எப்படி ஜபிக்க வேண்டும்?
ருத்திராட்சம், துளசி, ஸ்படிகம், மிளகு, தாமரை விதை ஆகியவற்றாலான ஜப மாலையைப் பயன்படுத்தி ஜபம் செய்வார்கள். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்தி நகர்த்தவேண்டும்.
* 108 மணிகள் கொண்ட மாலையைப் பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72,000 நாடிகள் இணைவதால், அந்தப் பகுதியைத் தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் என்பார்கள் பெரியோர்கள்.
* ஜபிக்கும்போது, `கிருஷ்ண மணி' எனப்படும் 109-வது மணியைத் தாண்டக்கூடாது. மீண்டும் ஜபித்த வழியே மாலையைத் திருப்பி ஜபிக்கவேண்டும்.
* வெறும் தரையில் அமர்ந்து ஜபம் செய்யக்கூடாது. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துண்டின் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து, அதன் மீது அமர்ந்து ஜபம் செய்யவும்.
* ஜபிக்கும்போது, ஜப மாலை வெளியே தெரியாதபடி ஒரு துணியால் மூடியபடியோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து, அதன் உள்பகுதியிலோ வைத்து ஜபிக்கவேண்டும்.
* மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் - அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்திடம் நிலைநிறுத்தி, உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.
* தீட்சை பெற்ற மந்திரத்தைச் சத்தமாகச் சொல்லக்கூடாது. உதடுகள் அசையக்கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும்.
* குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தைச் சத்தமாக ஜபிப்பது, வெளிநபர்களுக்குக் கூறுவது, எழுதிவைப்பது ஆகியன, மந்திர யோகத்துக்கு எதிரானவை.
* வீட்டில் அமர்ந்து ஜபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜபம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜபித்தால் 1000 மடங்கும், மலை மீது அமர்ந்து ஜபித்தால் 10,000 மடங்கு பலனும் கிடைக்கும்.
* திருக்கோயிலில் அமர்ந்து ஜபம் செய்தால், லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாதக்கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜபம் செய்தால், கோடி மடங்கு பலன் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
* சந்தியா காலமாகிய சூரிய உதயம் மற்றும் அஸ்தமன வேளையில் ஜபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும்.
* மந்திர ஜபம் செய்து வருபவர்கள், எளிமையாக ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், மெல்லிய ஆடைகளை அணிவதும் சிறப்பு.
* மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஞான மந்திரங்களை வடக்கு நோக்கியும், இல்வாழ்வுக்கு உரியவற்றைக் கிழக்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு.
* மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்கவேண்டும். வீட்டில் வைத்து ஜபிப்பதாக இருந்தால், பூஜையறையில் வைத்து ஜபிக்கலாம்.
* ஜபிக்கும்போது, அறையில் தூப மணம் நிறைந்திருப்பது சிறப்பு. சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷண சக்தி உள்ளதால், சாம்பிராணி தூபம் உபயோகிப்பது மிகவும் சிறப்பானது.
* பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி ஆகிய தினங்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர ஜபத்துக்குச் சிறப்பான நாள்களாகும். அனுதினமும் ஜபிக்க இயலாத அன்பர்கள், இதுபோன்ற விசேஷ தினங்களில் இறை நாமங்களை ஜபித்து திருவருள் பெறலாம்.
* மந்திர ஜபத்துக்குமுன், விநாயகரை தியானித்து வழிபட்டு, ஜப வழிபாட்டுக்கு எவ்விதத் தடங்கலும் நேராமல் காத்தருளும்படி வேண்டிக்கொண்டு, ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம்.
* மந்திரத்துக்கு உரிய தெய்வத்துக்கு மலர், தூப-தீப, நைவேத்திய ஆராதனைகளைச் செய்தபிறகு, மந்திரங்களை உருக்கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். உரிய எண்ணிக்கையில் உருக் கொடுத்த (ஜபம் செய்த) பிறகு கற்பூர ஆரத்தி காட்டிப் பூஜையை நிறைவு செய்யவேண்டும். ஜபிக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக்கொள்ள, உரிய ஜப மாலையை உபயோகிக்கலாம்.
* மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜபிப்பதே சிறப்பானதாகும். தகுந்த குருநாதரால் மட்டுமே, ஜபம், தியானம் குறித்துச் சரியான வழிகாட்டலை வழங்கமுடியும்.
-
No comments:
Post a Comment