன்:
முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் ‘திருப்படையூர்’ எனப்பட்ட தலம் ‘திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.
எல்லாமே மஞ்சள் நிறம்
பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால் பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.
பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர் கந்தபுரீஸ்வரர் பாதாள ஈஸ்வரர் தாயுமானவர் மண்டூகநாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாசலேஸ்வரர் கைலாசநாதர் ஜம்புகேஸ்வரர் காளத்தீஸ்வரர் சப்தரிஷீஸ்வரர் தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.
பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா.
எனவே வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள். என்பது ஐதீகம்.அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.
உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும்.
பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.
முகவரி: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்-
பின்...621 105. திருச்சி மாவட்டம்.
No comments:
Post a Comment